திராவிட இயக்கத்தில் வந்தவர்களில் கடவுள் நம்பிக்கையை வெளிப்படையாக பொதுவெளியில் காட்டிக் கொண்ட முதல் முதலமைச்சர் எம்ஜிஆர். கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தர். அவர் சினிமாவில் கடவுளை புகழந்து பாட மறுத்த சம்பவம் நடந்திருக்கிறது. அந்த விவகாரம் நீதிமன்றம் வரைக்கும் சென்று ஒரு தயாரிப்பாளரை சொந்த வீட்டையே இழக்கச் செய்தது.
இந்த நிகழ்வு நடந்தது 1957-ல். அந்த நேரத்தில் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக்கத்தில் எம்ஜிஆர் தீவிர உறுப்பினராக இருந்தார். கடவுள் மறுப்பை வலிமையாக பேசிய திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த இயக்கம் என்பதால், திமுகவின் ஆரம்பகால தலைவர்கள், தொண்டர்கள் தீவிர கடவுள் மறுப்பாளர்களாக இருந்தனர். ஆரம்ப காலத்தில் சிவாஜி கூட திமுக அனுதாபியாக இருந்தார். அவர் திருப்பதி சென்றதை கட்சிக்காரர்கள் விமர்சித்தது, அவர் காங்கிரஸில் இணைவதற்கான காரணங்களில் ஒன்று என்பார்கள்.
1957-ல் எம்ஜிஆரை நாயகனாக்கி லலிதாங்கி என்ற படத்தை பாடலாசிரியர் தஞ்சை என்.ராமையா தாஸ் ஆரம்பித்தார். இந்தப் படம் 1935-ல் இதே பெயரில் வெளியான திரைப்படத்தின் ரீமேக். படம் பத்தாயிரம் அடி வளர்ந்த நிலையில், கடவுளை புகழ்ந்து பாடும் காட்சியில் எம்ஜிஆர் நடிக்க வேண்டியிருந்தது. கட்சி கொள்கைக்கு விரோதமான
பாடல் என்பதால் அதில் நடிக்க முடியாது என்று எம்ஜிஆர் மறுத்தார். இதனால் லலிதாங்கி படம் முடங்கிப் போனது. ஆனால், தயாரிப்பாளர் ராமையா தாஸ் அசரவில்லை. இந்த இடத்தில் ராமையா தாஸை குறித்து சொல்ல வேண்டும். இவர் கரந்தை தமிழ் சங்கத்தில் புலவர் பட்டம் பெற்று தஞ்சையில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
நாடகத்தில் ஏற்பட்ட ஆர்வத்தில் ஜகன்நாத நாயுடு நடத்தி வந்த சுதர்சன கான சபா நாடகக்குழுவில் எழுத்தாளராக இணைந்தார். பிறகு ஜெயலக்ஷ்மி கான சபா என்ற சொந்த நாடகக் கம்பெனியை தொடங்கி நாடகங்கள் எழுதி அரங்கேற்றினார். அவர் அரங்கேற்றிய நாடகங்களுள் ஒன்றான மச்ச ரேகையை பார்த்த நடிகரும், தயாரிப்பாளருமான டி.ஆர்.மகாலிங்கம் 1950-ல் மச்ச ரேகையை திரைப்படமாக்கினார். படம் ஓடவில்லை. ஆனால் ராமையா தாஸ்
சென்னை வந்து முழுநேர சினிமாக்காரர் ஆவதற்கு அது உதவியது. அப்போது பிரபலமாக இருந்த விஜயா வாகினி ஸ்டுடியோவில் எழுத்தாளராக 1950 - 1960 வரை பணிபுரிந்தார். மிஸ்ஸியம்மா, மாயபஜார், பாதாள பைரவி உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார். ஒமகசீயா போன்ற பொருளற்ற பாடல்களுக்கு முன்னோடி ராமையா தாஸ். இதனால் இவருக்கு டப்பாங்குத்து பாடலாசிரியர் என்ற பெயரும் இருந்தது. ஜாலியோ ஜிம்கானா டோலியோ கும்கானா என்ற பாடலை இவர் அமர தீபம் படத்துக்காக எழுதினார். மொத்தப் பாடலும் இதுபோன்ற பொருளற்ற வரிகளால் நிரம்பியிருக்கும். ஆனால், பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!

ராணி லலிதாங்கி
லலிதாங்கி படத்தில் மொத்தம் 14 பாடல்கள். ஜி.ராமநாதன் படத்துக்கு இசையமைத்திருந்தார். கடவுளை புகழ்ந்து பாட எம்ஜிஆர் மறுத்ததால் அவரை வைத்து எடுத்த பத்தாயிரம் அடி காட்சிகளையும் தூக்கிப்போட்டு அதே கதையை சிவாஜியை வைத்து புதிதாக எடுத்தார் ராமையா தாஸ். இதனை கேள்விப்பட்ட எம்ஜிஆர் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ராமையா தாஸ் பதிலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த சட்டப்போரில் ராமையா தாஸே வென்றார். சிவாஜி நடிப்பில் லலிதாங்கி ராணி லலிதாங்கி என்ற பெயரில் வெளியானது. ஆனால்,
படம் தோல்வியடைந்தது. எம்ஜிஆரை வைத்து பத்தாயிரம் அடிகள் எடுத்தது, படத்தின் தோல்வி எல்லாமும் சேர்ந்து ராமையா தாஸை கடனாளியாக்கியது. வடபழனியில் இருந்த தனது வீட்டை விற்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இதுபற்றி பிறகு நினைவுகூர்ந்த அவரது மகள், படம் தயாரித்து எழுதி சம்பாதித்த அனைத்தையும் அவர் இழந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
17 ஆண்டு மண வாழ்க்கை... மனைவி முத்துமலரை விவாகரத்து செய்த இயக்குநர் பாலா

ராமையா தாஸ்
லலிதாங்கிக்குப் பிறகும் ராமையா தாஸ் எம்ஜிஆர் படத்தில் பாடல்கள் எழுதினார். எனினும் தயாரிப்பினால் இழந்ததை அவரால் மீட்டெடுக்க முடியவில்லை. 83 திரைப்படங்களில் 532 பாடல்களும், 25 படங்களுக்கு திரைக்கதை, வசனமும், 10 படங்களுக்கு கதையும் எழுதிய ராமையா தாஸ் தயாரிப்பாளராக தோல்வி கண்டு 1963 ஆம் ஆண்டு தனது ஐம்பதாவது வயதில் மரணமடைந்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.