முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எம்.ஜி.ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் தெரியும்... என்.எஸ்.கிருஷ்ணன் அலிபாபாவாக நடித்தது தெரியுமா?

எம்.ஜி.ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் தெரியும்... என்.எஸ்.கிருஷ்ணன் அலிபாபாவாக நடித்தது தெரியுமா?

என்.எஸ்.கிருஷ்ணன்

என்.எஸ்.கிருஷ்ணன்

எம்.ஜி.ஆர் அலிபாபா 40 திருடர்களும் படத்தில் நடிப்பதற்கு முன்பே 14 வருடங்களுக்கு முன்பு என்.எஸ்.கிருஷ்ணன் அதே படத்தில் நடித்துள்ளார்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆயிரத்தோரு இரவுகளில் இடம்பெற்ற அலிபாபாவும் 40 திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும் கதைகள் தமிழில் படமாக்கப்பட்டன. அந்நிய நிலம், அந்நிய கலாச்சாரத்தைக் கொண்ட இந்தப் படங்கள் தமிழக மக்களால் அமோகமாக வரவேற்கப்பட்டன. முழுக்க முஸ்லீம் கதாபாத்திரங்களைக் கொண்ட இந்தப் படங்கள் எவ்வித உறுத்தலும் இன்றி தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டன.

1955 இல் வண்ணப் படமாக வெளிவந்த எம்ஜிஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் ரசிகர்களால் மறக்க முடியாத திரை அனுபவமாக அமைந்தது. எம்ஜிஆர் அலிபாபாவாகவும், அவரது காதலியாக பானுமதியும் நடித்தனர். பி.எஸ்.வீரப்பா, சக்கரபாணி, கே.தங்கவேலு, எம்.என்.ராஜம் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்க, டி.ஆர்.சுந்தரம் படத்தை இயக்கினார். எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசைக்கு மருதகாசி பாடல்கள் எழுதினார். தென்னிந்தியாவின் முதல் முழுநீள வண்ணத் திரைப்படமாக வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும் 100 நாள்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.

எம்ஜிஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் எடுக்கப்படுவதற்கு 14 வருடங்களுக்கு முன்பு 1941-ல் அதே கதை அதே பெயரில் படமாக்கப்பட்டது. அதில் அலிபாபாவாக பிரதான வேடத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தார். நகைச்சுவை நடிகராக முப்பது மற்றும் நாற்பதுகளில் ஏறக்குறைய எல்லா படங்களிலும் இடம்பெற்று வந்த கலைவாணர், முழுநீள திரைப்படங்கள் அல்லாமல் குறும்படங்களாக எடுத்து நடித்து வந்தார். அவர் பிரதான வேடத்தில் நடித்த முழுநீளத் திரைப்படம் அலிபாபாவும் 40 திருடர்களுமாகும்.

இதில் அலிபாபாவாக என்.எஸ்.கிருஷ்ணனும், அவரது கொடுமைக்கார அண்ணன் காசீமாக ஹிரண்யாவும் நடித்தனர். இவர் கன்னடத்தின் பிரபல நடிகர். காசீமிடம் அடிமையாக இருக்கும் அலிபாபா காதலிக்கும் மார்ஜியானாக டி.ஏ.மதுரம் நடித்தார். அவர்தான் நாயகி. கொள்ளைக்கூட்டத் தலைவனாக கே.பி.காமாட்சி நடித்தார். அவர்தான் படத்தின் பாடல்களை எழுதினார். யானை வைத்தியநாதரும் ஒரு பாடலை எழுதினார். என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் காசிம் தனது தாயையும், தம்பி அலிபாபாவையும் வீட்டிலிருந்து துரத்தி விடுவான். அவனுக்கு தன்னிடம் அடிமையாக இருக்கும் மார்ஜியானா மீது மோகம் இருக்கும். ஆனால் மார்ஜியானா அலிபாபாவை விரும்புவாள். இதனை தெரிந்து கொண்ட காசீம் அலிபாபாவை அடித்துத் துரத்திவிட்டு, மார்ஜியானவை தன்னுடன் அழைத்துச் செல்வான். தாய் சொன்னபடி மாமா வீட்டிற்கு செல்லும் அலிபாபா வழி தவறி, ஓரிடத்தில் ஓய்வு எடுக்கையில், திருடர்கள் ஒரு குகையிலிருந்து வெளிப்படுவதையும், அவர்கள் மந்திரம் கூறி குகைக் கதவை மூடி திறப்பதையும் பார்ப்பான்.

அவர்கள் கிளம்பிச் சென்ற பின் அதே மந்திரத்தை கூறி, உள்ளேச் சென்று அவர்கள் கொள்ளையடித்த செல்வத்தில் கொஞ்சம் எடுத்து வருவான். தம்பி திடீர் செல்வந்தனானதை அறிந்த காசிம் அதன் பின்னணியை தெரிந்து கொண்டு, அதே குகைக்குச் சென்று செல்வங்களை மூட்டைக் கட்டுவான். வெளியேறுவதற்கான மந்திரம் மறந்து போகும். திருடர்கள் வந்து காசிமை கொன்றுவிடுவார்கள்.

அண்ணனைத் தேடி வரும் அலிபாபா குகையில் அண்ணனின் பிணத்தை கண்டெடுத்து, அதனை உரிய முறையில் அடக்கம் செய்வான். திருடர்கள் திரும்பி வந்துப் பார்க்கையில் குகையில் காசிமின் பிணம் இருக்காது. யாரோ குகைக்கு வந்து போனதை அறிந்து கொள்வார்கள். அலிபாபா தவறவிட்ட செருப்பை வைத்து அவனை கண்டுபிடித்து கொலை செய்ய திட்டமிடுவார்கள். அலிபாபா எப்படி அவர்களிடமிருந்து தப்பித்தான் என்பது கதை.

சுவாரஸியமான இந்தக் கதை 1941 இல் திரைப்படமாக வந்த போது அத்தனை வரவேற்பை பெறவில்லை. இப்போது அந்தப் படத்தின் பிரதிகளும் இல்லை. 14 வருடங்களுக்குப் பிறகு இதே கதையை படமாக்கையில் மார்ஜியானா காசிமின் அடிமை என்பதை, அமீர் காசிம் கான் என்ற மன்னரிடம் அடிமையாக இருக்கும் பாக்தாத் நடன அழகியாக மாற்றினர். ஹீரோயிசத்தை கூட்டினர், பாடல்களை மெருகேற்றி, சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். முதல் முழு நீள வண்ணப்படம் என்பதால் திரையரங்கில் கூட்டம் களைகட்டியது. படமும் வெற்றி பெற்றது.

1941 அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் புளிமூட்டை என்ற கதாபாத்திரத்தில் டி.ஆர்.ராமசாமி நடித்திருந்தார். இவர் கலைவாணர் கோஷ்டியைச் சேர்ந்தவர். புளிமூட்டை கதாபாத்திரம் பேசப்பட்டதால் அவரை புளிமூட்டை ராமசாமி என்று கலைவாணர் அழைக்க, அதுவே அவரது பெயரானது.

1941 மார்ச் 15 ஆம் தேதி வெளியான கலைவாணரின் அலிபாபாவும் 40 திருடர்களும் இன்று 82 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema