ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழர்களின் அடையாளங்கள் பறிக்கப்படுவதாக வெற்றிமாறன் பேசியதற்கு சீமான் ஆதரவு… ராஜராஜ சோழன் குறித்து பரபரப்பு பேட்டி

தமிழர்களின் அடையாளங்கள் பறிக்கப்படுவதாக வெற்றிமாறன் பேசியதற்கு சீமான் ஆதரவு… ராஜராஜ சோழன் குறித்து பரபரப்பு பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. – வெற்றிமாறன்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழர்களின் அடையாளங்கள் பறிக்கப்படுவதாக வெற்றிமாறன் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் படம் காரணமாக ராஜராஜ சோழன் குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாகவும் சீமான் பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார்.

  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பியுமான திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாள் மணி விழாவையொட்டி, தமிழ் ஸ்டுடியோஸ் சார்பாக நேற்று முன்தினம் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குனர் வெற்றிமாறன், தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.

  சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். என்று பேசினார். அவரது பேச்சு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

  இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வெற்றிமாறன் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

  “தம்பி வெற்றிமாறன் கூறியது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்திடமிருந்த திரைக்கலையைப் பொதுமைப்படுத்தியது அன்றிருந்த திராவிட இயக்கங்கள் தான். அன்றைய திராவிடத் தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஐயா எம்.ஜி.ஆர் போன்றவர்கள் திரைப்படத் துறையில் தான் பணியாற்றினார்கள். அதனால், தம்பி அவ்வாறு குறிப்பிடுகிறார்.

  கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

  எங்களுடைய பெரும்பாட்டன் அருண்மொழிச்சோழனை இந்து மன்னன் என்று பேசுவதெல்லாம் ஒரு வகையான வேடிக்கை தான். வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி, அவரை ஆரியம் தன்வயப்படுத்திக் கொள்ள நினைப்பதைப் போல, ராஜராஜ சோழனையும் தன்வயப்படுத்தும் முயற்சி தான் அது. அந்தக் காலத்தில் இந்திய நாடும் இல்லை, இந்து மதமும் இல்லை என்பது உலகத்திற்கே தெரியும், ராஜராஜ சோழன் என்ற மன்னன் சிவனை வழிபட்ட சைவ மரபினன் என்பது.

  பன்னிரு திருமறைகளைக் கறையான் அரிக்காமல் காப்பாற்றிக் கொடுத்தவர், அவர் தான். ‘ஏடு தந்தானடி தில்லையிலே’ என்ற பாடலெல்லாம் அதனால் தான் பாடப்பட்டது.

  ‘சினிமாவை அரசியல் மயமாக்குவது ரொம்ப முக்கியம்’ – வலியுறுத்தும் வெற்றிமாறன்

  தமிழர் அடையாளங்களில் புகழ் பெற்ற எல்லாவற்றையும் ஆரியம் தனதாக்கிக்கொள்ள முனையும். அப்படித்தான் எங்கள் சிவனை, முருகனை தனதாக்கிக்கொண்டது. அந்த அடிப்படையில் ராஜராஜ சோழனையும் இந்து என்று தன்வயப்படுத்திக்கொள்ள ஆரியம் முயல்வதை அனுமதிக்கக் கூடாது என்று தான் தம்பி வெற்றிமாறன் சொல்கிறார். அதை நான் ஏற்கிறேன்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Director vetrimaran, Seeman