கோவை ரேஸ்கோர்ஸில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கமல் அப்பகுதி மக்களை ஆச்சர்யப்படுத்தினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, அமமுக - தேமுதிக கூட்டணி, மநீம - சமக கூட்டணி, நாதக என தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி விட்டனர். கூட்டணி உடன்பாடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை என பிஸியாக இருந்த கட்சிகள் தற்போது இதையெல்லாம் முடித்து விட்டு, பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்கள்.

நடைப்பயிற்சியில் கமல்
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் கமல் ஹாசன் கோவை தெற்கில் போட்டியிடுகிறார். அங்கு திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும், அதிமுக கூட்டணியின் சார்பில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் போட்டியிடுகிறார்கள். அதனால் அங்கு யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களுக்கு எழத் தொடங்கி விட்டது. அங்கு போட்டியும் கடினமாக இருக்குமெனத் தெரிகிறது.
இதற்கிடையே நேற்று வேட்புமனு தாக்கல் செய்த கமல், இன்று காலை கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் மக்களோடு மக்களாக நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அவரைப் பார்த்த மக்கள் ஆச்சர்யமடைந்திருக்கிறார்கள். தற்போது அந்தப் படம் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்