அவசியம் பார்க்க வேண்டிய 5 ஸ்கான்டிநேவியன் சீரிஸ்கள்!

ஸ்காண்டிநேவியன் சிரீஸ்

குடும்ப உறவுகள், யூகிக்க முடியாத திருப்புமுனைகள் என க்ரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற சீரிஸ் இது. ஹாலிவுட்டில் இந்த சீரிஸ் தி கில்லிங் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  ஐரோப்பாவின் வடக்கே அமைந்திருக்கும் பின்லாந்த், ஸ்வீடன், நார்வே, டென்மார்க் மற்றும் ஐஸ்லேண்ட் ஆகிய ஸ்கான்டிநேவியன் நாடுகள் வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் பனிப்பொழிவை கொண்டிருக்கும். சுற்றிலும் கடலால் சூழப்பட்ட குளிர் மிகுந்த பிரதேசங்கள். துறைமுகங்கள், வெண்பனி மூடிய மலைகள் என வித்தியாசமான நிலப்பரப்பை கொண்டவை.

  ஹாலிவுட் மற்றும் பிற ஐரோப்பிய சீரிஸ்களால் கண்கள் சலித்துப் போயிருக்கும் பார்வையாளர்களுக்கு ஸ்கான்டிநேவியன் சீரிஸ்கள் புத்துணர்வை தரக்கூடியவை. அந்த நாடுகளின் நிலப்பரப்பை, அதன் கட்டமைப்பை, அங்குள்ள மக்களை இந்த சீரிஸ்கள் வாயிலாக ஓரளவு அறியலாம்.

  5. Forbrydelsen

  டென்மார்க்கில் தயாரான டிவி சீரிஸ் இது. மொத்தம் மூன்று சீஸன்கள். முதல் சீஸன் 2007 ஜனவரி 7 DR1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் ஓர் இளம் பெண் கொடூரமாகக் கொல்லப்படுகிறாள். சாரா லண்ட் என்ற பெண் போலீஸ் அதிகாரி அந்த வழக்கை விசாரிக்கிறார். அந்த கொலை வழக்கு, அரசியலுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. இறுதியில் கொலையாளி யார் என்பது யாரும் யூகிக்க முடியாத ட்விஸ்டுடன்; சொல்லப்படுகிறது. முதல் சீஸன் 50 நிமிடங்கள் ஓடக்கூடிய 20 எபிசோடுகளை கொண்டது. ஒவ்வொரு எபிசோடும், ஒருநாள் விசாரணையை விவரிப்பது போல் எடுத்திருக்கிறார்கள். இருபது நாள் முடிகையில் கொலையாளியை கண்டுபிடித்து விடுகிறார்கள். குடும்ப உறவுகள், யூகிக்க முடியாத திருப்புமுனைகள் என க்ரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கு ஏற்ற சீரிஸ் இது. ஹாலிவுட்டில் இந்த சீரிஸ் தி கில்லிங் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

  4. Wisting

  நார்வேயில் தயாரான சீரிஸ் இது. படத்தின் ஆரம்பமே அமர்க்களப்படுத்தும். டிடெக்டிவ் வில்லியம் விஸ்டிங், அவரது நிருபரான மகள், இருவரும்தான் பிரதான கதாபாத்திரங்கள். பனிமூடிய பள்ளத்தாக்கில் ஒரு பிணம் கிடைக்கிறது. முதல்கட்ட பரிசோதனைக்குப் பிறகு அதுவொரு அமெரிக்கர் என்ற முடிவுக்கு வருகிறார்கள். தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அமெரிக்காவின் கொடூரமான சீரியல் கில்லர் அவன் என தகவல் வருகிறது. இரண்டு அமெரிக்க அதிகாரிகள் நார்வே வருகிறார்கள். தொடரும் விசாரணையில், கொல்லப்பட்டது சீரியல் கில்லர் அல்ல, கொன்றவன்தான் சீரியல் கில்லர், அவன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்பது தெரிய வருகிறது. முதலில் அசட்டையாக இதனை அணுகுகிறது நார்வே போலீஸ். சீரியல் கில்லரின் கில்லிங் பேட்டர்னை வைத்து தேடுகையில், அவனால் கொல்லப்பட்டவர்கள் என பெரிய லிஸ்டே கிடைக்கிறது. விஸ்டிங் உங்களை சீட் நுனியில் உட்கார வைக்கும்.

  3. The Valhalla Murders

  இது ஐஸ்லேன்டில் எடுக்கப்பட்ட சீரிஸ். உண்மை நிகழ்வுகளின் பின்னணியில் இதனை எடுத்திருக்கிறார்கள். அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் பல வருடங்களுக்கு முன்பு நடந்த மிஸ்ட்ரி ஒன்றை ஓபன் செய்கிறது. அதனை பிரமாதமான திரை அனுபவமாக்கி இருக்கிறார்கள். கட்டா என்ற பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பவர் அசத்தியிருக்கிறார். ஐஸ்லேன்டின் முதல் தொடர்கொலைகள் இவை என்பது கூடுதல் சுவாரஸியம். 2019-ல் தயாரான இந்த சீரிஸ் அதற்கு அடுத்த வருடம் நெட்பிளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றது. இதுவரை ஒரேயொரு சீஸன் மட்டுமே வெளிவந்துள்ளது.

  2. Trapped

  இதுவும் ஐஸ்லேண்டில் எடுக்கப்பட்டதே. அங்கு எடுக்கப்பட்ட முதல் சீரிஸ் இது. ஐஸ்லேன்ட் தனியாக இருக்கும் ஒரு நிலப்பகுதி. அதில் மிகத் தனிமையான, இரண்டாயிரத்து சொச்சம் மக்களை மட்டுமே கொண்ட சின்ன துறைமுக நகரமொன்றில் இதன் கதை நடக்கிறது. உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பிணத்தை கடலில் கண்டுபிடிக்கிறார்கள். அந்த கொலையை செய்தவர்கள், அப்போது துறைமுகத்துக்கு வந்த பயணியர் கப்பலில் இருக்கலாம் என்ற முடிவில் அதில் வந்த பயணிகளை தடுத்து நிறுத்துகிறார்கள். இருப்பது மூன்று போலீஸ் அதிகாரிகள். மொத்த ப்பிரச்சனையும் அவர்கள் சமாளித்தாக வேண்டும். மர்டர் மிஸ்டரி பின்னணியில் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வை, அவர்களின் ரகசியங்களை சொல்லும் மற்றுமொரு அருமையான சீரிஸ் இது. இதுவரை மொத்தம் மூன்று சீஸன்கள் வெளிவந்துள்ளன.

  1. Bron/Broen

  டென்மார்க்கையும், சுவீடனையும் இணைக்கும் பாலத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடக்கிறது. நாகரிகமாகஉடையணிந்திருக்கும் அந்த சடலம் சரியாக டென்மார்க்கையும், சுவீடனையும் பிரிக்கும் கோட்டில் கிடத்தப்பட்டிருக்கிறது. இடுப்புக்கு மேல் ஒரு நாட்டில், இடுப்புக்கு கீழ் இன்னொரு நாட்டில். அதனை எடுக்கும் போதுதான் இடுப்புப்பகுதியில் அந்த உடல் இரண்டு துண்டாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதில் இடுப்புக்கு மேல் பகுதி ஒரு பெண்ணினுடையது, கீழ் பகுதி வேறொரு பெண்ணினுடையது. இருநாட்டு போலீஸ் அதிகாரிகளும் இணைந்து வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

  இந்த சீரிஸின் ஹைலைட்டே சுவீடன் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சேஃபியா ஹெலின். சாகா நோரன் என்ற கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட ரோபோவைப் போன்ற உடல்மொழி, மனநிலை. முன்பின் தெரியாத ஆணிடம், உடலுறவு கொள்ளலாமா என்பதை, ஒரு காபி சாப்பிடலாமா தொனியில் கேட்கிறார். ஆள் தயங்கினால், உடனடி பதில், ஓகே நோ ப்ராப்ளம் (ஓகே காபி அப்புறம் சாப்டுக்கலாம்). இந்த உலகின் எந்த க்ரைம் த்ரில்லருடனும் ஒப்பிடக் கூடிய அட்டகாசமான சீரிஸ் இது. மொத்தம் நான்கு சீஸன்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொன்றிலும் வித்தியாசமான பிரச்சனைகள். ஒவ்வொரு முடிச்சாக அதனை அவிழ்க்கும் விதம் ஆச்சரியமூட்டக் கூடியது.

  மேலே உள்ள ஐந்து சீரிஸ்களும் புதுவித அனுபவத்தை தரக்கூடியவை. Don't miss it!  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: