• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Singer Priyanka Exclusive - ’பாடல், டப்பிங், பல் மருத்துவம்...’ பம்பரமாய் சுழலும் சூப்பர் சிங்கர் பிரியங்கா!

Singer Priyanka Exclusive - ’பாடல், டப்பிங், பல் மருத்துவம்...’ பம்பரமாய் சுழலும் சூப்பர் சிங்கர் பிரியங்கா!

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சூப்பர் சிங்கர் பிரியங்கா

”ராஜா சார் கூட பாடினது மறக்க முடியாத அனுபவம். அவர் கூட பாடுற பிளானே இல்ல, திடீர்ன்னு மேடைல அவர் கூட பாட போறோம்ன்னதும் ரொம்ப எக்ஸைட் ஆகிட்டேன்”

  • Share this:
’மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்’ என்ற ’சின்ன சின்ன வண்ணக்குயில்’ பாடலில் வரும் வரிகளைக் கேட்கும் போது தானாகவே பாடகி பிரியங்கா நம் மனதில் வந்து விடுவார். இந்த பாடல் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. சில வருடங்களுக்கு முன்னர் நடந்த விஜய் டிவி-யின் விருது விழாவில் சிறந்த பாடகிக்கான விருதை இசையமைப்பாளர் டி.இமானிடமிருந்து பெற்ற பிரியங்கா, அப்போது மேடையில் பாடிய பாடல் தான் இது. இதுவரை யூ-ட்யூபில் 27 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது.

இசைக் குடும்பத்திலிருந்து வந்த பிரியங்கா ஒருபுறம் இசை, மறுபுறம் பல் மருத்துவம் என கச்சிதமாக பேலன்ஸ் செய்கிறார். சரி... இப்போது என்ன செய்கிறார் என தெரிந்துக்கொள்ள பிறந்தநாள் மற்றும் உலக இசை தின வாழ்த்துகளோடு அவரை தொடர்புக் கொண்டோம். பல் மருத்துவராக தனியே க்ளினிக் ஆரம்பிக்கும் நேரத்தில் கொரோனா வந்து கெடுத்து விட்டது என நம்மிடம் பேசத் தொடங்கினார் பிரியங்கா.

எப்படி போகிறது லாக்டவுன்?

ஆன்லைன்ல கொஞ்சம் மியூசிக் கத்துக்கிட்டு இருக்கேன். சில பாடல்களை ரெக்கார்ட் பண்றேன், இசையைப் பொறுத்தவரைக்கும் இதான். தவிர வீட்ல நிறைய பூச்செடி, மரக்கன்றுகள் எல்லாம் வச்சிருக்கோம். அதை பராமரிக்குறதுல கொஞ்ச நேரம் போகுது. அப்புறம் நிறைய வேற்றுமொழி படங்கள் பாத்தேன்.

 நீங்கள் பல் செக் பண்ணும் ஃபோட்டோக்கள் வெளியானதே...

World Music Day 2021 - Super Singer Priyanka
பல் செக் பண்ணும் பிரியங்கா


போன லாக்டவுனுக்கு முன்னாடி எங்க காலேஜ்ல இருந்து கிராம புறங்களுக்கு கேம்ப் போனோம். அப்போ எடுத்த படம் தான் அது.

சின்ன வயதிலேயே இசைத்துறைக்குள் வந்த உங்களுக்கு பல்மருத்துவராகும் ஆசை எப்படி வந்தது? 

எனக்கு சின்ன வயசுல இருந்தே எதாச்சும் மெடிக்கல் சம்மந்தமா படிக்கணும்ங்கற ஆசை இருந்தது. அதுலயும் நான் நிறைய முறை டெண்டெல் செக்கப் போயிருக்கேன், அப்போ டாக்டர்ஸ் ஒர்க் பண்றத பாத்துருக்கேன். அப்படியே எனக்கும் பல் மருத்துவம் மேல இண்ட்ரெஸ்ட் வந்துடுச்சு.

அடுத்த பிளான்?

போன வருஷமே பி.டி.எஸ் முடிச்சிட்டேன். சரி தனியா க்ளினிக் ஆரம்பிக்கலாம்ங்கற நேரத்துல இப்படி கொரோனா வந்துடுச்சு. இது சரியானதும் தான் அதுக்கான வேலைகள்ல இறங்கணும். அதோட பல்மருத்துவத்துல இன்னொரு கோர்ஸ் படிக்கணும். இசையைப் பொறுத்தவரைக்கும் நிறைய இண்டிபெண்டெண்ட் ஆல்பம் பண்ணும்.

இப்போது பாடியிருக்கும் பாடல்கள் பற்றி?

World Music Day 2021 - Super Singer Priyanka
சூப்பர் சிங்கர் பிரியங்கா


பிசாசு 2 படத்துல ஒரு பாட்டும், குதிரைவால் படத்துல ஒரு பாட்டும், அந்தப் படத்தோட ஹீரோயின் அஞ்சலி பாட்டீலுக்கு பின்னணி குரலும் கொடுத்துருக்கேன். அதிகாரப்பூர்வமா சொல்லணும்ன்னா இது ரெண்டு தான். இன்னும் சில பாடல்கள் இருக்கு, ஆனா அது எந்தெந்த படங்கள்ன்னு இன்னும் உறுதியாகல.

டப்பிங்கில் ஆர்வம் இருக்கிறதா?

சின்ன வயசுல நிறைய கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துருக்கேன். அப்படியே இண்ட்ரெஸ்ட் வந்துடுச்சு.

குடும்பம் பற்றி?

எங்கக் குடும்பமே இசைக்குடும்பம்ன்னு சொல்லலாம் அதனால தான் எனக்கும் இதுல ஆர்வம் வந்துச்சு. தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தைன்னு பெரிய கூட்டுக்குடும்பமா இருக்கோம். அப்பா கீபோர்டிஸ்ட், அம்மா பாடகி, நான் ஒரே பொண்ணு. ஆனா எல்.கே.ஜி படிக்குற வாண்டுல இருந்து காலேஜ் படிக்கிற தம்பி வரைக்கும் எங்க வீட்ல கம்பெனிக்கு நிறைய பேர் இருக்காங்க. எல்லாருமே எனக்கு ரொம்ப சப்போர்ட்.

முதல் முறை எஸ்.பி.பி-யுடன் மேடையில் பாடிய தருணம்?

World Music Day 2021 - Super Singer Priyanka
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் பிரியங்கா


அது 2 வருஷத்துக்கு முன்னாடி மலேசியாவுல எஸ்பிபி சாரோட நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியோட முதல் டூயட் அது, அதனால கொஞ்சம் பயந்து போய்ட்டேன். அவர் பேசி பேசி என்ன நார்மலாக்கினாரு. அடுத்து சில நிகழ்ச்சிகளுக்கு பிளான் பண்ணிருந்தோம், ஆனா சார் இல்லாம போய்ட்டாரு. ஆனா தினம் தினம் அவர் பாட்ட கேட்டுட்டு இருக்கறதால, எஸ்பிபி சார் இல்லாத மாதிரியே இல்ல. அவர் கூட பாடும் போது இடைல பிஜிஎம் போகும் போது என் கிட்ட வந்து உனக்கு என்ன வயசுன்னு சார் கேட்டாரு, அப்போ எனக்கு 21 வயசு. அதைக்கேட்டதும் நீ எனக்கு பேத்தி மாதிரின்னு எஸ்பிபி சார் சொன்னாரு. என்ன விட பெரியவங்க, என் வயசு, உங்க அம்மா வயசுல இருக்கவங்கன்னு எல்லார் கூடவும் பாடிப்பேன். இப்போ உன் கூடவும்ன்னு சார் அப்போ சொன்னாரு.

நிகழ்ச்சிகளுக்குப் போகும் போது கல்லூரியில் ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத்தார்களா?

World Music Day 2021 - Super Singer Priyanka
பாடகி சித்ராவுடன்


அப்படியெல்லாம் எதுவும் இல்ல. வெளிநாட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் போய் பாடிட்டு வர்றது மாதிரி தான் இருக்கும். அங்க நேரம் எல்லாம் செலவழிக்க முடியாது. அதனால 2-3 நாள் எமெர்ஜென்ஸி லீவு போட்டுடுவேன். ஆனா உண்மைலயே எமெர்ஜென்ஸி வரும் போது லீவு இல்லாம திண்டாடுவேன். அதுவும் சிங்கப்பூர், மலேசியாலாம் காலைல கிளம்பி போய் பாடிட்டு, மிட் நைட்ல இங்க வந்துடுவேன். அப்போ ஒருநாள் தான் லீவு போடுற மாதிரி இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்கள் பயணம் செய்ததில் மறக்க முடியாத இடங்கள்?

லண்டன், நார்வே நிறைய முறை போய்ருக்கேன். லண்டன்ல கசின்ஸ் இருக்காங்க, நார்வேல அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அதனால நிகழ்ச்சிகளுக்கு போகும் போது அங்கேயே கொஞ்ச நாள் இருந்துட்டு வருவோம். மூணாவதா ஜப்பான் ரொம்ப பிடிக்கும். ஒருமுறை தான் அங்க போய்ருக்கேன், ஆனா ரொம்ப பிடிச்சு போச்சு.

மறக்க முடியாத அனுபவம்?

நிறைய பெரிய பாடகர்கள் கூட நிகழ்ச்சிகள் பண்ணிருக்கேன். அது எல்லாமே மறக்க முடியாதது தான். அதுல குறிப்பா 2 சொல்லணும்ன்னா, ஒண்ணு எஸ்பிபி சார், இன்னொன்னு ராஜா சார் கூட பாடினது தான். அவர் கூட பாடுற பிளானே இல்ல, திடீர்ன்னு மேடைல அவர் கூட பாட போறோம்ன்னதும் ரொம்ப எக்ஸைட் ஆகிட்டேன்.

ஃபிட்னெஸ் ரகசியம்?

World Music Day 2021 - Super Singer Priyanka
சூப்பர் சிங்கர் பிரியங்கா


ரகசியம் எல்லாம் ஒண்ணும் இல்ல, வீட்ல எல்லாரும் 25 வயசுக்கு முன்னாடி வரைக்கும் ரொம்ப ஒல்லியா தான் இருந்திருக்காங்க, ஸோ எனக்கும் அப்படி இருக்கு. அதோட 10-வது படிக்கும் போது ஆரம்பிச்ச ஓட்டம் பல் மருத்துவம் முடிக்குற வரைக்கும் இருந்துச்சு. அதுக்கெல்லாம் சேத்து தான் இப்போ ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன். இப்போ ரொம்ப நேரம் ஒரே இருந்து போரடிக்குது. அதனால கொஞ்சம் ஒர்க் அவுட் பண்றேன். அதனால நைட் நல்லா தூக்கமும் வருது.

நடிப்பில் ஆர்வம் இருக்கிறதா?

சில வாய்ப்புகள் வந்துச்சு, ஆனா எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்ல. இசை, பல் மருத்துவம், விஜய் டிவி நிகழ்ச்சின்னு இதுக்கே நேரம் சரியா இருக்கு. அதுவும் இல்லாம எனக்கு நடிப்பு செட்டாகாது. என்னோட மியூசிக் வீடியோல மட்டும் தான் என் பங்களிப்பு இருக்கும். அதனால ”இசைலயும், பல் மருத்துவத்துலயும் தான் என்னோட கவனம் முழுக்க இருக்கு” என்ற பிரியங்காவிற்கு வாழ்த்துகள் கூறி விடைப்பெற்றோம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: