Home /News /entertainment /

காலத்தால் அழியாத பாடல்களை தந்த கவி கா.மு.ஷெரீப்

காலத்தால் அழியாத பாடல்களை தந்த கவி கா.மு.ஷெரீப்

கா.மு.ஷெரீப் மற்றும் கருணாநிதி

கா.மு.ஷெரீப் மற்றும் கருணாநிதி

தத்துவப் பாடல்களை எழுதுவதில் கண்ணதாசனுக்கு முன்னோடி கா.மு.ஷெரீப் என்பது அவரது பாடல்களை கேட்டாலே தெரியும். "இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப்.

  • News18
  • Last Updated :
கா.மு.ஷெரீப் என்றால் தெரியாதவர்களுக்குக்கூட அவர் எழுதிய பாடல்கள் தெரியும். அன்று பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த, முதலாளி படத்தின் பாடலான, 'ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே... ' திரைப்பாடல் கா.மு.ஷெரீப் எழுதியது. இதுபோல் நூறுக்கும் மேற்பட்ட பண்பட்ட பாடல்களை திரையிசைக்கு தந்தவர்.

கா.மு.ஷெரீப் 1914 ம் வருடம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திருவாரூர் கொரடாச்சேரி அருகிலுள்ள அபிவிருத்தீஷ்வரத்தில் பிறந்தார். அப்பா காதர்ஷா இராவுத்தர், அம்மா இப்ராஹிம் பாத்து அம்மாள். தனது 14 வது வயதில் தந்தை மரணிக்கும்வரை தனியாக ஆசிரியர் வைத்து தமிழ் கற்றுக் கொண்டார். 1933 இல் அவரது முதல் கவிதை பெரியாரின் குடியரசு இதழில் வெளியானது. திராவிட இயக்கத்தின் மீது ஆழ்ந்த பிடிப்புக் கொண்டிருந்தவர் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது மனதிற்கு நெருக்கமாக விளங்கினார்.

கருணாநிதி அவர்கள் பராசக்திக்கு வசனம் எழுதுவதற்கு முன்பு கா.மு.ஷெரீப் அவரது தமிழர்வத்தை கண்டு அப்போது தான் நடத்தி வந்த ஒளி பத்திரிகையில் அவரை எழுத வைத்தார். அந்த காலகட்டத்தில் கா.மு.ஷெரீப் சேலம் மாடர்ன் தியேட்டர்சில் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியராக இருந்தார். அவர் மூலமே கருணாநிதி அவர்கள் திரையுலக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக கூறுவர்.

கா.மு.ஷெரீப் பன்முகக் கலைஞர். சிறுகதைகள், நாவல்கள், சமய நெறி மற்றும் தமிழ் சார்ந்த நூல்கள் என ஏராளம் எழுதியுள்ளார். பத்திரிகை, பதிப்பகம் நடத்தினார். இளைஞனாக இருந்த போது காங்கிரஸில் ஈடுபாடு கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இன்று திரையிசைப் பாடல்கள் வழியாக அவர் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார். அவரைக் குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இவ்வாறு எழுதியுள்ளார்...

'இலக்கியத்தைப் போல, திரைப்படப் பாடல்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. ஆனால், அந்தப் பாடல்களும் கூட, இலக்கியத்துக்கு நிகராக நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக கவி.கா.மு.ஷெரீப் அவர்களின் பாடல்கள் உண்டு. இன்றைக்கும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’ என்கின்ற பாடலைக் கிராமப் புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக்கேட்டு, அவர்கள் அந்தப் பாட்டிலே, ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப்படைந்திருக்கிறேன்...'

கா.மு.ஷெரீப் எழுதிய முக்கியமான திரையிசைப் பாடல்களைப் பட்டியலிட்டாலே அவை பல பக்கங்கள் வரும். அவரது பாடல்கள் எளிமையும், கருத்துச் செறிவும் கொண்டவை. அவரது பாடல்களில் சில...

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை... அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை.... சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா... உலவும் தென்றல் காற்றினிலே... வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா... பணம் பந்தியிலே குணம் குப்பையிலே... பொன்னான வாழ்வு மண்ணாகிப் போகுமா... நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்... வாராய் நீ வாராய்...
திருவிளையாடல் படத்தில் வரும், 'பாட்டும் நானே பாவமும் நானே....' கா.மு.ஷெரீப் எழுதியது. இதனை சிவலீலா என்ற படத்துக்காக எழுதினார். அப்படம் பாதியில் நின்று போனதால் அதனை கண்ணதாசன் பெயரில் திருவிளையாடல் படத்தில் தயாரிப்பாளர் எம்.ஏ.வேணுவும், இயக்குநர் ஏ.பி.நாகராஜனும் பயன்படுத்தினர். ஆனால், பாடலை எழுதியது கா.மு.ஷெரீப் என்ற உண்மை எழுத்தாளர் ஜெயகாந்தன் மூலம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.

Also read... ரத்தக்கண்ணீரில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட நிபந்தனைகள்

யாரையும் சட்டை செய்யாத ஜெயகாந்தன்கூட கா.மு.ஷெரீப் விஷயத்தில் கண்ணியமாகவே நடந்து கொண்டிருக்கிறார். அவரது உயர் பண்புகள் குறித்து எழுதியுள்ளவர், அவருக்கு முன்னால் தான் புகைப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தத்துவப் பாடல்களை எழுதுவதில் கண்ணதாசனுக்கு முன்னோடி கா.மு.ஷெரீப் என்பது அவரது பாடல்களை கேட்டாலே தெரியும். "இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே, அவரின் கவிதைத் தொகுதி வெளிவந்துவிட்டது. ஒளி எனும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்" என கண்ணதாசன் கூறியுள்ளார்.
பன்முகக் கலைஞராகவும், பண்பாளராகவும், தலைசிறந்த திரையிசைப் பாடலாசிரியராகவும் திகழ்ந்த கா.மு.ஷெரீப் 1994 ஜுலை 7 ஆம் நாள் மரணமடைந்தார். இன்று அவரது 28 வது வருட நினைவுதினம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி