Home /News /entertainment /

ஸ்ரீதரின் கணிப்பை பொய்யாக்கி 100 நாட்கள் ஓடிய படிக்காத மேதை

ஸ்ரீதரின் கணிப்பை பொய்யாக்கி 100 நாட்கள் ஓடிய படிக்காத மேதை

படிக்காத தேதை பட போஸ்டர்

படிக்காத தேதை பட போஸ்டர்

Director Bhim Singh : பீம்சிங் - சிவாஜியின் 'ப' வரிசைப் படங்களில் பாலாடை, பாதுகாப்பு படங்கள் தவிர அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றன. பாசமலர் போல பல படங்கள் சரித்திர சாதனையும், வசூல் சாதனையும் படைத்தன.

பழம்பெரும் இயக்குநர் பீம்சிங்கின் 'ப' வரிசைப் படங்கள் புகழ்பெற்றவை. பதிபக்தி, பாகப் பிரிவினை, பெற்ற மனம், படிக்காத மேதை, பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பந்தபாசம், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பாலாடை, பாதுகாப்பு ஆகிய பீம்சிங்கின் 'ப' வரிசைப் படங்களில் சிவாஜி கணேசன் நடித்தார்.

இதனிடையில் வேறு நடிகர்களை வைத்து இயக்கிய படங்களுக்கு 'ப' வில் தொடங்கும் பெயர்களை பீம்சிங் தவிர்த்தார். உதாரணம், 1960 இல் ஜெமினி கணேசனை வைத்து அவர் இயக்கிய படத்துக்கு களத்தூர் கண்ணம்மா என பெயர் வைத்தார்.பீம்சிங் - சிவாஜியின் 'ப' வரிசைப் படங்களில் பாலாடை, பாதுகாப்பு படங்கள் தவிர அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றன. பாசமலர் போல பல படங்கள் சரித்திர சாதனையும், வசூல் சாதனையும் படைத்தன. இவற்றில் பல படங்கள் வேற்று மொழிப் படங்களில் இருந்து தழுவி எடுக்கப்பட்டவை.

பாகப் பிரிவினை, பெற்ற மனம் படங்களுக்குப் பிறகு பீம்சிங் வங்காளத்தில் வெளியான Jog Biyog (1953) படத்தை தழுவி தமிழில் ஒரு படம் எடுக்க நினைக்கிறார் பீம்சிங். Jog Biyog இதே பெயரில் எழுதப்பட்ட வங்க நாவலின் திரைவடிவம். வங்கப் படத்தை தமிழுக்கு ஏற்றபடி மாற்றி வசனம் எழுத பீம்சிங் ஸ்ரீதரை நாடுகிறார்.1959 இல் கல்யாணப் பரிசு படத்தை இயக்கும் முன்பு ஸ்ரீதர் படங்களுக்கு கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கதை, வசனகர்த்தாவாக அவர் இருந்தார்.வங்கப் படத்தைப் பார்த்த ஸ்ரீதருக்கு படத்தில் திருப்தியில்லை. தமிழுக்கு அந்தக் கதை ஒத்துவராது என்று கருதினார். அதனால், பீம்சிங் பணித்த வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதேநேரம், அப்போது தனது உதவியாளராக இருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணை பயன்படுத்திக் கொள்ளும்படி சிபாரிசு செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட பீம்சிங் வங்கப் படத்தை தமிழுக்கு ஏற்றபடி மாற்றி வசனம் எழுதும் பொறுப்பை கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். பீம்சிங்கின் ஒத்துழைப்புடன் முழு திரைக்கதையும் தயாரானது.இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பெரிய பணக்கார குடும்பத்தின் விசுவாசமான வேலைக்காரனாக வருவார். சிறு வயதிலேயே அந்த வீட்டில் வளர்ந்தவர் என்பதால் வேலைக்காரன் என்பதைவிடவும் அவருக்கு அந்த குடும்பம் மீது ஒட்டுதல் இருக்கும். பொருளாதார நெருக்கடியில் அந்தக் குடும்பம் சிக்கும் போது பல்வேறு அவமானங்களையும் கடந்து அவர்களுக்கு உதவி செய்வார். அந்த குடும்பத்தின் தலைவர் இறந்த பிறகு அவரது மனைவியை காப்பாற்றுவதுடன், நின்று போன அவரது மகளின் திருமணத்தையும் நடத்தி வைப்பார்.கே.வி.மகாதேவனின் இசையில் மருகதாசியும், கண்ணதாசனும் எழுதிய பாடல்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. சிவாஜி மற்றும் குடும்பத்தலைவராக நடித்த  எஸ்.வி.ரங்கராவ், அவரது மனைவியாக வரும் கண்ணம்பா, சிவாஜியின் மனைவியாக நடித்த சௌகார் ஜானகி என அனைவரும் நடிப்பில் தங்களின் பங்களிப்பை சிறப்பாக அளித்திருந்தனர். படம் 100 தினங்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது.அத்துடன் விசுவாசமான வேலைக்காரன் கதாபாத்திரத்தை பின்னணியாகக் கொண்ட முத்து எங்கள் சொத்து, வாழ்க்கை, பேர் சொல்லும் பிள்ளை உள்பட ஏராளமான படங்களுக்கு முன்னோடியாகவும் இந்தப் படம் அமைந்தது.
ஸ்ரீதரைப் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களாலும் சிலநேரம் எந்தக் கதை வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாமல் போயிருக்கிறது.

மக்களின் ரசினையை 100 சதவீதம் துல்லியமாக யாரும் கணித்ததில்லை என்பதற்கு இன்னொரு உதாரணம் படிக்காத மேதை. 1960 ஜுன் 25 ஆம் நாள் வெளியான படிக்காத மேதை இன்றுடன் 62 வருடங்களை நிறைவு செய்கிறது.
Published by:Musthak
First published:

Tags: Kollywood

அடுத்த செய்தி