ONV Kurup: "ஓ.என்.வி குறுப்பு சுமாரான கவிஞர் தான்" - எழுத்தாளர் ஜெயமோகன்

ஓஎன்வி குறுப் - ஜெயமோகன்

பாடலாசிரியரான ஓ.என்.வி என்றுமே முதல் தர கவிஞராக அங்குள்ள முக்கியமான கவிதை விமர்சகர்களால் கருதப்பட்டதில்லை.

  • Share this:
மலையாளத்தின் புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர் ஓஎன்வி குறுப்பு சுமாரான கவிஞர், இளையராஜாவின் மெட்டுகளுக்கு பாடல் எழுத திணறியவர் என எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்துள்ளார். வைரமுத்துக்கு ஓஎன்வி குறுப்பு பெயரிலான விருது வழங்க எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், ஜெயமோகனின் இந்த விமர்சனம் முக்கியமானதாகிறது.

மலையாள இலக்கியத்தின் மகத்தான பங்களிப்பாளராக ஓஎன்வி குறுப்புவை மலையாளிகள் கொண்டாடுகின்றனர். ஓஎன்வி குறுப்பு கவிஞர், பாடலாசிரியர். இடதுசாரி சிந்தனை கொண்டவர். கட்சி சார்பில் தேர்தலிலும் நின்றிருக்கிறார். சாகித்ய அகதாமி, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார். இலக்கியத்துக்காக இந்திய அளவில் தரப்படும் உயரிய விருதான ஞானபீடத்தையும் பெற்றுள்ளார். இவர் பெயரிலான விருதை மலையாளிகள் கௌரவமிக்கதாக பார்க்கிறார்கள்.

இதுவரை மலையாளிகளுக்கே இவ்விருது வழங்கப்பட்டு வந்தது. முதல்முறையாக கேரளத்துக்கு வெளியே கவிஞர் வைரமுத்து அவரது இலக்கிய பங்களிப்புக்காக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட காலம் பொல்லாதது. பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் பாலியல் அத்துமீறலுக்காக கைது செய்யப்பட்டு, வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீடியாவில் மறுபடி பேசுபொருளான நிலையில், இவ்விருது அறிவிக்கப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு எங்கள் ஐயா ஓஎன்பி குறுப்பு பெயரிலான விருதா? இது அவருக்கு அவமரியாதை செய்வதல்லவா என்று நடிகை பார்வதி இதனை விமர்சித்தார். இதே குரலை பலரும் எதிரொலிக்க, வைரமுத்துக்கு விருது வழங்குவதை மறுபரிசீலனை செய்ய நடுவர் குழுவை கேட்க இருப்பதாக ஓஎன்வி கலாச்சார மையத்தின் தலைவரும் இயக்குனருமான அடூர் கோபாலா கிருஷ்ணன் கூறினார். விருது கமிட்டியினருக்கு வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம். அவர் இலக்கியவாதி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு இவ்விருதுக்கு அவரை தேர்வு செய்திருக்கலாம் என விளக்கமளித்துள்ளார்.

ஓஎன்வி குறுப்பு பெயரிலான விருது வைரமுத்துக்கு தரப்படுமா மறுக்கப்படுமா என்பது ஒருபுறமிருக்க, மலையாளிகள் மகத்தான ஆளுமையாக கொண்டாடும் ஓஎன்வி குறுப்பு சுமாரான கவிஞரே என எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்துள்ளார்.

2010 இல் ஓஎன்வி குறுப்புக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்ட போது அதனை விமர்சித்து ஜெயமோகன் இவ்வாறு எழுதினார்.

"இவ்வருடத்தைய ஞானபீட விருது மலையாளக்கவிஞர் ஓ.எ.வேலுக்குறுப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஓர் இலக்கிய விமர்சகனாகவும் வாசகனாகவும் முற்றிலும் தகுதியற்ற ஒரு விருது என்றே இதைச் சொல்வேன். தேசிய அளவில் ஒரு நல்ல கவிஞராக அறியப்படவோ, கேரளக்கவிதையின் முகமாக குறிப்பிடப்படவோ அருகதை இல்லாத ஒரு மேலோட்டமான கவிஞர் அவர். ஓ.என்.விக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது எல்லா வகையிலும் துரதிருஷ்டவசமானது."

ஜெயமோகன் இவ்வளவு தீவிரமாக விமர்சிக்கும் ஓஎன்வி குறுப்பு இடதுசாரி அரசியலில் நிலைபெற்றவர். ஜெயமோகனின் இந்த விமர்சனத்துக்கு அவரது கம்யூனிஸ பின்புலம் தான் காரணம் என்று தமிழகத்தில் ஓர் எதிர்விமர்சனம் இன்றளவும் உண்டு. ஓஎன்வி குறுப்பின் பல திரைப்பாடல்கள் மலையாளிகளின் வாழ்வோடு ஒன்றிப் போனவை. இன்றளவும் கொண்டாடப்படுபவை. ஆனால், அது குறித்த ஜெயமோகனின் பார்வை வேறாக உள்ளது. வயலார் ராமவர்மாவும், பி.பாஸ்கரனும் இருந்தவரை திரைப்பாடல்களில் ஓஎன்வி குறுப்பால் நுழையவே முடியவில்லை என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

"எதுகை மோனை அமைந்த சரியான செய்யுள்கள் அவரது பாடல்கள். அவரது மனமே அப்படிப்பட்டது. ஆகவே சலீல் சௌதுரி, இளையராஜா போன்ற புதுமையான இசையமைப்பாளர்களிடம் அவர் திறம்பட வெளிப்பட முடியவில்லை. தேவராஜன் போன்றவர்கள் அவர் எழுதும் வரிகளுக்கு இசையை அமைப்பார்கள். அவை அந்த யாப்பு அனுமதிக்கும் எளிய இசையாகவே இருக்கும். சலீல் சௌதுரியும், இளையராஜாவும் உருவாக்கும் எதிர்பாராத வடிவம்கொண்ட ஒலிக்கோவைகளுக்காக ஓ.என்.வி மிகவும் திணறியே வரியமைத்திருக்கிறார்" என்றார்.

சரி, கவிஞராக....? "பாடலாசிரியரான ஓ.என்.வி என்றுமே முதல் தர கவிஞராக அங்குள்ள முக்கியமான கவிதை விமர்சகர்களால் கருதப்பட்டதில்லை. நெடுங்காலம் அவரது பெயர் பட்டியல்களில் கூட இடம்பெற்றதில்லை. அவர் ஒரு கட்சிக்கவிஞர், அவ்வளவுதான். பொதுவாக முற்போக்காகக் கருதப்படும் கருத்துக்களை அவ்வப்போதைய பொதுபோக்குக்கு ஏற்ப யாப்பில் அமைப்பதே அவரது கவிதைமுறை. அவை அழகாக இருக்கும். ஆழமோ அவருக்கே உரிய தரிசனமோ இருக்காது. மேடைகளுக்குப் பயன்படும்இ ஆத்மார்த்தமான கவிதைவாசகனுக்கு ஒன்றையும் அளிக்காது."

ஓஎன்வி குறுப்பு சாதாரண கவிஞர், மிகச்சாதாரண பாடலாசிரியர். எனில், ஏன் அவருக்கு ஞானபீடம் அளிக்கப்பட்டது? அவரை மலையாளிகள் தங்களின் மகத்தான இலக்கியவாதியாக ஏன் கொண்டாடுகிறார்கள்? ஜெயமோகனே அதற்கான பதிலையும் தருகிறார்.

"ஓ.என்.விக்கு வயதாகியது. இப்போதிருக்கும் மூத்த கவிஞர் அவர். தந்தை வழிபாடு கொண்ட சமூகத்தில் அதுவே எல்லா அங்கீகாரங்களையும் உருவாக்கி அளிக்கும். கடைசியாக அவர் இடதுசாரிகளுக்கு அந்த பழைய பொற்காலத்தின் தொல்பொருள்சின்னமாக எஞ்சும் ஒரு இடிபாடு அவர். ஆகவே இந்த விருது." என ஜெயமோகனின் கட்டக்கடைசி மதிப்பீடு இப்படி முடிகிறது.

"ஓ.என்.வி கவிதைகள் மிக மிக சம்பிரதாயமானவை. அவற்றின் மூல வடிவங்கள் ஏற்கனவே நமக்கு தெரிந்தவை. அவர் நகலெடுப்பதில்லை, எதிரொலிக்கிறார். முன்பு விமர்சகரான எம்.கிருஷ்ணன்நாயர் ஓ.என்.வி. குறுப்பின் முன்னோடியான வயலார் ராமவர்மாவை எதிரொலிக்கவிஞர் என அடையாளப்படுத்தினார். ஓ.என்.வி. எதிரொலிகளின் எதிரொலி. சென்ற காலம் என்ற இருட்குகையில் இருந்து கசிந்து வரும் ஒரு சத்தம்."
மலையாளிகள் கொண்டாடும் ஓஎன்வி குறுப்பு இலக்கிய ஆளுமை எல்லாம் இல்லை வெறும் சத்தம், அதுவும் இருட்குகையிலிருந்து வரும் சத்தம் மட்டுமே.

ஜெயமோகன் இதனை எழுதியது 2010 இல். இப்போது அவரது கருத்தில் ஏதாவது மாற்றம் உண்டா என்றால் இல்லை. வைரமுத்து சர்ச்சையை ஒட்டி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு முன்பு எழுதியதைப் போலவே இப்போதும் பதிலளித்துள்ளார் ஜெயமோகன்.

"ஓ.என்.வி குறுப்பு வெகுஜனத் தொடர்புகளால் பலமடங்கு மிகைப்படுத்தப்பட்ட, சுமாரான கவிஞர். நல்ல பாடலாசிரியர்."

வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்ட ஓஎன்வி விருது சர்ச்சைக்குள்ளானதால் மன வருத்தத்தில் இருக்கும் வைரமுத்து ரசிகர்கள், ஜெயமோகனின் இந்த விமர்சனத்தை படித்து, பரவாயில்லை, ஓஎன்வி சுமாரான கவிஞர்தான், அவர் பெயரிலான விருது கிடைக்காமல் போனாலும் பாதகமில்லை என சமாதானமடைய நினைத்தால் அது தவறு. கம்யூனிஸத்தைவிட ஜெயமோகனுக்கு அலர்ஜியானது திராவிடம். வைரமுத்துடன் ஒப்பிட்டால் ஓஎன்வி மகாகவி என்பார், ஜாக்கிரதை.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: