கொரோனா பாதித்தவரை வீடியோ எடுக்காதீர்கள் - மிருணாளினி வேண்டுகோள்

நடிகை மிருணாளினி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரை வீடியோ, புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று நடிகை மிருணாளினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.

  இன்று 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 5,778 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சமூகவலைதளத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவிப்பு போஸ்டர், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை ஒரு சிலர் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பகுதியில் கருத்து பதிவிட்டிருக்கும் மிருணாளினி, “உங்கள் பக்கத்து வீட்டு நபர், பணியிடத்தில் உங்களுடன் பணியாற்றும் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்து அவரை தனிமைப்படுத்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும் போது அதை வீடியோ, புகைப்படம் எடுக்காதீர்கள். யாராவது அப்படி செய்தால் அதை தடுத்து நிறுத்துங்கள்.

  மாறாக உங்கள் வீட்டு பால்கனியில் அல்லது கதவருகே தள்ளி நின்று உங்களது கட்டை விரலை உயர்த்திக்காட்டி நம்பிக்கை, உற்சாகம் அளியுங்கள். விரைவில் குணமடைந்து திரும்புவீர்கள் என்று கூறி வாழ்த்துங்கள்.

  வைரஸ் வேகமாக பரவுவதைப் பார்த்தால் உங்களுக்குக் கூட ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. நம் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் ஆம்புலன்ஸ் வந்து நிற்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். அவரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பதை அவர் உணரச் செய்யுங்கள்.

  மற்றவர்களிடம் பயத்தை உருவாக்காதீர்கள். அந்த நபரைப் பற்றி அவதூறு சொல்லாதீர்கள். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளாரே தவிர குற்றவாளி அல்ல. நோயிலிருந்து மீண்டு திரும்பிவிடுவார். ஆனால் நோய் வந்த போது மற்றவர்கள் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது அவரிடம் நிரந்தரமாகத் தங்கி விடும். அன்பைப் பரப்புவோம். நம்பிக்கையை வளர்ப்போம். பாதுகாப்பாக இருங்கள். வீட்டிலேயே இருங்கள்” என்று மிருணாளினி தெரிவித்துள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: