முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 68 - வருடங்களுக்கு முன் வெளிவந்த நடிகை லட்சுமியின் தாயார் நாயகியாக நடித்த படம்!

68 - வருடங்களுக்கு முன் வெளிவந்த நடிகை லட்சுமியின் தாயார் நாயகியாக நடித்த படம்!

முல்லைவனம்

முல்லைவனம்

ருக்மணி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். 1955 இல் வெளியான முல்லைவனம் அதில் ஒன்று, ருக்மணி மற்றும் ஸ்ரீராமின் நடிப்பு அதில் பெரிதும் பேசப்பட்டது.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

1955-ல் முல்லைவனம் திரைப்படம் வெளியானது. தபால் கொண்டு செல்லும் வேனில் பயணிக்கும் பவானி எனும் பெண்ணிடம், சக பயணி ஒரு பெண் கதையை கூறுகிறார். ஒரு ஊரில் ஒரு இளம் பெண் இருக்கிறாள். அவனுக்கு ஒரு இளைஞன் மீது காதல். அவனுக்கும் அவள் மீது ப்ரியம் உள்ளது.

அந்தப் பெண்ணின் மோசக்கார அத்தையோ தனது தறுதலை சகோதரனுக்கு அவளை மணமுடிக்க திட்டமிடுகிறாள். திருமண நாளன்று தாலி காணாமல் போகிறது. இதனால், திருமணம் தடைபடுகிறது. பிறகு எப்படி அவள் தனது காதலனுடன் ஒன்று சேர்ந்தாள் என்பது கதை.

இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் ஸ்ரீராம் என்கிற மதுரை ஸ்ரீராம் நாயுடுவும், குமாரி ருக்மணியும் நடித்தனர். பி.எஸ்.வீரப்பா, பி.எஸ்.ஞானம், எஸ்.ஏ.நடராஜன், ஏ.கருணாநிதி ஆகியோரும் நடித்தனர். கே.வி.மகாதேவன் படத்துக்கு இயைசையமைத்தார். வழுவூர் பி.ராமையா பிள்ளை அமைத்த நடனங்களுக்கு ராஜேஸ்வரியும், லலிதாவும் ஆடினர். படம் வெளிவந்த காலத்தில் நடனங்கள் பேசப்பட்டன.

ஸ்ரீவள்ளி திரைப்பட போஸ்டர் 

முல்லைவனத்தின் நாயகி குமாரி ருக்மணி, பேபி ருக்மணியாக சினிமாவில் நுழைந்தவர். அவரது அம்மா ஜானகி என்கிற நுங்கம்பாக்கம் ஜானகியும் ஒரு நடிகை. இவர்களின் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மெலட்டூர். சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு குடிபெயர்ந்தனர். ஒருமுறை ஜானகி தனது மகள் ருக்மணியுடன் மும்பை சென்ற போது, அவர்கள் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் நடிகை டி.பி.ராஜலக்ஷ்மி தங்கியிருந்தார்.

லவங்கி திரைப்பட போஸ்டர்

அவர் ஹரிச்சந்திரா திரைப்படத்தில் நடிப்பதற்காக வந்திருந்தார். மூன்று வயது குழந்தையான ருக்மணியின் துறுதுறுப்பு அவரைக் கவர்ந்தது. அவர் நடிக்கயிருந்த ஹரிச்சந்திரா படத்தில் சிறுவன் லோகிதாசனாக நடிக்க யாரும் கிடைக்காமல் யூனிட் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, படப்பிடிப்புக்குச் சென்ற டி.பி.ராஜலக்ஷ்மி, தனது அறைக்குப் பக்கத்தில் பார்த்த சிறுமி ருக்மணி குறித்து கூறியுள்ளார். உடனே ருக்மணியின் அம்மா ஜானகியை இயக்குனர் போய் சந்தித்து, பேபி ருக்மணியை 1932 இல் வெளிவந்த ஹரிச்சந்திராவில் நடிக்க வைத்தார்.

அதன் பிறகு சிந்தாமணி, பாலயோகினி, தேச முன்னேற்றம், எஸ்.பாலசந்தரின் ருஸ்ய சிருங்கர் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். 1945 இல் ஏவி மெய்யப்ப செட்டியார் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தை எடுத்த போது பேபி ருக்மணி குமாரி ருக்மணியாக அதில் அறிமுகமானார். அதுதான் நாயகியாக அவருக்கு முதல் படம். பி.யூ.சின்னப்பா மறைந்து டி.ஆர்மகாலிங்கம் அவரது இடத்தைப் பிடித்ததும் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில்தான்.

ருக்மணி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். 1955 இல் வெளியான முல்லைவனம் அதில் ஒன்று. ருக்மணி மற்றும் ஸ்ரீராமின் நடிப்பு அதில் பெரிதும் பேசப்பட்டது. 70 களில் நடிப்பதை நிறுத்தியவர் அதன் பிறகு ஓரிரு படங்களில் மட்டும் தலைக்காட்டினார். கடைசியாக 2000 இல் ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தில் நடித்தார்.

ருக்மணி 1946 இல் லவங்கி படத்தில் நடிக்கையில் அதன் நாயகன் ஒய்.வி.ராவுடன் காதல் ஏற்பட அவரை திருமணம் செய்து கொண்டார். ஒய்.வி.ராவ் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பல்துறை வித்தகர். இவர்களுக்குப் பிறந்தவர்தான் நடிகை லட்சுமி. தனது மகளுடன் வசித்துவந்த ருக்மணி 2007 இல் உடல்நலக்குறைவால் காலமானார்.

நாற்பது, ஐம்பது மற்றும் அறுபதுகளில் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த ருக்மணி நடித்த முல்லைவனம் திரைப்படம் 1955 மார்ச் 11 ஆம் தேதி இதே நாளில் வெளியானது. இன்று முல்லைவனம் தனது 68 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Classic Tamil Cinema