சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப சினிமாவும் மாறுகிறது. முன்பு பக்திப் படங்கள் வருடத்திற்கு இரண்டு டஜன் வெளியாகும். ஆடி மாதத்திற்கு அம்மன் படங்கள், சபரிமலை சீசனுக்கு ஐயப்பன் படங்கள் என சீசன் பிரித்து வெளியிட்டார்கள். இப்போது அந்த வழக்கம் பெருமளவு மாறிவிட்டது. கடவுளின் இடத்தை பேய், ஆவிகள் பிடித்துக் கொண்டு விட்டன.
காஞ்சனா, அரண்மனை, தில்லுக்கு துட்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு ஆவி, பேய் படங்கள் வருடத்துக்கு இரண்டு டஜன் வெளியாகின்றன. லாஜிக் பார்க்காமல் எந்தக் கதையையும் படமாக்கலாம் என்ற சவுகரியமும், பேய் படங்களுக்கு இருக்கும் தேசிய அளவிலான மார்க்கெட்டும் பேய், ஆவி படங்கள் உற்பத்தியின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றன.
எண்பது தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த இன்னொரு ஜானர், குடும்பம், அதுசார்ந்த உறவு மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை படமாக்குவது. விசுவின் சம்சாரம் அது மின்சாரம் இந்த ஜானரை உச்;சத்துக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு அவரே திருமதி ஒரு வெகுமதி, காவலன் அவன் கோவலன், பெண்மணி அவள் கண்மணி, வரவு நல்ல உறவு, வேடிக்கை என் வாடிக்கை என தொடர்ந்து படங்கள் எடுத்தார். இந்தப் படங்களின் மையமாக இருப்பது குடும்பப் பிரச்சனைகள். பெரும்பாலும் பெண்கள் சார்ந்தது. வரதட்சணை கொடுமை, பெண்கள் வேலைக்குச் செல்வது, வரவுக்கு மீறி செலவு செய்யும் கணவனை மனைவி திருத்துவது போன்றவை.
விசுவைத் தொடர்ந்து வி.சேகர் இந்த ஜானரின் விற்பன்னராக இருந்தார். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப்போச்சு, பொங்கலோ பொங்கல், எல்லாமே என் பொண்டாட்டிதான், விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று அவரது படங்கள் பெயரிலேயே கதையை சொல்லிவிடும். இதில் பொங்கலோ பொங்கல் சற்று வித்தியாசமானது. ஒன்றாகப் படித்து வளர்ந்த நண்பர்களுக்கு அவர்களுடன் படித்த பெண்கள் தொழில் செய்து முன்னேற உதவி செய்யும் கதை. இந்தப் படம் உள்பட அனைத்துப் படங்களுமே வெற்றி பெற்றன. பகல் காட்சிகளை அரங்கு நிறைந்த காட்சிகளாக்கியது இந்தப் படங்கள்தான்.
சமீபத்தில் மறைந்த டி.பி.கஜேந்திரனின் வீடு மனைவி மக்கள், நல்ல காலம் பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் போன்ற படங்களும் முக்கியமானவை. குடும்பப் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் முன்வைப்பதுதான் இந்தப் படங்களின் சிறப்பம்சம். அதனால், தனியாக நாயகன், நாயகி என்று இருந்தாலும், நகைச்சுவை நடிகர்களே இப்படங்களில் பெயரைத் தட்டிச் செல்வார்கள். 1990 இல் இவர் இயக்கிய பெண்கள் வீட்டின் கண்கள் படத்தில் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஜோடியாக எம்ஜிஆர், சிவாஜிக்கு ஜோடியாக நடித்த கே.ஆர்.விஜயா நடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள். கே.ஆர்.விஜயா தாசில்தார். எஸ்.எஸ்.சந்திரன் வெட்டி ஆபிசர். வீட்டு வாடகையாக வரும் ஆயிரம் ரூபாய்தான் என்னுடைய சம்பாத்தியம், இதற்கு மேல் என்ன சம்பாதிப்பது என்று இருப்பவர்.
அவரது அம்மா எஸ்.என்.லட்சுமி. அம்மாவும், மகனும் சேர்ந்து மூத்த மகள் ஊர்வசியின் திருமணத்துக்கு சம்பந்தி வீட்டார் சொல்படி ஆடம்பரமாகச் செலவு செய்து கடனை இழுத்துவிடுவார்கள். ஒரு பொண்ணுக்கே இவ்வளவு கடன் வாங்கினால் மற்ற நான்கு பெண்களை எப்படி கல்யாணம் செய்து கொடுப்பது என்று கே.ஆர்.விஜயா கேட்க, நான் நடத்திக் காட்டுகிறேன் என்று சவால்விடுவார் எஸ்.எஸ்.சந்திரன்.
அவர் தனது இயலாமையால் செய்யும் விஷயங்கள் விவகாரமாகி அடுத்த இரு பெண்களின் திருமணங்கள் தடைபடும். பெண் குழந்தை பிறந்தது என ஊர்வசியையும் மாப்பிள்ளை வீட்டார் துரத்திவிடுவார்கள். இந்தப் பிரச்சனைகளை கே.ஆர்.விஜயா முடிவுக் கொண்டு வந்து, சம்பந்தப்பட்டவர்களின் தவறுகளை உணரச் செய்வது கதை.
ஊர்வசி, பல்லவி, வைஷ்ணவி, அறிமுக நடிகை லதா ஆகியோருக்கு முறையே சந்திரசேகர், திலீப், ஆனந்த்பாபு, பாண்டியன் ஜோடி. எஸ்.எஸ்.சந்திரன் தனது வழக்கமான சேட்டைகள் இல்லாமல் நடித்திருந்தார். கரண்ட் பில் கட்டலைன்னா மந்திரியாயிருந்தாலும் பியூஸை பிடுங்கணும் என்று சொல்லுமிடத்தில் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதியின் படத்தைக் காட்டி அரசியல் 'டச்'சும் கொடுத்திருந்தனர்.
இந்தியாவில் அதிகம் படித்த, வேலைக்கு செல்லும், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த பெண்கள் அதிகமிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இங்குள்ள அரசியலும், அதன் ஒரு பாகமான சினிமாவும் பெண் கல்வியை, அவர்கள் வேலைக்கு செல்வதை, சொந்தக் காலில் அவர்கள் நிற்க வேண்டும் என்பதை இயல்பாக வலியுறுத்தி வந்திருக்கின்றன என்பதை தொகுத்துப் பார்க்கையில் ஆச்சரியமேற்படுகிறது.
25 வருடங்களுக்கு முன் இந்தப் படங்களுக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமிருந்தது. அதிகமும் பெண்கள். அன்றைய காலைக்காட்சிகளை அரங்கு நிறைந்த காட்சிகளாக்கியது இவர்களே. தொலக்காட்சி தொடர்களின் ஆதிக்கத்திற்குப் பிறகு இந்தவகை படங்கள் வழக்கொழிந்து போயின. அந்த ரசிகர்கள் தொலைக்காட்சி தொடர்களின் ரசிகர்களாக வீட்டு வரவேற்பறையில் முடங்கிப் போயினர். சமூகம் மாறும்போது சினிமாவும் மாறுகிறது என்பதற்கு கண்முன் இருக்கும் உதாரணம் காணாமல் போன இவ்வகைப் படங்களே.
1990 மார்ச் 10 வெளியான பெண்கள் வீட்டின் கண்கள் இன்று 33 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema