அரசியல் காரணத்துக்காக சிலர் என்னை தமிழ் இனத்துக்கு எதிரானவராக சித்தரிக்கின்றனர் - ‘800’ பட சர்ச்சைக்கு முரளிதரன் விளக்கம்

‘800’ பட சர்ச்சை குறித்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார்.

அரசியல் காரணத்துக்காக சிலர் என்னை தமிழ் இனத்துக்கு எதிரானவராக சித்தரிக்கின்றனர் -   ‘800’ பட சர்ச்சைக்கு முரளிதரன் விளக்கம்
முத்தையா முரளிதரன்
  • Share this:
இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரராக அறியப்படுபவர் முத்தையா முரளிதரன். 133 டெஸ்டுகள், 350 ஒன் டே மேட்ச், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல்வாதிகள், திரையுலகினர் உள்ளிட்டோர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். அதேபோல் ட்விட்டர் பக்கத்தில் #ShameonVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்து அறிக்கை முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, “இதுநாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி. தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன்.


என்னைப் பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலையகத் தமிழர்கள் தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தோம்.

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போரால் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கும் தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியிலேயே தான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம் தான் ‘800’.இது இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான். நான் 2009-ம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019-ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள் தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்.

ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள். போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு எது நடக்கும் என்பது தெரியாது. என் பள்ளிக் காலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான். வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்தால் கடந்த 10 வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009-ம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கிற கருத்தினைத் தெரிவித்தேன். ஒரு போதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை. ஆதரிக்கவும் மாட்டேன்.

அடுத்து எனது பள்ளிக் காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன் தான். எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றுமொரு தவறான செய்தி. தமிழ் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர் என முரளி கூறுகிறார் என சொல்கின்றனர். இயல்பாகவே சிங்களர்கள் மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்வதால் எல்லோரிடமும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்யும். அது இயற்கை. அது என்னிடத்திலும் இருந்தது. காரணம் எனது பெற்றோரும் கூட அப்படிப்பட்ட சிந்தனையில் தான் இருக்கிறார்கள்.

அதையும் மீறி கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் பள்ளியின் கிரிக்கெட் அணியில் என்னை பங்கேற்க தூண்டியது. எனது முயற்சியால் அணியில் சேர்ந்தேன். எனது திறமையால் நான் ஒரு தவிர்க்க இயலாதவனாக மாறினேன். எனவே தான் தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிந்து உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள் என்ற எண்ணத்தில் தான் கூறினேன்.

என்னைப் பொறுத்தவரையில் சிங்களர்களாக இருந்தாலும், மலையக தமிழர்களாக இருந்தாலும், ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒரு மலையக தமிழனான நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளைக் காட்டிலும் ஈழ மக்களுக்கு செய்த உதவிகளே அதிகம். செய்யும் நன்மைகளை சொல்லிக்காட்டுவதை என்றைக்கும் நான் விரும்புவதில்லை ஆனால் இன்று அதை சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

ஐ.நா.வின் உணவு தூதராக இருந்த போது 2002-ம் ஆண்டு LTTE-ன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்த திட்டத்தை எடுத்துச் சென்றது முதல் பின் சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான் செய்த உதவிகளை அந்த மக்கள் அறிவர்.

போர் முடிவுற்ற பின் கடந்த 10 வருடங்களாக FOUNDATION OF GOODNESS எனது தொண்டு நிறுவனமான மூலம் ஈழ மக்களுக்கு செய்யும் உதவிகள் தான் அதிகம். ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளில் எனது தொண்டு நிறுவன கிளைகள் மூலம் குழந்தைகள் கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் என பல வகைகளில் பல உதவிகள் செய்து வருகிறேன்.மக்கள் நல்லிணக்கத்துக்காக வருடா வருடம் MURALI HARMONY CUP என்கிற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடத்தி வருகிறோம். இன்னும் இதுபோல் ஏராளமான விடயங்கள் உள்ளன.

நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்திருந்தால் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கைத் தமிழனாக பிறந்தது எனது தவறா?

இவை அனைத்தையும் விடுத்து சிலர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது. எவ்வளவு விளக்கமளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும் என்னைப் பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இவ்விளக்கத்தஒ அளிக்கிறேன்” என்றுள்ளார்.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading