கமல் நடித்த புஷ்பக விமான கன்னட திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 35 வருடங்கள் நிறைவு பெற்றன. சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல், அமலா நடித்த இந்தப் படம் கன்னடத்தில் புஷ்பக விமான என்ற பெயரிலும் தெலுங்கில் புஷ்பக விமானம் என்ற பெயரிலும் தமிழில் பேசும் படம் என்றும் மலையாளத்தில் புஷ்பக் விமானம் என்றும் ஹிந்தியில் புஷ்பக் என்ற பெயரிலும் வெளியானது அதாவது கன்னடத்தில் முதல் பான் இந்தியா திரைப்படம் என்று புஷ்பக விமான படத்தை கூறலாம்.
சிங்கீதம் சீனிவாச ராவ் உதவி இயக்குனராக இருந்தபோது ஒரு படத்தில் வசனங்கள் இல்லாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது போல் காட்சி உருவாக்க வேண்டி இருந்தது. அந்த காட்சி கொடுத்த இன்ஸ்பிரேஷனில் புஷ்பக விமான படத்திற்கான கரு அவருக்கு தோன்றியுள்ளது.
கதைக்கான ஐடியா மனதில் உதித்ததும் புஷ்பக விமான படத்தின் திரைக்கதையை இரண்டு வாரங்களில் எழுதி முடித்துள்ளார். இதன் சிறப்பு முழுப் படத்திலும் வசனங்களே கிடையாது.
கதாபாத்திரங்களின் முகபாவனைகளையும் செய்கைகளையும் வைத்து மட்டுமே கதையை பார்வையாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதனால் சிறந்த நடிகர்கள் அவருக்கு தேவைப்பட்டனர்.
பிரதான கதாபாத்திரத்தில் கமலும், அமலாவும் நடித்தனர். பிற நடிகர்களை கன்னடம் தெலுங்கு தமிழ் ஹிந்தி என பல மொழி திரையுலகிலிருந்து அவர் தேடி ஒப்பந்தம் செய்தார். வசனங்கள் இல்லாத திரைப்படம் ரசிகர்களை கவருமா? திரையரங்கில் ஓடுமா என்ற ஆரம்பக்கட்ட சந்தேகம் விநியோகித்தவர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இருந்தது.
ஆனால் அதையும் மீறி அத்திரைப்படம் கர்நாடகாவில் 35 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. அதேபோல் தமிழ் தெலுங்கு மலையாளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்பக விமான திரைப்படத்தை சோகமாக எடுக்க வேண்டும் என்று தான் முதலில் சிங்கீதம் சீனிவாசரா முடிவு செய்திருந்தார். சார்லி சாப்ளின் திரைப்படங்களில் சோகத்தையும் சிரிப்புடன் சொல்லும் யுக்தியை மனதில் கொண்டு அதுபோல் பிளாக் ஹியூமரில் படத்தை எடுப்பது என தீர்மானித்து, அதற்கு ஏற்ப திரைக்கதையை மாற்றி எழுதியுள்ளனர். இந்த யுக்தி நன்றாகவே பலித்தது. படமும் வெற்றி பெற்றது.
இந்தியாவில் மௌனப் பட காலத்திற்குப் பிறகு வசனங்களே இல்லாமல் வெளியான திரைப்படம் என்ற பெயரை புஷ்பக விமான பெற்றது இன்றும் சிங்கீதம் சீனிவாச ராவ் கமல் அமலா போன்ற கலைஞர்களின் பெயர் சொல்லும் படமாக இப்படம் திகழ்கிறது.
இந்தப் படத்திற்கு கௌரி சங்கர் ஒளிப்பதிவு செய்ய, எல் வைத்தியநாதன் இசையமைத்தார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனித்துக் கொண்டார். புஷ்பக விமான தேசிய விருதையும் மாநில விருதுகளையும் பிலிம்பேர் போன்ற பிற விருதுகளையும் வென்றது.
வசனங்களே இல்லாத கமலின் பேசும் படம் இன்று வரை ரசிகர்களையும் திரையுலகினரையும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. கன்னடத்தில் தயாரான கேஜிஎப், காந்தாரா போன்ற திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று பான் இந்தியா திரைப்படமாக கொண்டாடப்படுகின்றன.
ஆனால் 35 வருடங்களுக்கு முன்பே கமலின் கன்னட திரைப்படம் ஒன்று பிற மொழிகளில் நல்ல வரவேற்பையும் பெயரையும் பெற்று பான் இந்தியா திரைப்படமாக இருந்துள்ளது என்பது ஆச்சரியம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood