ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவாஜி படத்தின் பாடல் போலவே எனது படத்திற்கு பாடல் வேண்டும் - கண்ணதாசனிடம் கோரிக்கை வைத்த எம்ஜிஆர்

சிவாஜி படத்தின் பாடல் போலவே எனது படத்திற்கு பாடல் வேண்டும் - கண்ணதாசனிடம் கோரிக்கை வைத்த எம்ஜிஆர்

பாவமன்னிப்பு, உலகம் சுற்றும் வாலிபன்

பாவமன்னிப்பு, உலகம் சுற்றும் வாலிபன்

இன்றும் ரசிகர்களால் ஆர்வமாக கேட்கப்படும் இந்தப் பாடல் எம்ஜிஆரை கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. இதுபோல் ஒரு பாடலை தனது படத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக அவர் பல ஆண்டுகள் காத்திருந்தார்.

  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அறுபது மற்றும் எழுபதுகளில் சிவாஜி - எம்ஜிஆர் இருவரும்தான் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார்கள். யாருடைய படம் அதிக நாள்கள் ஓடுகிறது, அதிகம் வசூல் செய்கிறது என்பது மட்டுமே இவர்களுக்கிடையிலான போட்டியில்லை. பாடல்கள், சண்டைக் காட்சி, ஒளிப்பதிவு, நகைச்சுவை என ஒரு படத்தின் பல்வேறு விஷயங்களில் யார் முந்தி, யார் பிந்தி என்பதையும் ஒவ்வொரு படத்துக்கும் ஒப்பிட்டுக் கொள்வார்கள்.

இந்த போட்டி விஷயத்தில் எம்ஜிஆர் எப்போதும் உஷாராக இருப்பார். அதிக மக்களை கவரும் ஜனரஞ்சக கதைகளே அவரது தேர்வாக இருக்கும். அழுதுவடியும் கதைகளை தொட மாட்டார். சிவாஜி அப்படியே நேரெதிர். கதையும், கதாபாத்திரமும் அவருக்குப் பிடிக்க வேண்டும். உணர்ச்சிகரமான கதை என்றால் சோகத்தைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. சோகத்தில் பிழிந்தெடுத்த பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் படங்களும்கூட அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன.

பாடல்கள் விஷயத்தில் இரு நடிகர்களுமே அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். 1961 வெளியான சிவாஜியின் பாவமன்னிப்பு படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், - ராமமூர்த்தி இசையில், கண்ணதாசன் எழுதிய, காலங்களில் அவள் வசந்தம் பாடல் வெளியானதும், இன்ஸ்டன்ட் ஹிட்டானது. அதுபோல் மயிலிறகால் வருடும் ஒரு காதல் பாடலை ரசிகர்கள் மிக அரிதாகவே கேட்டிருந்தனர். வருடங்கள் கழியும்தோறும் அந்தப் பாடல் மெருகேறி வந்தது. அந்தளவுக்கு கண்ணதாசன் வரிகளில் நவரசங்களை குழைக்க, பி.பி.ஸ்ரீனிவாஸ் பதம் கெடாமல் பாடியிருந்தார். அதன் வரிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை பித்துக் கொள்ள வைத்தன. பாடலில் நடித்த ஜெமினியும், சாவித்ரியும் தனி அழகு.

காலங்களில்

அவள் வசந்தம்

கலைகளிலே அவள்

ஓவியம் மாதங்களில்

அவள் மார்கழி மலர்களிலே

அவள் மல்லிகை (2)

காலங்களில்

அவள் வசந்தம்

பறவைகளில்

அவள் மணி புறா

பாடல்களில் அவள்

தாலாட்டு

பறவைகளில்

அவள் மணி புறா

பாடல்களில் அவள்

தாலாட்டு

கனிகளிலே

அவள் மாங்கனி (2)

காற்றினிலே அவள்

தென்றல்

காலங்களில்அவள் வசந்தம்

கலைகளிலே அவள்

ஓவியம் மாதங்களில்

அவள் மார்கழி மலர்களிலே

அவள் மல்லிகை

காலங்களில்

அவள் வசந்தம்

பால்போல்

சிரிப்பதில் பிள்ளை

அவள் பனிபோல்

அணைப்பதில் கன்னி (2)

கண்போல்

வளர்ப்பதில் அன்னை (2)

அவள் கவிஞன்

ஆக்கினால் என்னை

காலங்களில்

அவள் வசந்தம்

கலைகளிலே அவள்

ஓவியம் மாதங்களில்

அவள் மார்கழி மலர்களிலே

அவள் மல்லிகை

காலங்களில்

அவள் வசந்தம்...

இன்றும் ரசிகர்களால் ஆர்வமாக கேட்கப்படும் இந்தப் பாடல் எம்ஜிஆரை கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. இதுபோல் ஒரு பாடலை தனது படத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக அவர் பல ஆண்டுகள் காத்திருந்தார். அடிமைப்பெண் படத்திற்குப் பிறகு இணைந்த கைகள் என்ற படத்தை அறிவித்தார் எம்ஜிஆர். மெல்லிசை மன்னர் இசையில், கண்ணதாசன் வரிகளில் பாடல் தயாரானது. எம்ஜிஆர் கேட்டுக் கொண்டபடி, காலங்களில் அவள் வசந்தம் போலவே பாடல் வரிகளை எழுதினார் கண்ணதாசன். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மென்மையான காதல் பொங்கும் குரலில் பாடல் பதிவானது.

துரதிர்ஷ்டவசமாக இணைந்த கைகள் படம் முன்னோக்கி நகரவில்லை. கிடப்பில் போடப்பட்டது. அப்போதுதான் எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபனை தொடங்கினார். 1970 இல் தொடங்கப்பட்ட அந்தப் படத்தில் அவள் ஒரு நவரச நாடகம் பாடலை சேர்த்துக் கொண்டார். காலங்களில் அவள் வசந்தம் போலவே இந்தப் பாடலிலும் பெண்ணை உவமைகளுடன் வர்ணித்திருப்பார் கண்ணதாசன். ஆனால், இரண்டுக்குமிடையில் வித்தியாசமிருக்கும். முதலாவதில் கண்ணியமும், இரண்டாவதில் எம்ஜிஆர் ரசிகர்களை பரவசப்படுத்தும் கவர்ச்சியும் மிகுந்திருப்பதை பார்க்கலாம்.

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்

தழுவிடும் இனங்களில் மான் இனம்

தமிழும் அவளும் ஓரினம்

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்

மரகத மலர் விடும் பூங்கொடி

மழலை கூறும் பைங்கிளி

மரகத மலர் விடும் பூங்கொடி

மழலை கூறும் பைங்கிளி

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்

என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்

ஆஹா ஹா ஆஹா ஹா

ஆஹா ஹா ஆஹா ஹா

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்

குறுநகை கோலத்தில் தாமரை

கோடைகாலத்து வான்மழை

குறுநகை கோலத்தில் தாமரை

கோடைகாலத்து வான்மழை

கார்த்திகை திங்களின் தீபங்கள்

கார்த்திகை திங்களின் தீபங்கள்

கண்ணில் தோன்றும் கோலங்கள்

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்

அறுசுவை நிரம்பிய

பால்குடம்

ஆடும் நடையே நாட்டியம்

அறுசுவை நிரம்பிய

பால்குடம்

ஆடும் நடையே நாட்டியம்

ஊடல் அவளது வாடிக்கை

ஊடல் அவளது வாடிக்கை

என்னை தந்தேன் காணிக்கை

ஆஹா ஹா ஆஹா ஹா

ஆஹா ஹா ஆஹா ஹா

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்

தழுவிடும் இனங்களில் மான் இனம்

தமிழும் அவளும் ஓரினம்

அவள் ஒரு நவரச நாடகம்….

கலைஞர்களுக்குள் இருந்த போட்டியால் பல நன்மைகள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளன. அதில் ஒன்று, அவள் ஒரு நவரச நாடகம் பாடல். மெல்லிசை மன்னரின் இசையில், கவியரசு கண்ணதாசனின் வரிகளில் இவ்விரு பாடல்களுமே காலம் கடந்தும் கேட்கப்படுகின்றன. எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் கேட்கப்படும்.

Also read... சரோஜாதேவிக்கு பாராட்டும், சௌகார் ஜானகிக்கு ஏமாற்றமும் தந்த பாலும் பழமும் படம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Sivaji ganesan, Classic Tamil Cinema, MGR