Grahan: தி பேமிலி மேனை தொடர்ந்து 'க்ரஹான்' வெப் தொடருக்கு எதிர்ப்பு

க்ரஹான்

நிகழ் காலத்துக்கும், இறந்த காலத்துக்குமிடையில் முன்-பின்னாக நகரும் இந்தக் கதையில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை விரிவாக காட்டப்படுகிறது.

  • Share this:
    தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழப்பேராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு எழுந்த எதிர்ப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு வெப் தொடர் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது.

    டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் க்ரஹான் என்ற வெப் தொடர் இன்று வெளியானது. 1984-ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப் பின்னணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. நிகழ் காலத்தையும், கடந்த காலத்தையும் நான் லீனியராக இணைக்கும் இந்தத் தொடர் சீக்கியர்களை கொச்சைப்படுத்துவதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியிருப்பதோடு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

    க்ரஹான் தொடர் சத்ய வியஸ் எழுதிய சௌராஸி நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. தொடரை ரஞ்சன் சந்தல் இயக்கியுள்ளார். 2016-ல் ராஞ்சியிலும், 1984-ல் ஜார்கண்டிலுமாக இரு காலகட்டங்களில் க்ரஹான் கதை நடக்கிறது. ஐபிஎஸ் அதிகாரியான அம்ரிதா சிங் ராஞ்சியில் ஒரு பத்திரிகையாளரின் கொலை வழக்கை விசாரிக்கையில் மேலிடத்திலிருந்து தேவையில்லாத அழுத்தத்தை சந்திக்க நேர்கிறது. வேலையை விட்டுவிடலாம் என்று விரக்தியில் இருக்கையில் 1984-ல் சீக்கியருக்கு எதிராக நடந்த வன்முறை வழக்கை மீண்டும் விசாரணை செய்யும்படி பணிக்கப்படுகிறார். 32 வருடங்களுக்கு முன் நடந்த அந்த நிகழ்வின் விசாரணை அம்ரிதாவுக்கு பல அதிர்ச்சிகளை தருகிறது. முக்கிய குற்றவாளி அவளது தந்தை என்பதை கண்டு கொள்கிறார். தந்தையின் பக்கம் நிற்பதா இல்லை தான் நம்பும் நீதியின் பக்கம் நிற்பதா என்ற பரிதவிப்புக்கு ஆளாகிறார் அம்ரிதா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நிகழ் காலத்துக்கும், இறந்த காலத்துக்குமிடையில் முன்-பின்னாக நகரும் இந்தக் கதையில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை விரிவாக காட்டப்படுகிறது. அதேநேரம், அம்ரிதாவின் தந்தை கதாபாத்திரத்தை வில்லனாக்கி சீக்கியர்கள் மீதான தாக்குதலை சமன் செய்திருப்பதாக சீக்கியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிரோன்மணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் தலைவர் பிபி ஜாகிர் கவுர், சீக்கியர்கள் ஒத்துக்கொள்ள முடியாத வகையில் க்ரஹான் தொடரில் சீக்கியர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 1984 வன்முறையில் பாதிக்கப்பட்ட நிர்ப்ரீத் கவுர் தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர். டிஸ்னி + ஹாட் ஸ்டாரின் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரித்ததற்காக அத்தொடரின் இயக்குனர், தயாரித்தவர் என அனைவரும் விமர்சிக்கப்பட்டதோடு, அதனை வெளியிட்ட அமேசான் பிரைமும் கண்டனத்துக்குள்ளானது. அந்த எதிர்ப்பின் தணல் அடங்குவதற்குள் டிஸ்னி + ஹாட் ஸ்டார் க்ரஹான் தொடருக்காக எதிர்ப்பை சந்தித்திருக்கிறது.

    தமிழர்களைப் போல சீக்கியர்கள் இதனை அத்தனை எளிதில் கடந்து செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: