#HBDDearYuvan: வழித்துணை போல இசையுடன் தோன்றியதற்கு நன்றி, யுவன்!

யுவன் சங்கர் ராஜா

"பால்யத்திலும், காதலின் ஏக்கத்திலும், காதலில் திளைத்திருந்த போதும், காதலின் பிரிவின் போதும், மகிழ்ச்சியிலும், சோகத்திலும், தனிமையிலும், கொண்டாட்டங்களிலும் வாழ்க்கைப் பயணத்தின் வழித்துணையாகத் தோன்றியிருக்கிறது யுவனின் இசை...."

  • News18
  • Last Updated :
  • Share this:
இசையால் வாழ்கிறது இந்தப் பிரபஞ்சம். மனிதர்களால் நிறைந்திருக்கும் பூமியில், எத்தனை எத்தனை மொழிகள் இருக்கும் போதும், உலகப் பொதுமொழியாகப் பரவிக் கிடக்கிறது இசை. வேட்டைக் கருவிகளாலும், போர்க் கருவிகளாலும் இசையைத் தொடங்கிய ஆதிமனிதன் முதல் தற்போதைய ’இன்ஸ்டா ரீல்ஸ்’ இளைஞர்கள் வரை, வெவ்வேறு பரிணாமங்களை அடைந்திருக்கிறது இசை. கால இடைவெளிகளையும், தலைமுறை மாற்றங்களையும் கடந்து தமிழ்நாட்டின் மில்லெனியல்களின் வாழ்க்கையில் இசையால் நிறைந்திருக்கிறார் ஒருவர். அவர், யுவன் ஷங்கர் ராஜா.

ராஜா, ரஹ்மான் வரிசையில் ஒரு தலைமுறையைத் தன் விரல் நுனியில் எழும் இசையாலும், பிரத்யேக ‘ஹம்மிங்’ குரலாலும் வசியப்படுத்தியவர் யுவன். இசையை விரும்பிக் கேட்கும் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் கேட்டுப் பாருங்கள்; ‘யுவன் எங்கள் பால்யத்தின் ஒரு பகுதி’ என்ற பதிலை நிச்சயம் பெரும்பான்மையானோரிடத்தில் கேட்கலாம். மீசை அரும்பாத காலத்தில், எது காதல் என்று புரியாத காலத்தில், “இது காதலா, முதல் காதலா..” என்று உருகியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு ஆண்கள்; ’பேசுகிறேன், பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்’ என்று மகிழ்ந்திருக்கிறார்கள் தமிழ்நாட்டுப் பெண்கள். யுவன், ஒரு தலைமுறையின் அடையாளம்.

தனிமை என்பதைத் தனியாகக் கழித்தவர்களைவிட, யுவனின் இசையோடு கழித்தவர்கள் அதிகம். ஒரு தலைக் காதலர்களும், காதலை வெளிப்படுத்தாதவர்களுக்கும் யுவனின் இசை மட்டுமே துணை. யுவனின் 19 வயதில் அவர் இசைத்த ‘இரவா பகலா’ முதல் தற்போது வெளியான ‘கண்ணும் கண்ணும் தவிக்கிறதே’ வரை, ஒவ்வொரு தனி மனிதனின் காதலுக்கும் பொருந்தும் இயல்பான இசை யுவனுடையது. யுவனின் ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ பாடலைக் கேட்டு, இல்லாத காதலியின் மரண ஊர்வலத்தைக் கற்பனை செய்து அழுதிருக்கிறோம்; ’மௌனம் பேசியதே’ பின்னணி இசையை மனதுக்குள் ஓடவிட்டு, காதலை வெளிப்படுத்தியிருக்கிறோம்; ’சர்வம்’ ஆர்யாவைப் போல, ‘நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்’ என்று சூப்பர்ஹீரோவைப் போல காதல் கொண்டிருக்கிறோம்.ஒரு தலைக் காதலின் ஏக்கத்தில் மட்டுமா யுவன் மில்லெனியல் தமிழர்களுடன் இருந்திருக்கிறார்? திகட்டத் திகட்ட காதலில் திளைத்திருந்த ஒரு தலைமுறைக் காதலர்களின் சொத்தாக இருந்திருக்கிறது யுவனின் இசை. நந்தாவின் ‘முன் பனியா? முதல் மழையா?’ என்ற யுவனின் பாடல் தொடங்கும் போதே, நாமும் காதலிக்கத் தொடங்கி விடுகிறோம். ’சர்வம்’ படத்தின் ‘காற்றுக்குள்ளே’ பாடலைக் கேட்கையில், மழை நாள் ஒன்றில், தனிமையில் காதலரோடு வாழும் உணர்வைத் தந்துவிடும் ஆற்றலைக் கொண்டது யுவனின் இசை.

‘கற்றது தமிழ்’ பாடல்கள் யுவனின் உச்சம். இளையராஜா தன் குரலில் ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ என்று பாடத் தொடங்க, கேட்பவன் மனம் இல்லாத ஆனந்தியைக் கற்பனை செய்துகொள்ளத் தொடங்குகிறது. அதே பாடலை, யுவன் பாடிக் கேட்டிருக்கிறீர்களா? இளையராஜா எட்டடி பாய்ந்தால், யுவன் பதினாறு அடி பாய்ந்திருப்பார். நகரத்தின் இளசுகளின் காதலை ‘ஜன்னலோரமாய் முன்னாலே, மின்னல் போலவே வந்தாலே’ என்று இசைக்கும் அதே யுவன், கிராமத்து வாசனை மாறாமல், அந்தக் காதலை ‘பருத்திவீரன்’ பாடல்களில் பதிந்திருப்பார். ராஜா, ரஹ்மான் ஆகிய இருவரும் தவறவிட்ட அந்த வித்தை யுவனுக்குக் கைகூடியது.மகிழ்வான நேரங்கள் மட்டுமல்ல, மிகவும் பெர்சனலான துயரங்களிலும் தோள் கொடுத்தது யுவன் தான். அவரது குரலில் அவர் பாடும், ‘அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்.. அழியாத சோகம் அதை நீதான் கொடுத்தாய்’ என்பது விட்டுச் சென்ற காதலியை மட்டுமல்ல, சமயங்களில் யுவனையும் நினைக்க வைத்துவிடும். துயருற்று, வலிநிறைந்த வேளைகளில் சொல்லப்படாத வார்த்தைகளை இசையாக்கி, வெறுமையை நிறைத்து, வாழச் செய்திருக்கிறார் யுவன். காதல் தோல்வியடைந்த எத்தனையோ இளைஞர்களைத் தற்கொலையில் காக்கச் செய்த இசை யுவனுடையது.காதல் தோல்விப் பாடல்களை யுவனே பாடும் போது, அவை இன்னும் பெர்சனல் ஆகிவிடுகின்றன. 'கண்கள் ரெண்டில், காதல் வந்தால்.. கண்ணீர் மட்டும் துணையாகுமே’ என்பதிலும், ’காதல் என்றால் அத்தனையும் கனவு.. கண்மூடியே வாழ்கிற உறவு’ என்பதிலும் யுவனுக்கு நிகர் யுவன் மட்டுமே! அதிலும், காதல் தோல்விப் பாடல்களில் யுவனின் ஹம்மிங் வரும் பகுதிகளுக்கு மட்டும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. காதலிக்காதவர்கள் கூட, யுவனின் குரலின் வழி எழும் வலியையும், துயரத்தையும் புரிந்து கொள்ளும் மனதுக்கு நெருக்கமான குரல் அது.

துயரங்களில் இருந்து மீளும் நம்பிக்கையாகவும் கைகொடுத்திருக்கிறது யுவனின் இசை. ’7G ரெயின்போ காலனி’ படத்தின் 'Walking through rainbow' என்ற இசையை ஒருமுறை கேட்டுப் பாருங்கள். இசையின் வழியாக நம்பிக்கை கொள்ளச் செய்யும் யுவனின் மாயம் நிச்சயம் புரியும். தனிமை நிறைந்த இரவுகளில், ‘எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும், அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்!’ என்று பாடும் ‘புதுப்பேட்டை’ பாடல் தரும் வாழ்க்கை மீதான நம்பிக்கை வேறெதிலும் கிடைக்காது. மனித வாழ்வின் மிகப்பெரிய தண்டனையான குற்றவுணர்வில் இருந்து மீளச் செய்யும் ‘வானம்’ பாடலும், ‘பாவங்களை சேர்த்துக் கொண்டு’ பாடலும் யுவனின் இசையிலும், குரலிலும் நிகழ்த்தப்பட்டிருக்கும் அற்புதம்.

குடும்ப உறவுகள் குறித்த யுவனின் பாடல்களும் மில்லெனியல் தமிழர் வாழ்க்கையில் அங்கம் வகித்திருக்கின்றன. தாலாட்டு பாடிய அம்மாவுக்கு ஓர் தாலாட்டாக, ‘ராம்’ படத்தில் ‘ஆராரிராரோ’ கேட்டு, கண்ணீர் சிந்தாதவர்களைப் பார்ப்பது அபூர்வம். ’தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தந்தை அன்பின் முன்னே’ என்ற பாடலே பலருக்கும் தந்தை மீதான அன்பை உணர்த்தியது. 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடல் மகள்களைப் பெற்ற தந்தைகளின் குரலாகவே இருந்திருக்கிறது. தத்தெடுக்கப்பட்ட குழந்தையைப் பற்றிய ‘யோகி’ படத்தின் ‘யாரோ யாரோடு’ பாடலும், அனாதை இல்லத்தில் விடப்பட்ட குழந்தையின் வலியைப் பேசும் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் ‘ஆராரோ’ பாடலும் யுவனின் மாறுபட்ட திறமைக்கான சான்று. அதைப் போலவே, தாயைப் பிரிந்த மகனின் குரலாக ‘நிழலினை நிஜமும் பிரிந்திடுமா’ பாடலும், மகனைப் பிரிந்த தாயின் குரலாக ‘போய்வாடா என் பொலிகாட்டு ராசா’ பாடலும் இருக்கின்றன.யுவனைப் பற்றி பேசும்போது, ‘தீம் மியூசிக்’ குறித்து நிச்சயம் பேச வேண்டும். யுவன் இசையில், ‘பில்லா’, ‘மங்காத்தா’ படங்களின் தீம் இசையைத் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது, தங்கள் செல்போன் ரிங்டோனாகப் பயன்படுத்தாத தமிழ் இளைஞர்கள் மிகக் குறைவு. தீம் மியூசிக் என்பது மாஸ் மட்டுமே அல்ல’ ‘வின்னர்’ படத்தின் மிகப்பிரபலமான ‘கைப்புள்ள தீம் மியூசிக்’ யுவனின் கைவண்ணம் தான்.

பார்ட்டி பாடல்கள் என்றாலே யுவன் மட்டுமே என்ற காலம் தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தது. தனிமையின் இசையை நிரப்பிய அதே யுவன், கொண்டாட்டங்களிலும் ஓர் அங்கமாக இருந்தார். ’நெருப்பு கூத்தடிக்குது’, ‘தீப்பிடிக்கத் தீப்பிடிக்க’, ‘சரோஜா சாமானிக்காலோ’ தொடங்கி, சமீபத்தைய ‘ரௌடி பேபி’ வரை, மில்லெனியல்களையும், 2k கிட்ஸையும் பார்ட்டி செய்ய வைத்தது யுவனின் இசை. ’பிரியாணி’ படத்தின் ஓபனிங் பாடலாக வரும் ‘நாஹ் நாஹ் நா’ பாடலை வெவ்வேறு தீம்களில் இசைக்கச் செய்து ஆட வைக்கும் யுவன், ‘பருத்திவீரன்’ படத்தின் ‘டங்கா டுங்கா’, ‘தர்மதுரை’ படத்தின் ‘மக்கா கலங்குதப்பா’ போன்ற பாடல்களால் கிராமத்து இளைஞர்களையும் குத்தாட்டம் போடச் செய்திருக்கிறார்.

கிராமம் - நகரம் என்ற இட வேறுபாடோ, இரவு - பகல் என்ற கால வேறுபாடோ இல்லாமல் தமிழ் இளைஞர்கள் மீது பெய்யெனப் பெய்திருக்கிறது யுவனின் இசை மழை. தனிமையையும், கொண்டாட்டத்தையும் வழங்கி, அந்த மழையில் நனையச் செய்து லயித்திருக்கிறது தமிழ் இளைஞர் சமூகம்.யுவனின் பாடல்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது பலருக்கும் தெரியாது. அதில் இடம்பெற்றிருக்கும் ராகம், தாளம், லயம் குறித்த ஞானமும் பலருக்கும் கிடையாது; அந்த இசையை மீட்டியது யுவன் கையில் இருக்கும் கிடாரா, பியானோவா என்பதும் தெரியாது; அந்தப் பாடல்களில் எத்தனை சரணம், எத்தனை பல்லவி என்ற நுணுக்கங்களும் தேவையில்லை. ஆனால், அந்தப் பாடலை உருவாக்கியது யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயர் ஒன்றே போதும். பிரபஞ்சத்தை வாழச் செய்ய, இதயங்களை இணைக்கும் யுவனின் ஆன்மாவில் இருந்து மீட்டப்படும் இசைக்கு எப்போதும் இந்தத் தலைமுறையே கடன்பட்டிருக்கிறது.

பால்யத்திலும், காதலின் ஏக்கத்திலும், காதலில் திளைத்திருந்த போதும், காதலின் பிரிவின் போதும், மகிழ்ச்சியிலும், சோகத்திலும், தனிமையிலும், கொண்டாட்டங்களிலும் வாழ்க்கைப் பயணத்தின் வழித்துணையாகத் தோன்றியிருக்கிறது யுவனின் இசை.

பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன்!
லவ் யூ!
Published by:Vinothini Aandisamy
First published: