OTT Movies: இந்தியாவில் சூடு பிடிக்கும் ஓடிடி வியாபாரம்!

சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

ஒருகாலத்தில் திரைப்படங்களின் ஒளிபரப்பு உரிமைக்காக தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டது போல் இப்போது ஓடிடி தளங்கள் அடித்துக் கொள்கின்றன.

 • Share this:
  நெட்பிளிக்ஸ் இந்தியாவில் தனது தயாரிப்புகளுக்காக நிறுவனம் ஒன்றை அமைத்து வருகிறது. 2022-ல் இந்த நிறுவனம் செயல்பட ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஓடிடி தளங்களின் ஹாட் ஸ்பாட்டாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையே அதற்கு காரணம். உலக அளவில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள சீனாவில் தொழில் செய்வதற்கான கெடுபிடிகள் அதிகம். இந்தியாவில் அது இல்லை. விரைவில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தும் என கணித்திருக்கிறார்கள். ஒரே இடத்தில் 140 கோடி மக்கள் என்பது எந்த வியாபார நிறுவனத்துக்கும் வேட்டைக்காடு. ஓடிடி தளங்கள் விதிவிலக்கல்ல. மேலும், கொரோனா பேரிடரால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், வியாபாரத்தை விருத்தி செய்ய இதைவிட பொருத்தமான காலம் வேறில்லை.

  நெட்பிளிக்ஸ் இந்த மாதம் மட்டும் திரைப்படங்கள், சீரிஸ்கள் என 115 படைப்புகளை இந்தியாவில் வெளியிடுகிறது. இதில் அனைத்து மொழிகளும் அடக்கம். அமேசான் பிரைம் வீடியோ, ஸீ 5, டிஸ்னி + ஹாட் ஸ்டார் போன்றவை நெட்பிளிக்ஸுக்கு போட்டியாக உள்ளன. ஆப்பிள் லைவ் (appleLIV) ஓடிடி தளம் விரைவில் இந்தியாவில் கடைவிரிக்க உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, இந்திரஜித் நடித்திருக்கும் நராகாசூரன் படத்தின் உரிமையை இவர்கள் வாங்கியுள்ளனர். விரைவில் அது ஆப்பிள் லைவில் வெளியாக உள்ளது. மேலும் பல புதிய படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட அவர்கள் வாங்கியிருப்பதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோவை வாங்கிய நிலையில், ஒரே நாளில் அமேசானின் மதிப்பு உயர்ந்தது. ஸீ 5, டிஸ்னி + ஹாட் ஸ்டார் இரண்டும் மிரட்டுகின்றன. இதனால், இந்தியாவில் தனது செல்வாக்கை ஆழப்பதிக்க நினைக்கிறது நெட்பிளிக்ஸ். இதற்காக மும்பையில் அலுவலகம் ஒன்றை இந்திய தயாரிப்புக்கென்றே தொடங்குகிறது. அடுத்த வருடம் இது செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இந்த வருடம் தமிழில் ஏலே, மண்டேலா திரைப்படங்களை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் நவரசா ஆந்தாலஜியை விரைவில் வெளியிடுகிறது. மேலும் பல புதிய புராஜெக்ட்களுக்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

  ஒருகாலத்தில் திரைப்படங்களின் ஒளிபரப்பு உரிமைக்காக தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டது போல் இப்போது ஓடிடி தளங்கள் அடித்துக் கொள்கின்றன. இந்த வருடம் மட்டும், ஒரு டஜனுக்கும் மேல் தமிழ் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளன.

  அருவி படத்தை இயக்கிய அருண் பிரபுவின் புதிய படமான வாழ், நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் கடைசி விவசாயி மற்றும் துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், மாமனிதன் என விஜய்சேதுபதி நடித்திருக்கும் ஐந்து படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. நயன்தாராவின் நெற்றிக்கண், சிவகார்த்திகேயனின் டாக்டர், விஷ்ணு விஷாலின் எப்ஐஆர், வெங்கட்பிரபுவின் விக்டிம், அருண் விஜய்யின் பார்டர், த்ரிஷாவின் ராங்கி, கர்ஜனை, ஹன்சிகாவின் மஹா, ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன் என ஓடிடிக்கு ஏராளமான படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. முருங்கைக்காய் சிப்ஸ், பன்னிக்குட்டி, ராக்கி, ப்ரெண்ட்ஷிப் என மேலும் பல படங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன.

  மேலே உள்ளது தமிழ்ப் படங்களைப் பற்றிய சின்ன கணக்கு. பிற மொழிகளிலும் இதேபோல் டஜன்கணக்கில் படங்கள் ஓடிடி வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. இதிலிருந்தே இந்தியாவில் ஓடிடி தளங்கள் குறுகிய காலத்தில் எத்தனை விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கின்றன என்பதை அறியலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: