Home /News /entertainment /

நா.முத்துக்குமார்..! - ஆனந்த யாழை மீட்டியவனின் 5-ம் ஆண்டு நினைவு நாள்

நா.முத்துக்குமார்..! - ஆனந்த யாழை மீட்டியவனின் 5-ம் ஆண்டு நினைவு நாள்

நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார்

மழையை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் வெயிலையும் ரசிக்க கற்றுத்தந்த நா.முத்துக்குமார்

  41வது வயதிலேயே உலகை விட்டு பிரிந்து விடாலும் இன்னும் தனது பாடல்களால் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இசையோடு இழையோடும் நா.முத்துக்குமாரின் 5-வது ஆண்டு நினைவு நாள் இன்று..

  காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமார், நான்கு வயதிலே தனது தாயின் அன்பை இழந்தவர். தமிழாசிரியரான அவரது தந்தை, தனது ஊதியத்தின் 20 சதவீதத்தில் புத்தகங்கள் வாங்கிச் சேர்த்து, வீட்டிலேயே நூலகம் கட்டி தன் மகனுக்கு தமிழின் முகத்தைக் காட்டி வளர்த்தார். இயற்பியல் மாணவரான முத்துக்குமார் தமிழின் ஈர்ப்பினால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றார். யாப்பிலக்கணத்தை முதுகலையில் முறையாகப் பயின்று சங்க இலக்கியங்களை ஆர்வத்துடன் வாசித்து முடித்திருந்தாலும் அந்தப் புலமையை தன் வரிகளில் திணிக்காமல் எல்லோராலும் ரசிக்கக்கூடிய எளிமையான வரிகளை மட்டுமே மெட்டுக்குள் சேர்த்தார் முத்துக்குமார்.

  உதவி இயக்குநர் பயணம் 

  குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ள நா.முத்துக்குமார், ஆரம்பத்தில் திரைப்பட இயக்குனராக விரும்பியே பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். நான்கு வருடம் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், அங்கு கிடைத்த சீமானின் நட்பு மூலம் அவர் இயக்கிய வீரநடை படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார்.

  முத்துக்குமார் - யுவன் கூட்டணி

  ஒரு பாடலாசிரியர் தன் திறமையை நிரூபிக்க வேண்டுமென்றால் அவருடைய அலைவரிசைக்கு ஏற்ப ஒரு இசையமைப்பாளர் அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். அப்படி நா.முத்துக்குமாருக்கு கிடைத்த ஒரு இசையமைப்பாளர்தான் யுவன் ஷங்கர் ராஜா. ஆரம்ப காலத்தில் யுவனின் கூட்டணியில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களே அவரை கவனிக்கப்பட வேண்டிய பாடலாசிரியராக மாற்றியது.

  நவீன கால தமிழ் சினிமாவில் காதல் பிரிவையும் காதல் தோல்வியையும் நா.முத்துக்குமார் அளவு வரிகளில் கொண்டு வந்த பாடலாசிரியர் நிச்சயம் இருக்க முடியாது. முத்துக்குமார் எழுதிய அமரத்துவம் வாய்ந்த பல பாடல்களில் அவரது காதல் தோல்வி பாடல்களே முதன்மையானது.

  தேசிய விருது

  மழையை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் வெயிலையும் ரசிக்க கற்றுத்தந்த நா.முத்துக்குமார், அதேபோல் தாயின் அன்பை மட்டுமே அதிகம் பேசிய தமிழ் திரையுலகில் தந்தையின் அன்பையும் பதிவு செய்தவர். தந்தை – மகள் பாசத்தை முன்னிறுத்தி ”தங்க மீன்கள்” படத்துக்காக இவர் எழுதிய ”ஆனந்த யாழை” பாடல் இவருக்கு முதல் தேசிய விருதை பெற்றுத் தந்தது.

  ”மழை மட்டுமா அழகு, சுடும் வெயில் கூட தான் அழகு. மலர் மட்டுமா அழகு, விழும் இலை கூட ஒரு அழகு” என அன்பின் வழியே உலகை ரசித்த முத்துக்குமார், சைவம் படத்துக்காக அதை வரிகளாக்கி தனக்கான இரண்டாவது தேசிய விருதை பெற்றார்.

  தொடர்ந்து பல வருடங்களாக, வருடத்தில் அதிக பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையை தன்னோடு வைத்துக் கொண்ட நா.முத்துக்குமார், தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், பால காண்டம் போன்ற பல கவிதை தொகுப்புகளையும் சில்க் சிட்டி எனும் நாவலையும் எழுதியுள்ளார். இதுபோக அஜித் நடித்த கிரீடம் படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  92-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்கள் இதில் 2 தேசிய விருது ஒரு மாநில விருது போன்றவை இவருடைய திரை பயணத்தை அலங்கரித்தாலும் தன்னுடைய 41-வது வயதிலேயே இவர் உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது என்பது ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும் தமிழ் ரசிகர்கள் இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சோகமாகவே வைத்திருந்து வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Cinema, Na Muthukumar, Poet, Tamil Cinema, Yuvan Shankar raja

  அடுத்த செய்தி