பிரபல கனடியன் - அமெரிக்கன் நடிகை பமீலா ஆண்டர்சன் தனது 54 வயதில் 5-வது முறையாக விவாகரத்து ஆகியிருக்கிறார்.
கனடிய-அமெரிக்க நடிகையும் மாடலுமான பமீலா ஆண்டர்சன், பிளேபாய் இதழின் அட்டைப் படத்தில் பலமுறை இடம்பெற்றிருந்தார். ஹோம் இம்ப்ரூவ்மென்ட், பேவாட்ச் மற்றும் வி.ஐ.பி ஆகிய தொலைக்காட்சித் தொடர்கள் மூலமும், ரா ஜஸ்டிஸ், பார்ப் வயர், சூப்பர் ஹீரோ மூவி, மற்றும் ப்ளாண்ட் அண்ட் ப்ளாண்டர் உள்ளிட்ட பல்வேறு படங்கள் மூலமும் பிரபலமானார்.
பிக் பிரதர் நிகழ்ச்சியின் இந்தி பதிப்பான
பிக் பாஸ் நான்காவது சீசனில் பமீலா கலந்துக் கொண்டார். தற்போது அவர் தனது 5-வது கணவரை 54 வயதில் விவாகரத்து செய்துள்ளார். இவரின் முதல் கணவர், மொட்லி க்ரூவின் டிரம்மர் டாமி லீயை தெரிந்துக் கொண்ட நான்கே நாட்களில் பிப்ரவரி 19, 1995 அன்று திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிராண்டன் தாமஸ் மற்றும் டிலான் ஜாகர் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த ஜோடி 1998-ல் விவாகரத்து பெற்றது.
அதன் பிறகு மாடல் மார்கஸ் ஷென்கென்பெர்க்கை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார் பமீலா. ஆனால் அவர்கள் 2001-ல் பிரிந்தனர். பிறகு, தனது இரண்டாவது கணவரான பாடகர் கிட் ராக்கை 2006-ல் மணந்து அதே ஆண்டில் அவரை
விவாகரத்து செய்தார். 2007-ஆம் ஆண்டில், அவர் போக்கர் பிளேயர் ரிக் சாலமனை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த ஆண்டு, 2008-லேயே இந்த ஜோடி பிரிந்தது. 2014-ல் ரிக்கை மறுமணம் செய்து கொண்ட பமீலா, 2015-ல் மீண்டும் அவரைப் பிரிந்தார்.
பின்னர் பமீலா ஆண்டர்சன் 2017-ல் பிரெஞ்சு கால்பந்து வீரர், அடில் ராமியுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். 2019-ல், ராமியுடனான உறவு முடிந்துவிட்டதாக அறிவித்தார். ஜனவரி 20, 2020 அன்று ஹாலிவுட் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை நான்காவது கணவராக பமீலா மணந்தார். ஆனால் பிப்ரவரி 1, 2020 அன்று, அதாவது 12 நாட்களில் அவரும் பீட்டர்ஸும் பிரிந்து ஒட்டுமொத்த ஹாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்தார். 2020-ஆம் ஆண்டில், ஆண்டர்சன் தனது மெய்க்காப்பாளரான டான் ஹேஹர்ஸ்டை ஐந்தாவதாக மணந்தார். ஆனால் இப்போது, ஐந்தாவது முறையாக அவரையும் விவாகரத்து செய்திருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.