• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • My Name - ஒரு பெண்ணின் பழிவாங்கும் கதை...!

My Name - ஒரு பெண்ணின் பழிவாங்கும் கதை...!

மை நேம்

மை நேம்

மை நேம் யூகிகக் கூடிய கதை, ட்விஸ்டுகளும் பெரிதாக இல்லை, இருக்கும் ஒன்றிரண்டும் சுமாரானவை. எனினும் எட்டு எபிசோடுகளை போராடிக்காமல் கொண்டு போயிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் அதற்கு துணை செய்கின்றன. 

  • News18
  • Last Updated :
  • Share this:
மை நேம் தென் கொரியாவில் தயாரான புதிய வெப் தொடர். அக்டோபர் 15 நெட்பிளிக்ஸில் வெளியானது. ஸ்குயிட் கேம் உலக அளவில் அதிக பார்வையாளர்களை சென்றடைந்ததால் கொரிய வெப் தொடர்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டிருக்கிறது. மை நேம் வெப் தொடரையும் அதிகம் பேர் பார்த்து வருகிறார்கள்.

மை நேம் தொடரின் கதை நாம் பல திரைப்படங்கள், வெப் தொடர்களில் பார்த்ததே. அப்பாவின் மரணத்துக்கு பழிவாங்கும் மகள். நாயகி Yoon Ji-woo ஒரு பள்ளி மாணவி. அவளது அப்பா ஒரு கேங்ஸ்டர். அவர் தலைமறைவாக இருக்கையில், நாயகியின் சக மாணவிகள், அவளது அப்பாவை முன்னிறுத்தி அவமானப்படுத்துகிறார்கள். தொடர்ந்து இந்த அவஸ்தைக்குள்ளாகும் மகள், அப்பாவுக்கு போன் செய்கிறாள். அவரை குற்றப்படுத்துகிறhள். மகளை சமாதானப்படுத்த மறைவிடத்திலிருந்து வெளியே வருகிறார் அப்பா. அவர் அவளை தேடி வருகையில், அவளது வீட்டு கதவுக்கு வெளியே ஒருவனால் கொல்லப்படுகிறார். இந்த கொலையை கதவிலிருக்கும் லென்ஸ் வழியாக மகள் பார்க்கிறாள். போலீஸால் அந்தக் கொலையாளியை கண்டுப்பிடிக்க முடியாமல் போகிறது.

நாயகி அப்பாவின் கொலைகாரனை பழிவாங்க, அவரது நண்பரும் கேங் லீடருமான Choi Mu-jin  இடம் வருகிறாள். அவர் அவளுக்கு அனைத்துப் பயிற்சிகளும் தருகிறார். பல வருடங்கள் உடலையும், மனதையும் திடப்படுத்திக் கொண்டபின் காவல்துறையில் நாயகி சேர்கிறாள். அவளது அப்பாவை கொன்ற துப்பாக்கி ஒரு போலீஸ்காரனுடையது. அவன் யார் என்று கண்டுபிடிக்க, போதைப் பொருள் தடுப்புப்பிரிவில் தன்னை இணைத்துக் கொள்கிறாள். அங்கிருந்தபடி Choi Mu-jin னுக்கு தகவல்கள் தந்து அவனை தப்பிவிக்க உதவுகிறாள். இந்த நேரம், தங்களின் கூட்டத்தில் ஒரு கறுப்பு ஆடு இருப்பது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கு தெரிய வருகிறது. இந்த அதிகாரி மீதுதான் நாயகிக்கு சந்தேகம். அவருக்கு தனது அப்பாவின் கொலையாளியை தெரியும் என்று நினைக்கிறாள்.ஒருகட்டத்தில் அந்த துப்பாக்கி யாருக்கு சொந்தமானது என்பதை நாயகி கண்டுபிடிக்கிறாள். ஆனால், அந்த போலீஸ்காரர், அவளது அப்பா கொல்லப்படும் முன்பே இறந்து போயிருக்கிறார். இப்போது நிகழ்வுகள் சிக்கலாகின்றன. இந்தப் பக்கம் Choi Mu-jin னுக்கு புதிதாக ஒரு வில்லன் முளைக்கிறான். நாயகி தனது அப்பாவை கொலை செய்தவனை கண்டுபிடித்தாளா, பழிவாங்கினாளா என்பதை ரத்தம் தெறிக்க கூறுகிறது மை நேம்.

இதுபோன்ற கதைகளில் பக்கத்தில் அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கிற நபர்தான் வில்லனாக இருப்பார். அதே ட்விஸ்ட்தான் இந்தக் கதையிலும். தொடரின் மிக ஆரம்பத்திலேயே சாதாரண அறிவுள்ள ஒருவரையாலேயே இதனை ஊகித்துவிட முடியும். வில்லன் யார் என்று தெரிந்ததும், நாயகி 180 டிகிரி தனது மனத்தை மாற்றிக் கொள்ள வேண்டிவருமே, அதனை எப்படி ஏற்றுக்கொள்ளும்விதத்தில் காட்டப் போகிறார்கள் என்பதே இந்தத் தொடரின் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது. பழசுதான் என்றாலும், அதனை ஓரளவு ஏற்றுக் கொள்ளும்படி எடுத்திருக்கிறார்கள்நாயகியாக நடித்திருக்கும் Han So-hee பிரமாதமாக சண்டையிடுகிறார். கத்திச் சண்டையில், நம்மீதே கோடு போடுவார்களோ என்று அஞ்சும் அளவுக்கு அட்டகாசமாக எடுத்துள்ளனர். முக்கால் அடி கத்தியை வெண்ணையில் செருகுவது போல் உடம்பில் பலமுறை செருகி எடுத்தும், அதிசயமாக அனைவரும் உயிர் பிழைத்து, இரண்டே நாளில் பழையபடி நடமாட ஆரம்பிக்கிறார்கள்

Also read... திருட்டுப் பயலே 2 இந்தி ரீமேக்கில் நடிக்கும் ஊர்வசி ரவுத்லா...!

மை நேம் யூகிகக் கூடிய கதை, ட்விஸ்டுகளும் பெரிதாக இல்லை, இருக்கும் ஒன்றிரண்டும் சுமாரானவை. எனினும் எட்டு எபிசோடுகளை போராடிக்காமல் கொண்டு போயிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் அதற்கு துணை செய்கின்றனஇந்தத் தொடரை இயக்கியவர் Kim Jin-min. சென்ற வருடம் இவர் இயக்கிய Extracurricular  வெப் தொடர் வெளிவந்தது. அந்தத் தொடர் பற்றிய விரிவான கட்டுரையும் நமது தளத்தில் வெளிவந்தது. இவர் தொடர்ச்சியாக வெப் தொடர்களை இயக்கி வருகிறார். அனைத்தும் ஓரளவு புகழ்பெற்றவை. இன்னும் சினிமா பக்கம் திரும்பவில்லை. பத்துக்கும் மேற்பட்ட வெப் தொடர்களை இயக்கிவிட்டு இன்னும் பியூச்சர் ஃபிலிம் இயக்காமல் இருப்பது இவர் ஒருவராகத்தான் இருப்பார். முன்பு ஊர்ப்பக்கம் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு போஸ்டர் அடிக்கையில் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் என தனித்து குறிப்பிடுவார்கள். மை நேம் அப்படியொரு சண்டைப் படம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: