• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Nayattu: நாயாட்டு தலித் விரோத திரைப்படமா?

Nayattu: நாயாட்டு தலித் விரோத திரைப்படமா?

நாயாட்டு

நாயாட்டு

பிரச்சனைக்குரிய இளைஞனும், அவன் சார்ந்த அமைப்புகளும் மொத்தமாக பதினைந்து நிமிடத்துக்கும் குறைவாகவே காட்டப்படுகிறார்கள்.

  • Share this:
மலையாளத்தில் நாயாட்டு என்றால் வேட்டை என்று பொருள். நாயாட்டில் மூன்று போலீஸ் அதிகாரிகள் அவர்கள் செய்யாத குற்றத்துக்காக வேட்டையாடப்படுகிறார்கள். இந்தப் பிரச்சனைக்கு மையப்புள்ளியாக காட்டப்படுவது ஒரு தலித் இளைஞரும், அவர் சார்ந்த சாதி அமைப்பும். ஆகவே இது தலித்துகளுக்கு எதிரான படம் என்று தமிழில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நாயாட்டு படத்தை இயக்கியவர் மார்டின் ப்ரக்காட். சார்லி படத்தின் இயக்குனர் என்றால் சட்டென்று தெரியும். சார்லிக்குப் பின் ஆறு வருட இடைவெளிவிட்டு நாயாட்டுவை இயக்கியுள்ளார். போலீஸான நிமிஷாவுக்கு உறவுக்கார இளைஞனால் பிரச்சனை வருகிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கப்படும் அவன், மதில் சுவற்றில் எச்சில் துப்ப, போலீஸ்காரரான ஜோஜு ஜார்ஜுடன் தகராறு ஆகிறது. காவல் நிலையத்துக்குள் வைத்து அதே இளைஞனுக்கும் இன்னொரு போலீஸ்காரரான குஞ்சாகா போபனுக்கும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. கோபமாகும் குஞ்சாகா போபனும், ஜோஜு ஜார்ஜும் அவனை லாக்கப்பில் அடைக்க, உடன் வந்தவர்கள் பிரச்சனையில் இறங்குகிறார்கள். துப்பாக்கி காட்டி மிரட்டியே அவர்களை சமாளிக்க முடிகிறது.

இது நடந்த சில நிமிடங்களில் அந்த இளைஞனை விடுவிக்கும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறது. அவன் சார்ந்த அமைப்பின் தலைவர் முதல்வரை சந்தித்து, சில தினங்களில் நடக்கயிருக்கும் இடைத்தேர்தலுக்குப் பின் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்யும்படி கேட்டுக் கொள்கிறார்.

இந்நிலையில், நிமிஷா, குஞ்சாகா போபன், ஜோஜு ஜார்ஜ் செல்லும் ஜீப் இடித்து பிரச்சனை செய்த கூட்டத்தில் ஒருவன் இறந்து போகிறான். ஜீப்பை ஓட்டி வந்தது வேறொருவன். ஆனால், பழி இவர்கள் மூவர் மேலும் விழுகிறது. இடைத்தேர்தலில் ஜெயிக்க தலித் சமூகத்தின் வாக்குகள் தேவை என்ற நிலையில், மூன்று போலீஸ்காரர்களையும் பலிகடா ஆக்க நினைக்கிறார் முதல்வர். மூவரும் தப்பித்து தலைமறைவாகிறார்கள். பாதிக்கப்பட்ட இளைஞனின் சமூகம் போராட்டம், கடையடைப்பு என இறங்குகிறது. இறுதியில் மூன்று போலீஸ்காரர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இரண்டு பேர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் விடுவிக்கப்படுவார்களா, சிறையில் தள்ளப்படுவார்களா இல்லை என்கவுண்டர் செய்யப்படுவார்களா என்பதை பார்வையாளர்களின் யூகத்துக்குவிட்டு படம் முடிகிறது.

ஒரு சாதாரண பிரச்சனை, அரசியல் பின்னணியில் எப்படி மாநில பிரச்சனையாக விஸ்வரூபம் கொள்கிறது, மூன்று அப்பாவிகளை பலிகடா ஆக்குகிறது என்பதை நாயாட்டு சொல்கிறது. இங்கு பிரச்சனையைவிட, அந்தப் பிரச்சனை எப்படி விஸ்வரூபம் கொள்கிறது என்பதே முக்கியம்.  பிரச்சனைக்குரிய இளைஞனும், அவன் சார்ந்த அமைப்புகளும் மொத்தமாக பதினைந்து நிமிடத்துக்கும் குறைவாகவே காட்டப்படுகிறார்கள். தலித் என்று எங்கும் அழுத்தி கூறப்படுவதில்லை. எனினும், இது தலித் விரோத படம், தலித்துகளுக்கு பயந்து போலீஸ்காரர்கள் எங்காவது தலைமறைவாக ஓடியிருக்கிறார்களா? அரசை நிர்ப்பந்திக்கும் அளவுக்கு தலித் அமைப்புகள் வலுப்பெற்றுவிட்டதா? படத்தில் காட்டப்படும் எல்லாமே பொய் என்று தமிழ் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இவை உண்மையா இல்லையா என்று ஆராய்வதைவிட நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது.

நம்பூதிரி பெண்கள் வரும் சத்தம் கேட்ட உடனே செலுலாயிட் திரைப்படத்தின் நாயகியும், அவள் தோழியும் வரப்போரம் தங்களை மறைத்துக் கொள்வார்கள். தொட்டால் தீட்டு போன்று பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கப்பட்ட சமூகங்கள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததை காட்சியப்படுத்தியது செலுலாயிட் திரைப்படம்.

இன்னொரு திரைப்படத்தில் தலித்தான சீனிவாசன், ஆதிக்க சாதிகளான நம்பூதிரி, நாயர்களால் தலித்துகள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்று நாடகம் போடுவார். நாடக ஒத்திகையின் போது, நம்பூரிதியான மோகன்லால், பல நாள் பட்டினியில் கிடக்கும் தனது குடும்பத்திற்காக பழுக்காத வாழைக்குலையொன்றை சமைத்து உண்பதற்காக திருடி எடுத்துச் சென்று கொண்டிருப்பார்.

நம்பூதிரிகளின் சாதிய வன்முறையை காட்சிப்படுத்திய அதேநேரம், காலமாற்றத்துக்கு இணங்க முடியாத பல நம்பூதிரி குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் அழிந்ததையும் மலையாள சினிமா காட்டியது. நம்பூதிகளுக்கு எந்தவிதத்திலும் குறையாத சாதிய வன்மம் கொண்ட முஸ்லீமாக பலோரி மாணிக்கம் திரைப்படத்தில் முஸ்லீமான மம்முட்டியே நடித்தார்.

மலையாள திரைப்படங்கள் அனைத்தும் அப்பழுக்கற்றவை அல்ல. பிற்போக்குத்தனமான படங்களும் உண்டு. தமிழர்களை பல படங்கள் வன்மத்துடன் காட்சிப்படுத்தியிருக்கின்றன. அதேநேரம், சாதி, இன, மொழி, மத, அரசியல் அடையாளங்களை வெளிப்படையாக முன்வைத்து விமர்சிக்கும் சுதந்திரம் மலையாள சினிமாவில் உண்டு. பாபா கல்யாணிக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மலையாளிகள் விஸ்வரூபம் தமிழகத்தில் பிரச்சனையை சந்தித்தபோது கேரளாவிலும் போராட்டம் நடத்தினார்கள். நம்முடைய விமர்சனங்கள் அவர்களது பார்வையையும் அடையாள அரசியலுக்குள் குறுக்கிவிடும். ட்ரான்ஸ், செலுலாயிட், அஞ்சாம் பாதிரா, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள் உருவாகாமலே போய்விடும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: