நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துவருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கிய 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 50% அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நெல்சனின் முந்தைய படங்களை விட ஜெயிலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பீஸ்ட் படம் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்பதால் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் இயக்குநர் நெல்சன் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார். அதுபோலவே அண்ணாத்த படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. கூடவே பத்திரிகையாளர் பிஸ்மி, விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் என கொளுத்திப்போட இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர். ஜெயிலர் படத்தின் மூலம் நான் தான் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினிகாந்த் நிரூபிப்பார் என அவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இந்தப் படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. தற்போது இந்தத் தகவலை ஜெயிலர் படப்பிடிப்புத்தளத்திலிருந்து மோகன்லாலின் படத்தை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. மோகன்லாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை பகிர்ந்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியுடன் ஏற்கனவே தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த நிலையில் மோகன் லாலுடன் ஜெயிலர் படத்துக்கா இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Jailer https://t.co/c42AcYPUgX
— Mohanlal (@Mohanlal) January 8, 2023
இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். ஹைதராபாத்தில் ரஜினிகாந்த் - மோகன்லால் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோகன்லால் கடைசியாக தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anirudh, Mohanlal, Rajinikanth