“ஹரா’ என்ற திரைப்படத்கின் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் 80-களின் சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன்.
கன்னட சினிமா உலகில் ’கோகிலா’ மோகனாக இருந்த மோகனை பாலு மகேந்திரா தன் ’மூடுபனி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார். மூடுபனியில் முகம் காட்டினாலும் அடுத்து வெளியான இயக்குனர் மகேந்திரனின் ’நெஞ்சத்தை கிள்ளாதே’, மோகனின் திரை வாழ்க்கையையே திருப்பி போட்டது. பல திரையரங்குகளில் ஒரு வருட காலம் ஓடி மோகனை ஒரு ஸ்டார் அந்தஸ்துக்கு இத்திரைப்படம் உயர்த்தியது.
1982-ம் ஆண்டு வெளியான ’பயணங்கள் முடிவதில்லை’, மோகனின் திரை வாழ்க்கையில் இன்னொரு மைல்கல்லாக அமைந்தது. அந்த படத்தில்தான் மோகன் முதன்முறையாக மைக் பிடித்து மேடைகளில் பாட ஆரம்பித்தார். அதன்பிறகு மோகன் மைக் பிடித்து பாடினாலே அந்த படம் வெள்ளி விழாதான் என அடித்துச் சொல்லும் அளவுக்கு அவர் மேடையேறி பாடிய எல்லா படங்களும் வெள்ளி விழா கொண்டாடின. நாளடைவில் மைக் மோகன் என ரசிகர்கள் கொண்டாடும் அளவு மைக்குக்கும் இவருக்குமான பந்தம் வலுபெற்றது.
குவியும் வாழ்த்துக்கள்.. மிகப் பெரிய கொண்டாட்டத்தில் ரோஜா சீரியல் நடிகை!
எந்தவொரு ஹீரோவும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத வரிசையான பல வெற்றி படங்களை, 80-களில் மோகன் அசால்ட்டாக நிகழ்த்தி காட்டினார். இதில் உச்சமாக 1984-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 19 படங்கள் மோகனின் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்றன. ‘ நான் பாடும் பாடல்’ , ‘ உதய கீதம்’, ’ இதய கோவில்’, ’ குங்கும சிமிழ்’, பிள்ளை நிலா’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மோகனின் வெற்றி படங்களாகின.
மோகன் பெரும்பாலும் காதல் மற்றும் குடும்ப படங்களிலேயே நடித்தார். இதனாலே மோகனுக்கு ரசிகைகள் ஏராளமாய் இருந்த காலக்கட்டம் அது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரண்டு உச்ச நட்சத்திரங்கள் கோலோச்சிய போதே பெண் ரசிகைகளின் கனவுக் கண்ணனாக வலம் வந்தார் மோகன். பெண்களைக் கவர்ந்த படங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்க ஒரு திரைப்படம் ’மௌன ராகம்’. அன்பான கணவனாக ஆர்ப்பாட்டமில்லாத மென்மையான நடிப்பை மோகன் வெளிப்படுத்தி இருப்பார். இதனாலே மோகன் போல மாப்பிள்ளை வேண்டும் என பெண்கள் ஏங்கும் அளவு அந்நாளில் பெண்களின் ஆதர்ச நாயகனாக விளங்கினார்.
உச்சத்தில் இருந்தபோது பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதிலும் மோகன் தயங்கியதில்லை. பெண்களின் விருப்ப நாயகனாக வலம் வந்துகொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் பெண்களே வெறுக்கும் வில்லனாக ’நூறாவது நாள்’,… ’விதி’ போன்ற திரைப்படங்களில் நடித்து பாராட்டுக்களை குவித்தார். அந்த படங்களும் வெள்ளிவிழா கொண்டாடி மோகனை ஒரு தேர்ந்த நடிகராக வெளிக்காட்டின.
cook with comali : போட்டியை விட்டு பாதியில் போன சந்தோஷுக்கு இப்படியொரு வாய்ப்பா!
கிட்டத்தட்ட 10 வருடங்கள் தூங்க கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருந்த மோகன், 90-களின் தொடக்கத்தில் கால ஓட்டத்தில் வாய்ப்புகளை இழந்தார். ஒரு குணச்சத்திர நடிகராக மீண்டும் தமிழில் மோகனை, காண காத்திருந்தது ஒரு கூட்டம். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி ‘வந்துட்டேன்னு சொல்லு..திரும்ப வந்துட்டேனு சொல்லு’ என மோகன் ரீஎன்ட்ரி தரும் படமாகியிருக்கிறது ‘ஹரா’. மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரா மைக்மோகன்?
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.