Home /News /entertainment /

O2 Movie Review| நயன்தாராவின் ஓ2 படம் எப்படி இருக்கிறது?

O2 Movie Review| நயன்தாராவின் ஓ2 படம் எப்படி இருக்கிறது?

O2 படத்தில் நயன்தாரா

O2 படத்தில் நயன்தாரா

நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கியிருக்கும் ஓ-2 திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி யில் வெளியாகியுள்ளது.

ஆக்சிஜன் குறிக்கும் ஓ2  என்பதை தலைப்பாக வைத்து விக்னேஷ் இயக்கியிருக்கும் திரைப்படம் காற்றின் முக்கியத்துவத்தை கூற முயற்சித்துள்ளது. கோவையில் இருந்து கொச்சி செல்லும் பேருந்து எதிர்பாராதவிதமாக நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணுக்கடியில் புதைந்து விடுகிறது.  அதில் இருக்கும் பதினொரு நபர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் கூற முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

இயற்கை மீது ஆர்வம் கொண்ட நயன்தாராவையும், சுவாச பிரச்சனை கொண்ட அவரின் மகனையும் சுற்றி கதை எழுதப்பட்டுள்ளது. தன் மகனின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் சிலிண்டருடன் கொச்சி நோக்கி புறப்படுகிறார் நயன்தாரா. அவர் பயணிக்கும் பேருந்தில் போதை மருந்து கடத்தும் காவல் அதிகாரி, செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகும் நபர், முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள்  பயணிக்கின்றனர்.

4 மணி நேரத்தில் முடிய வேண்டிய பேருந்து  பயணம். ஆனால்  மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணுக்கடியில் பேருந்து சிக்கிக்கொள்கிறது. 11 நபர்கள், 10 மணி நேரம் மட்டுமே அங்கு இருக்கும் ஆக்‌சிஜனை கொண்டு உயிர் வாழ முடியும் என்ற சூழல். யார் பிழைப்பார், யார் மரணிப்பார் என்ற கேள்வியுடன் படம் நகர்கிறது.

அதிலும் போதை கடத்தலுக்கு பேருந்தில் பயணித்த காவல் அதிகாரி,  மற்றவர்களை என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்த படக்குழு முயற்சித்திருக்கிறது. ஆனால் அந்த கதாபாத்திரம் நயன்தாராவிற்கு எதிராக செயல்பட்டாலும் பார்பவர்கள் மனதில் வெறுப்பை உருவாக்கவில்லை. மேலும் ஆக்‌சிஜன் குறைய குறைய அங்கு இருப்பவர்கள் சிறுவனின் ஆக்சிஜன் சிலிண்டரை குறி வைக்கின்றனர். அதை கைபற்றினார்களா இல்லையா? பேருந்தில் இருந்தவர்கள் மீட்கபட்டார்களா? தன் மகனை நயன்தாரா காப்பாற்றினார? என்பது மீதி கதை.

அவர் எங்களை விட்டு சென்று விட்டார்.. கண்ணீர் விட்டு அழுத பிரபல சீரியல் நடிகை!

எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துனா, பார்த்துகிட்டு சும்மா இருக்கமாட்டா, அது மரமா இருந்தாலும் சரி. மலைகளை அதிகமா குடைவதால் சாதாரண மலைக்கே, நிலச்சரிவு ஏற்படுகிறது போன்ற வசனங்கள் திரைக்கதையுடன் கடந்து போனாலும், கவனிக்க வைக்கின்றன.

ஓ2 திரைப்படத்தின் பெரும் பகுதி மண்ணுக்கடியில் சிக்கிக்கொள்ளும் பேருந்திலேயே நகர்கிறது. அந்த சிறிய இடத்தை மிக நேர்த்தியாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் தமிழ். அதிலும் எந்த ஒரு காட்சியும் தொய்வு ஏற்படாத வகையில் ஒவ்வொரு பதிவு செய்துள்ளார். அவரின் மெனக்கெடல்களுக்கு பக்கமலமாக விஷால் சந்திரசேகர் இசை அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நயன்தாரா, ஆடுகளம் முருகதாஸ், சிறுவன் ரித்விக், இயக்குனர் பரத் நீலகண்டன், மறைந்த நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்தி நடித்துக் கொடுத்துளளனர்.

ஆக்சிஜன் முக்கியத்துவத்தை கூறும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் அழுத்தமான காட்சிகள் இல்லாதது மைனஸாக அமைந்திருக்கிறது. அதேபோல்  ஆக்சிஜனுக்காக ஒருவரை ஒருவர் தாக்க முற்படும் காட்சியும் பதற்றத்தை உருவாக்கவில்லை.  மேலும் படத்தின் நாயகி நயன்தாரா கதாபாத்திரத்திற்கும் போதிய முக்கியத்துவம் இல்லை. இதனால் சூப்பராக வந்திருக்க வேண்டிய படம் சுமாராக இருக்கிறது என்றே சொல்ல வைக்கிறது. இருந்தாலும் ஓ2 படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
Published by:Vijay R
First published:

Tags: Movie review, Nayanthara

அடுத்த செய்தி