"தனக்குப் பிடித்த உடையை அணிவதற்கு, ஒவ்வொரு பெண்ணுக்கும் முழு சுதந்திரம் உள்ளது. நாங்கள் எதை உடுத்தவேண்டும் எனக் கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என ஊட்டச்சத்து நிபுணரும், மகிழ்மதி இயக்கத்தின் நிறுவனருமான திவ்யா சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக சமீபத்தில் தீரத் சிங் ராவத் பதவியேற்றார். அம்மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார். அப்போது, பெண்களின் உடை குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையானது.
நீச்சல் உடையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் – லைக்ஸை குவிக்கும் டிடி-யின் வீடியோ!
"இன்றைய இளம் தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் 'கிழிந்த ஜீன்ஸ்' (Ripped Jeans) உடுத்துகின்றனர். இதைப் பெண்கள் சிலரும் பின்பற்றுகின்றனர். இப்படி, பெண்கள் முழங்கால் தெரிய உடை அணிவது, குழந்தைகளுக்கு மோசமான எடுத்துக்காட்டாக மாறிவிடும். இதனால், சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் விளைவு குறித்து நான் அச்சப்படுகிறேன்" என தீரத் சிங் ராவத் பேசியது சமூக வலைதளங்களில் பெரும் எதிர்வினைகளைப் பெற்றது.
இந்நிலையில் பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் 'மகிழ்மதி' அமைப்பின் நிறுவனருமான திவ்யா சத்யராஜ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில், "எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷார்ட்ஸ் மற்றும் கிழிந்த ஜீன்ஸுடன் இருக்கும் படங்களைப் பதிவேற்ற வேண்டாம் எனவும், அரசியலில் ஆர்வமுள்ள ஒரு பெண் காட்டன் புடவையில் தான் தன்னை பொதுவெளியில் காட்டிக் கொள்ள வேண்டும் எனவும் நிறைய பேர் எனக்கு அறிவுரை கூறினார்கள். நான் அப்படி ஒரு பிம்பத்தை கட்டமைக்க மாட்டேன். அது நானாக இருக்க முடியாது. தனக்குப் பிடித்த உடையை அணிவதற்கு, ஒவ்வொரு பெண்ணுக்கும் முழு சுதந்திரம் உள்ளது என்பதை நான் நம்புகிறேன். அதனால் ஒரு பெரியாரிஸ்டாக திரு. தீரத் சிங்கின் பேச்சை, கடுமையாக எதிர்க்கிறேன். நாங்கள் எதை உடுத்தவேண்டும் எனக் கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்