பொட்டுக்கட்டுதல் என்பது இந்திய கோவில்கள் நடைமுறையில் இருந்து வந்த வழக்கம். 30 க்கும் மேற்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் குழந்தைகள், கோவில்களுக்கென்றே நேர்ந்து விடப்படுவார்கள். கோவிலுக்குரிய வேலைகள் செய்வதுடன், அந்த ஊர் பெரிய மனிதர்களின் இச்சைக்கு இணங்கிப் போவது இவர்களின் வேலை. கோவிலில் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனங்களை ஆடுவதும் இவர்களே. அதனால், பரதநாட்டியத்தை இழிவாக பேசிய, பார்த்த காலகட்டம் ஒன்றும் இருந்தது.
பரம்பரை பரம்பரையாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் அனுபவித்து வந்த தேவதாசிமுறைக்கு எதிராக பலரும் போராடினர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி, பெரியார் ஆகியோர் தாசிமுறைக்கு எதிராக தீவிரமாக போராடியவர்கள். தமிழக சட்டசபையில் இந்த விவாதம் வந்த போது, காங்கிரஸ் உறுப்பினரும் தீவிர சனாதனியுமான சத்தியமூர்த்தி தேவதாசி முறையை ஆதரித்துப் பேசினார். தேவதாசிகள் என்பவர்கள் ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள். அவர்கள் தேவர்களின் அடிமைகள் அதாவது தெய்வத்தின்; அடிமைகள் என்ற புனிதத்தன்மையை பெற்றவர்கள். அதை ஏன் ஒழிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த டாக்டர் முத்துலட்சுமி, தேவதாசிமுறை புனிதமானது என்றால், அது ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றால், இதுவரை எங்கள் குலத்துப் பெண்கள் அதை செய்து வந்தார்கள், இனிமேல் அதனை உங்கள் வீட்டுப் பெண்களை வைத்து செய்து கொள்ளுங்கள் என்றார்.
தேவதாசிமுறை சட்டப்படி ஒழிக்கப்பட்டாலும் அதற்கு ஆதரவான குரல்கள் அவ்வப்போது எழுந்து கொண்டேதான் இருந்தது. எழுத்தாளர் சிவசங்கரி ஒருமுறை தேவதாசிமுறையை புகழ்ந்து எழுதினார். அதற்கு மு.கருணாநிதி, ஒரு தேவதாசியே எழுதியது போல் உள்ளது என ஒரே வரியில் பதிலளித்தார். தன்னை தேவதாசி என்று குறிப்பிட்ட அந்த பதிலால் சிவசங்கரி துடித்துப் போனார். அப்போதுதான் அந்த சொல்லின்; உண்மையான அர்த்தம் அவருக்கு உறைத்தது. அந்த முறையை குறித்து ஆராய்ந்து, தேவதாசி முறை தவறு என ஒரு நாவலே எழுதினார்.
இப்படி தமிழக வரலாற்றில் தேவதாசிமுறை ஆதரவையும், எதிர்ப்பையும் சந்தித்து வந்துள்ளது. 1943 இல் தாசிப்பெண் திரைப்படம் இதே தேவதாசிமுறை பின்னணியில் எடுக்கப்பட்டது. சமூகத்தில் நிலவிய அரசியல் கருத்துக்களை புறந்தள்ளி ஒரு கதையாக இதனை எல்லீஸ் ஆர்.டங்கன் எடுத்தார். உண்மையில் பம்மல சம்பந்த முதலியார் நடத்தி வந்த தாசிப்பெண் நாடகத்தின் தழுவல்தான் இந்தத் திரைப்படம்.
இதில் தாசிப்பெண்ணாக ஆர்.பாலசரஸ்வதி நடித்தார். பணத்திற்காக அவரது குடும்பம் அவரை ஜமீன்தார் ஒருவருக்கு ஆசை நாயகியாக இருக்க வற்புறுத்தும். பாலசரஸ்வதி சிவனின் பக்தை. தவிர டி.ஆர்.மகாலிங்கத்தை காதலித்து வருவார். இதனால் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு அடிபணிய மாட்டார். ஜமீன்தார் பாலசரஸ்வதியை கடத்தி திருமணம் செய்ய முயற்சிக்க, அதனை சிவனும், பார்வதியும் சேர்ந்து முறியடிப்பார்கள். இறுதியில் தாசிப்பெண் பாலசரஸ்வதியை தும்பைப் பூவாக மாற்றி சிவன் சூடிக்கொள்வார். சிவனுக்கு தும்பபை பூவில் அர்ச்சனை செய்யும் மரபையும் தாசிப்பெண்ணில் இணைத்திருந்தனர். இந்தக் கதையுடன் கிளைக்கதையாக திருமணமான பாலசரஸ்வதியின் அக்கா டி.ஏ.மதுரம் சேலை வியாபாரியான என்.எஸ்.கிருஷ்ணனுடன் கொள்ளும் காதலும் வரும். இவர்கள் இணையும் போதெல்லாம் பயமுறுத்தும் தோற்றத்தில் வந்து அவர்களை பிரிக்கிற நபராக புளிமூட்டை ராமசாமி நடித்தார்.
எம்ஜிஆர் இந்தப் படத்தில் சிவனாக சிறிய வேடத்தில் தோன்றினார். பார்வதியாக நடித்தவர் எம்.ஆர்.சந்தானலட்சுமி. படத்தில் மொத்தம் 30 பாடல்கள். இசையமைத்தவர்கள் லலிதா வெங்கட்ராமனும், எஸ்.ராஜேஷ்வர ராவும். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதியை இயக்கியவர். சரியாக தமிழ் தெரியாமலே புராண, இதிகாச. சரித்திர கதைகளை தமிழில் படமாக்கினார். பக்த நந்தனார், அம்பிகாபதி, சகுந்தலை, மீரா, மந்திரி குமாரி அதில் சில. தாசிப்பெண் அவரது முக்கியமான படம். அதனை படமாக்கும் போது இரண்டாம் உலகப்போரால் ஃபிலிம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட, இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய படமாக அதனை எடுத்தனர். அந்தக் காலகட்டத்தில் படங்கள் சாதாரணமாக 3, 4 மணி நேரங்கள் ஓடக்கூடியதாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக தாசிப்பெண்ணின் பிரதி இன்று நம்மிடையே இல்லை. காலத்தால் நிரந்தரமாக அழிந்துப்போன பலநூறு தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. தாசிப்பெண் ஜோதிமலர் என்ற பெயரிலும் அப்போது அறியப்பட்டது. 1943 மார்ச் 3 ஆம் தேதி வெளியான தாசிப்பெண் இன்று 80 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema, MGR