இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 17 ஆம் தேதி வெளியான பகாசூரன் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகர் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டி கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இயக்குநர் அமீர் ஒரு பேட்டியில் பகாசூரன் இயக்குநர் மோகன்.ஜியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், மோகன்.ஜியின் படங்களை எச்.ராஜா, அண்ணாமலை ஆகியோர் உடனடியாக பார்த்து கருத்து சொல்கின்றனர். இவர்கள் ஏன் அசுரன் பார்க்கவில்லை. மெட்ராஸ், காலா, கபாலி படங்களைப் பார்த்து கருத்து சொல்லவில்லை. வட நாட்டைப் போல ஆரோக்கியமற்ற சூழலை தமிழ்நாட்டில் உருவாக்க பார்க்கிறார்கள் என பேசியிருந்தார்.
இயக்குநர் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் அமீரின் குற்றச்சாட்டுக்கு மோகன்.ஜி பதிலளித்தார். அதில், நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் அமீரின் பேச்சு என்னை மிகவும் காயப்படுத்தியது. ஒரு படத்தை தயாரித்து திரையரங்குக்கு கொண்டு வருவது எவ்வளவு கடினம் என அவருக்கு தெரியும். அவரது கருத்து படம் பார்க்க நினைக்கும் பார்வையாளர்களை பாதிக்கும். இந்தப் படத்தில் எந்தவித சர்ச்சையும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறேன். விமர்சகர்களும் அப்படித்தான் சொல்லியிருந்தார்கள்.
அமீர் இப்படி பேசியிருக்ககக் கூடாது. கலைஞர் டிவியிடம் படம் கொடுத்துவிட்டேன் என்று கூறி திராவிட சித்தாந்தத்துடன் இணைந்துவிட்டதாக என்னை விமர்சிக்கிறார்கள். மற்றொரு பக்கம் நான் படம் எடுத்ததன் பின்னணியில் பிஜேபி இருப்பதாக இயக்குநர் அமீர் சொல்கிறார்.
திரௌபதி படத்தின்போது எனக்கு எச்.ராஜா மற்றும் மருத்துவர் ராமதாஸ் ஆதரவாக இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு படம் காண்பித்தேன். பகாசூரன் படம் எல்லோருக்குமான படம் என்பதால் யாருக்கும் பிரத்யேகமாக திரையிடவில்லை. எந்த அர்த்தத்தில் அரசியல் கட்சிகள் என் பின்னால் இருக்கின்றன என சொல்கிறீர்கள் என தெரியவில்லை.
என் படத்தை அதிகமாக பாமகவினர் பார்ப்பதாக சொன்னாலாவது அதில் ஒரு உண்மை இருக்கு. ஆனால் பாஜகவிடம் இருந்து பணம் வாங்கி படம் இயக்குகிறேன் என சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. இதற்கு ஆதாரமாக என்ன தரப்போகிறீர்கள் எனத் தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன். அப்படி இல்லையென்றால் நீங்கள் இந்த கருத்தை திரும்பப் பெற வேண்டும். தயவுசெய்து இப்படி அபாண்டமாக குற்றச்சாட்டு வைக்காதீர்கள் என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director ameer