நடிகர் தனுஷ் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் ‘கர்ணன்’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் மோகன்லால் கைப்பற்றி இருக்கிறது.
'பரியேறும் பெருமாள்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள தனுஷின் 41-வது திரைப்படமான ’கர்ணன்’ உலகளவில் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
'கர்ணன்' படத்தை 'வி கிரியேஷன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்தில் தனுஷ், ராஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமிப்ரியா சந்திரமெளலி, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம் கெளரி கிஷன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 9-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் கர்ணன் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ‘கர்ணன்’ படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து தனுஷ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் மோகன்லால், இந்தப் படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் ரிலீஸ் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் மோகன்லால் நடித்துள்ள 28 படங்களை தயாரித்து கேரளாவில் புகழ்பெற்றது. இதன் அடுத்தக்கட்டமாக, 2009-ல் ‘மேக்ஸ் லேப் சினிமாஸ் அண்ட் எண்டெர்டெயின்மெண்ட்’ என்ற விநியோக நிறுவனமும் தொடங்கப்பட்டது. ஆசிர்வாத் சினிமாஸின் உரிமையாளர் ஆண்டனி பெரும்பாவூருடன் மோகன்லாலும் இணைந்து இந்நிறுவனத்தை தொடங்கினார். இதுவரை இந்நிறுவனம் தமிழ் மற்றும் மலையாள படங்களை விநியோகம் செய்திருக்கிறது.
ஜில்லா, பாபநாசம், கபாலி, வேலையில்லா பட்டதாரி, அசுரன் ஆகியப் படங்களை கேரளாவில் விநியோகம் செய்திருக்கும் ‘மேக்ஸ் லேப் சினிமாஸ் அண்ட் எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனம், தற்போது தனுஷின் கர்ணனை கைப்பற்றியிருக்கிறது.
தவிர, அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷுக்கு கடந்த வாரம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. கர்ணன் படத்தில் அவர் மூன்றாவது தேசிய விருது பெறுவார் என மாரி செல்வராஜ் குறிப்பிட்டிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.