லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான படம் மாநகரம். தமிழில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மாநகரம்’ இந்தியில் ‘மும்பைகர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
சந்தோஷ் சிவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே மற்றும் சச்சின் கடேகர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் இந்தியில் கால் பதிக்கிறார் விஜய் சேதுபதி.
இன்று விக்ராந்த் மாசேவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மும்பைகர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சந்தோஷ் சிவன் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து கார்த்தி, விஜய் உள்ளிட்டோரது படங்களை இயக்கி முன்னணி இயக்குநரானார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் இயக்க உள்ளார்.