லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நடித்திருக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. மம்முட்டியும், லிஜோ ஜோஸும் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். இதன் முழுப்படப்பிடிப்பும் பழனியில் நடைபெற்றது. அதனால், நண்பகல் நேரத்து மயக்கம் என தமிழில் பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் டீஸரில், தமிழ்நாடு டாஸ்மாக் பாரில் மம்முட்டி குடித்தபடி, கௌரவம் படத்தில் வயதான சிவாஜியும், இளம் சிவாஜியும் பேசும்; வசனங்களை மாறி மாறி பேசிக் காட்டுகிறார். அவர் பேசி முடித்ததும் குடித்துக் கொண்டிருக்கும் சக குடிகாரர்கள் கைத்தட்டுகிறார்கள். ஒரே கோணத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சி டீஸரில் இடம்பெற்றுள்ளது. அதாவது இந்தக் காட்சி மட்டுமே டீஸராக வெளியாகியுள்ளது.
தமிழில் பல நடிகர்கள் எம்ஜிஆர், ரஜினி, கமல் ரசிகர்களாக நடித்துள்ளனர். தங்கள் சீனியர் நடிகர்களின் புகழ்பெற்ற வசனங்களை அவர்கள் பேசுவதாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பிறமொழி நடிகர்களின் ரசிகர்களாகவும், அவர்களின் வசனங்களை பேசுவதாகவும் காட்சியோ சித்தரிப்போ இருந்ததில்லை. மலையாளம், தெலுங்கு, இந்தி முதலான மொழிகளின் படங்கள் தமிழ்நாட்டில் ஓடினாலும், அந்த மொழிக் கலைஞர்கள் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருந்தாலும் பெரும்பாலும் அவர்களைப் பற்றிய குறிப்புகள், சித்தரிப்புகள் தமிழ்ப் படங்களில் இடம்பெறாது. கலகலப்பு படத்தில் இளவரசை மிர்ச்சி சிவா வில்லன்களிடம், எங்க அமிதாப் மாமா என்று கலாய்ப்பார். அப்படி ஏதாவது இடம்பெற்றிருந்தால்தான் உண்டு.
Also read... பாலாவின் ஆரம்பகால திரைப்படங்கள் ஒரு விமர்சனப் பார்வை
ஆனால், கேரளாவில் தமிழ் சினிமா மற்றும் திரைநட்சத்திரங்களின் பாதிப்பு அதிகம். விஜய் படம் வெளியாகும் போது மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களே தள்ளி வைக்கப்படும். எம்ஜிஆர், சிவாஜிக்கு அங்கு கணிசமான ரசிகர்கள் உண்டு. ராவணப்பிரபு திரைப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் மோகன்லால் வருவார். மகன் அவ்வப்போது, சவாரி கிரிகிரி என்பார். அதை கவனிக்கும் அப்பா, இது சந்திரபாபு நடித்த தமிழ்ப் படத்தில் அவர் பேசும் வசனம் என்று விளக்கிக் கொடுப்பார். இதுபோன்ற சித்தரிப்புகள் மலையாள சினிமாவில் அதிகம் உண்டு.
2004 இல் வெளியான மோகன்லாலின் வாமனபுரம் பஸ் ரூட் திரைப்படத்தில் மோகன்லால் தீவிர எம்ஜிஆர் ரசிகராக வருவார். படம் முழுக்க எம்ஜிஆர் படங்களின் ரெஃபரன்ஸ் இருக்கும். வாமனபுரம் பஞ்சாயத்தின் தலைவர் ஜெகதி ஸ்ரீகுமார். அந்த ஊருக்கு தார்ச்சாலை போடுகிற கான்ட்ராக்ட் கிடைக்க வேண்டும் என்றால், வாமனபுரம் ரூட்டில் பேருந்து இயக்கம் இருக்க வேண்டும். அதற்காக ஒரு பேருந்தை வாங்கிவிடுவார். அதனை எதிர்க்கட்சியினர் முடக்குவார்கள். இதுபோன்ற ரூட் பிரச்சனைகளை கையாளும் லிவர் ஜோணியை (மோகன்லால்) அவர் வாமனபுரத்துக்கு கொண்டு வருவார். லிவர் ஜோணியின் பட்டப்பெயர் எம்ஜிஆர். தீவிர எம்ஜிஆர் ரசிகர். அவரைப் போல ஒரு கர்ச்சீஃபை கழுத்தில் போட்டிருப்பார். சண்டைக்குப் போவதற்கு முன் பாக்கெட்டில் இருக்கும் எம்ஜிஆர் புகைப்படத்தைப் பார்த்து, அனுமதி வாங்கிவிட்டே சண்டை செய்வார். படத்தில் மோகன்லால் எம்ஜிஆரை வாத்தியார் என்று குறிப்பிடுவார். அவரது அடிபொடிகள் அவரை வாத்தியார் என்றழைப்பார்கள்.
வாமனபுரம் பஸ் ரூட்டில் எம்ஜிஆர் போலவே மோகன்லால், 'தாயின் மடியில் தங்கக்குட்டி தமிழ்க்குட்டி நான்... இந்த காலம் எழுதும் கவிஞனின் கவிதையும் நான்..; என்று பாடிக் கொண்டே அறிமுகமாவார். குழந்தைகளுடன் ஆடுவது, வயதானவர்களை கட்டியணைப்பது, தொழிலாளிக்கு உதவுவது என்று அந்தப் பாடல் முழுக்க எம்ஜிஆரை இமிடேட் செய்வார். மோகன்லாலுக்கும், நாயகி லட்சுமி கோபாலசுவாமிக்கும் ஒரேயொரு டூயட்தான் உண்டு. எம்ஜிஆர், சரோஜாதேவி சாரட் வண்டியில் போய்க்கொண்டே, 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..' என்று பாடுவார்களே, அதே பாடல் அதே கெட்டப்பில் மோகன்லால், லட்சுமி கோபாலசுவாமி நடிப்பில் வரும். கிளைமாக்ஸில் நாயகி மோகன்லாலுடன் வீட்டைவிட்டு கிளம்பி வருகையில் பின்னணியில், நான் ஆணையிட்டால் இசை ஒலிக்கும். இப்படி படம் நெடுக எம்ஜிஆர் படங்களின் ரெஃபரனஸ் இருக்கும்.
தமிழ்ப் படங்கள், தமிழ் திரைநட்சத்திரங்கள் கேரள பார்வையாளர்களின் மத்தியில் செலுத்திவரும் பாதிப்பின் காரணமாக இதுபோன்ற ரெஃபரன்சுகள் மலையாளப் படங்களில் தொடர்ந்து இடம்பெறுகிறது. மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர் ஸ்டார்களே தமிழ் திரைநட்சத்திரங்களை இமிடேட் செய்து நடிக்கிறார்கள். கதையின் தேவையைப் பொறுத்து இப்படி செய்கிறார்கள்.
வாமனபுரம் பஸ் ரூட்டில் மோகன்லால் எம்ஜிஆரை இமிடேட் செய்தது போல், நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டி சிவாஜியை இமிடேட் செய்துள்ளார். படம் நெடுக இப்படி இருக்காது என்பது படத்தின் டீஸரிலேயே தெரிகிறது. ஆனாலும், எதற்காக இந்தக் காட்சி என்பதை அறியும் ஆவலை இந்த டீஸர் ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.