1986, ஜனவரி 26 ஆம் தேதி சிவாஜி கணேசன் நடித்த மருமகள் திரைப்படம் வெளியானது. மதுசூதனன் கலேகர் எழுதிய கதைக்கு, ஆரூர்தாஸ் வசனம் எழுத, கார்த்திக் ரகுநாத் படத்தை இயக்கினார். சென்ற மாதம் 26 ஆம் தேதி மருமகள் 37 வது வருடத்தை நிறைவு செய்தது.
சிவாஜியின் மருமகளுக்கு முன் 1953 இல் இதே பெயரில் ஒரு படம் வெளியானது. தமிழ், தெலுங்கு இருமொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை எடுத்தனர். தமிழில் மருமகள் என்றும், தெலுங்கில் அம்மாலக்கலு என்றும் பெயர் வைத்தனர். இரு மொழிகளிலும் என்டி ராமராவ், பத்மினி இணை பிரதான வேடங்களில் நடித்தனர்.
தெலுங்குப் படத்திற்கு திரைக்கதை அமைத்து, வசனம் எழுதியவர் வேம்படி சதாசிவ பிரம்மம். தெலுங்கு கதாசிரியர்களில் கொடிகட்டிப் பறந்தவர். அவரது திரைக்கதையை தழுவி தமிழில் வசனம் எழுதியவர் ஏஎஸ்ஏ சாமி. இரு மொழிகளிலும் படத்தை லேனா செட்டியார் என்கிற லட்சுமணன் செட்டியார் தயாரித்தார். இவர் சிவகங்கை மாவட்டத்துக்காரர்.
இரு குடும்பங்களைப் பற்றிய கதை மருமகள். இதில் ஒரு குடும்பத்தின் வாரிசாக என்டிஆரும், இன்னொரு குடும்பத்தின் வாரிசாக பத்மினியும் நடித்தனர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது அக்குடும்பங்கள் பரஸ்பரம் எடுத்துக் கொண்ட முடிவு. ஒன்றாக பள்ளியில் பயிலும்போதே இருவரும் காதலிக்க ஆரம்பிப்பார்கள். காதல் கல்யாணத்தில் கனியப் போகும் நேரம், குடும்பங்கள் பிரியும். காதலர்கள் பதிவுத்திருமணம் செய்து கொள்வார்கள்.
குடும்பப் பகை காரணமாக மருமகளை மாமியாருக்குப் பிடிக்காமல் போகும். பத்மினியின் கணவர் என்டிஆர் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல, மாமியாருக்கு மருமகளை துன்புறுத்த வசதியாகிவிடும். குடும்பத்தின் மானத்தை காப்பாற்ற, அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் பிரசவத்திற்கு பத்மினி உதவி செய்வார்.
அவளுக்குப் பிறக்கும் குழந்தை பத்மினியுடையது என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்படும். என்டிஆர் திரும்பி வருகையில் என்னவானது, அவரும், பத்மினியும் ஒன்றிணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.
பெண்களை குறிவைத்து மருமகள் திரைப்படத்தை எய்திருந்தனர். அதில் படக்குழு வெற்றி பெற்றது. படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றி. தெலுங்கில் பம்பர்ஹிட். தமிழில் டி.ஆர்.ராமச்சந்திரன் ஏற்று நடித்த வேடத்தை தெலுங்கில் அப்போதைய முன்னணி காமெடி நடிகர் ரெலங்கி வெங்கட ராமைய்யா செய்திருந்தார். அந்த வேடம் வெகுவாக ரசிக்கப்பட்டது.
மருமகளுக்கு சி.ஆர்.சுப்பாராமன் இசையமைத்தார். இவர் இசையமைப்பாளர் சங்கரின் (கணேஷ்) அண்ணன். தேவதாஸு, ரத்னமாலா, லைலா மஜ்னு என்று புகழ்பெற்ற படங்களுக்கு இசையமைத்தவர். 1952 இல் மருமகள் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கையில் தனது 36 வது வயதில் அகால மரணமடைந்தார். அதனால், விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாதியில் நின்ற இசைப்பணியை பூர்த்தி செய்தனர். இவர்களில் ராமமூர்த்தி சி.ஆர்.சுப்பாராமனிடம் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவர். மருமகளில் இடம்பெற்ற, ஆணுக்கொரு பெண்பிள்ளை பாடலுக்கு மட்டும் ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார்.
1953, பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியான மருமகள் திரைப்படம் இன்று 70 வருடங்களை நிறைவு செய்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema