• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பேச்சுவார்த்தை தோல்வி - ஓடிடியில் வெளியாகிறது மோகன்லாலின் மரக்கார்!

பேச்சுவார்த்தை தோல்வி - ஓடிடியில் வெளியாகிறது மோகன்லாலின் மரக்கார்!

மோகன்லால்

மோகன்லால்

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக தயாராகியிருக்கும் படம் மரக்கார் - அரபிக் கடலின்டெ சிம்ஹம்.

  • Share this:
    மோகன்லால் நடித்திருக்கும் மரக்கார் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது. திரையரங்கு உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த முடிவை படத்தின் தயாரிப்பாளர் எடுத்துள்ளார்.

    மலையாளத்தில் மிகப்பிரமாண்டமாக தயாராகியிருக்கும் படம் மரக்கார் - அரபிக் கடலின்டெ சிம்ஹம். கோழிக்கோடைச் சேர்ந்த குஞ்சாலி மரக்கார் குறித்த திரைப்படம் இது. இவர்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் கடற்படை உருவாக்கியவர் என கூறப்படுகிறது. மரக்கார் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் சுமார் 85 கோடிகள் பட்ஜெட்டில் ஆண்டனி பெரும்பாவூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

    2020 ஜுனில் வெளியாக வேண்டிய படம் கொரோனா முதல் அலையால் தள்ளிப் போனது. திரையரங்குகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வருவதற்காக தயாரிப்பாளர் காத்திருந்ததால் மாஸ்டர், சுல்தான் படங்கள் வெளியான போது மரக்காரை வெளியிடவில்லை. அதற்குள் இரண்டாம் அலை வந்தது. 2021 ஆகஸ்டில் கொரோனா தணியும், திரையரங்குகள் திறக்கும் என்ற நம்பிக்கையில் ஆகஸ்ட் 12 ஓணத்தை முன்னிட்டு படத்தை வெளியிட முடிவு செய்தனர்.

    படம் வெளியாகி 4 வாரங்கள் கழித்தே படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற திரையரங்குகளின் கோரிக்கையை தயாரிப்பாளர் ஏற்றுக் கொண்டார். பதிலுக்கு மரக்கார் படத்தை முதல் 25 தினங்கள் வேறு படங்களின் போட்டியின்றி அனைத்து திரையரங்குகளிலும் திரையிடுவது என முடிவானது. கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை ஆகஸ்டில் அதிகரிக்க, திரையரங்கு திறப்பு தள்ளிப்போனது, மரக்காரும் வெளியாகவில்லை. இந்த நேரத்தில், படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் கசிந்தது. ஒரு வருடமானாலும் படம் திரையரங்கில்தான் வரும் என கோபமாக பதிலளித்தார் ப்ரியதர்ஷன்.

    தற்போது திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதித்த நிலையில், மரக்காரை திரையிட திரையரங்குகள் தயாராயின. ஆனால், பேசியதைவிட குறைவான தொகையை அவர்கள் சொல்ல, தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தந்தார். அத்துடன் திரையரங்கு உரிமையாளர்களுக்கான, தி ஃபிலிம் எக்ஸிபிட்டர்ஸ் யுனைடெட் ஆர்கனைசேஷன் ஆஃப் கேரளாவில் தான் வகித்து வந்த துணைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். கேரள அமைச்சர் ஷாஜி செரியன் பிரச்சனையில் தலையிட்டு, திரையரங்கில் படத்தை வெளியிடுவதையே அரசு விரும்புகிறது, மரக்கார் திரையரங்கில் வெளியாகும் என்றார். இதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்களுடன் ஆண்டனி பெரும்பாவூர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவது என அவர் முடிவு செய்துள்ளார். அமேசான் பிரைம் வீடியோ பெரும் தொகைக்கு படத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பேச்சுவார்த்தையில் வைக்கப்பட்ட நிபந்தனைகள், கோரிக்கைகள் என்ன என்பதை இரு தரப்பும் கூறவில்லை. அதேநேரம், ஆண்டனி பெரும்பாவூர் ஓடிடி தளம் படத்துக்கு நிர்ணயித்திருக்கும் தொகையையாவது திரையரங்குகள் தர வேண்டும் என கேட்டதாகவும், அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்த காரணத்தால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    மரக்கார் திரையரங்குகளைப் பொறுத்தவரை ஜாக்பாட். அரசிடம் பேசி படத்தை எப்படியும் திரையரங்குகளில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படும். அதேநேரம், ஆண்டனி பெரும்பாவூர் அமேசானிடம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் கூறுகின்றனர். எப்படியோ... மரக்கார் கேரள திரையுலகில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: