உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ராஜேந்திரன் மற்றும் ஆரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஆர்டிகள் 15 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இந்தி திரைப்படத்திற்கு நியாயம் சேர்த்து உள்ளதா என்பதை பார்ப்போம்.
ஒரு மனிதன் இந்தியாவில் வாழ வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பற்றி பேசியுள்ள சட்ட பிரிவான Article 15, என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், சமகால சூழலில் சாதியத்தின் பெயரால் மனிதர்கள் எதிர்கொள்ளும் சித்திரவதைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தி திரைப்படத்தில் வட இந்திய மாநிலங்களில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகளை படக்குழுவினர் கையாண்டு இருந்த நிலையில், அதனை அப்படியே மறுஉருவாக்கம் செய்யாமல் தமிழுக்கு ஏற்ப இங்கு உள்ள பிரச்சனைகளை பேசி உள்ள விதம் பலரின் நெஞ்சுக்கும் நெருக்கமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதியைப் பார்த்த மாமன்னன் குழுவினர்!
திரைப்படத்தை பார்க்கும் பொழுது காட்சிக்கு காட்சி தமிழகத்தில் நடைபெற்ற பல சாதிய நிகழ்வுகள் கண் முன் வருவதை தவிர்க்க முடியவில்லை. உதயநிதி ஸ்டாலின், மனிதன் திரைப்படத்திற்கு பிறகு நல்ல கதை ஒன்றை தேர்வு செய்து நேர்த்தியான நடிப்பை வழங்கி உள்ளார் என்ற எண்ணம் படத்தை பார்க்கும் பொழுது ஏற்படுகிறது. ஆயுஷ்மான் குரானா நடித்திருந்த இந்தி கதாப்பாத்திரத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல், முழுமையான நடிப்பை உதயநிதி வழங்கியுள்ளது பாராட்டை பெருகிறது. சாதி பெயர்களை சுட்டிக்காட்டி இந்தியில் உருவாகியிருந்த காட்சிகள் தமிழில் சென்சாரில் மறுக்கப்பட்டுள்ளது சற்று ஏமாற்றமாக அமைந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அருண்ராஜா காமராஜின் சமூக எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் வசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் இல்லாமல் இருப்பது படத்தில் தொய்வு ஏற்படாமல் இருக்க பெருமளவு உதவியிருக்கிறது. தமிழ் சினிமாவில் கர்ணன், ஜெய்பீம் படங்கள் வரிசையில் சமூகநீதி திரைப்படமாக நெஞ்சுக்கு நீதி தற்போது இணைந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.