1957 இல் வி.சாந்தாராம் இந்தியில் இயக்கி, நடித்த டூ ஆன்கீன் பாரத் ஹாத் திரைப்படம் ஒரு கிளாசிக் ஹிட். இளம் ஜெயில் வார்டனான சாந்தாராம், ஆறு குற்றவாளிகளை தேர்வு செய்து, அவர்களை தனது பண்ணையில் உடல் உழைப்பில் ஈடுபத்தி, உயர்வான மனிதர்களாக மாற்றிக் காட்டுவார்.
இந்தப் படத்தின் இன்ஸ்பிரேஷன கே.பாலசந்தர் 1971 இல் நான்கு சுவர்கள் திரைப்படத்தை எழுதி, இயக்கினார். அவர் கலரில் இயக்கிய முதல் படம் இது. திருடர்களான ரவிச்சந்திரனும், ஜெய்சங்கரும் ஒரு பங்களாவில் திருடச் செல்லும் போது, அங்கிருக்கும் முதியவர் அவரோகவே சாவியை எடுத்து இவர்களிடம் தருவார். அது அவர்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தும்.
அந்த முதியவர் தாங்கள் வளர்ந்த அனாதை விடுதியின் தலைவர் என்பதை இருவரும் அறிந்து கொள்வார்கள். 'இந்த சமூகம் பிடிக்காமல்தான் நீங்க திருடனானீங்க, அதே மாதிரி இந்த சமூகம் பிடிக்காமப் போய்தான் நானும் தனியா வாழ்ந்திட்டிருக்கேன். நீங்க மனசு வச்சா திருடன், பிக்பாக்கெட்னு எல்லோரையும் திருத்த முடியும்' என்று அறிவுரை வழங்கி அவர் இறந்து போவார்.
ரவிச்சந்திரனும், ஜெய்சங்கரும் அப்படியான குற்றவாளிகளை தேடிப் பிடித்து, அந்த முதியவரின் நிலத்தில் பாடுபட வைத்து, அவர்களை திருத்துவார்கள்.
வாணிஸ்ரீ, ஆர்.எஸ்.மனோகர், நாகேஷ், சௌகார் ஜானகி, விஜய நிர்மலா, ஸ்ரீவித்யா என திறமையான நடிகர்கள், புத்திசாலித்தனமான வசனங்கள், எம்.எஸ்.வி.யின் மயக்கும் இசை என அனைத்தும் இருந்தும் நான்கு சுவர்கள் ஓடவில்லை. படம் தோல்வியடைந்தது. இதே சாந்தாராமின் படத்தை 1975 இல் கே.சங்கர் எம்ஜிஆரை வைத்து பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் எடுத்தார். படம் ஹிட்டானது.
ஒரே கதை பாலசந்தருக்கு தோல்வியாகவும், எம்ஜிஆருக்கு வெற்றியாகவும் அமைந்தது. பாலசந்தர் இரண்டு திருடர்கள் பல திருடர்களை திருத்துவது போல் எடுத்தார். அதனால், ஒரு நெருடல் படத்தில் இருந்து கொண்டே இருந்தது. பல்லாண்டு வாழ்க படத்தில் எம்ஜிஆர் சிறை வார்டன். நல்லவர். அவர் கெட்டவர்களை திருத்துவது இயல்பாகவும், எளிதாகவும் வெகுஜனங்களை சென்றடைந்தது.
பாலசந்தர் படத்தில் இரண்டு நாயகர்கள். அதனால் ஹீரோயிசம் குறைவு. பல்லாண்டு வாழ்கயில் எம்ஜிஆர் தனி ஹீரோ. ஹீரோயிசம் தூக்கல். பாலசந்தர் தனது படத்தின் வசனம், காட்சி அனைத்திலும் அரசியல்வாதிகளை குற்றப்படுத்திக் கொண்டே இருப்பார்.
பல்லாண்டு வாழ்க படத்தில் எம்ஜிஆரிடம் இருந்து தப்பித்துப் போகும் குற்றவாளிகள் அண்ணாவின் சிலையைப் பார்த்ததும் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். அண்ணாவின் சிலையில் அவர்கள் பார்ப்பது அண்ணாவின் கண்களையல்ல, எம்ஜிஆரின் கண்களை. இதில் அண்ணா என்ற அரசியல்வாதி பாசிட்டிவாக காட்டப்பட்டிருந்தார்.
எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கிய நேரம், அண்ணாவின் அடுத்த வாரிசு எம்ஜிஆர் என்பதை இந்தக் காட்சிகளின் மூலம் அழுத்தமாக பதிய வைத்தார். இவையெல்லாம் சேர்ந்து பாலசந்தர் படத்தை தோல்விப் படமாகவும், எம்ஜிஆர் படத்தை வெற்றிப் படமாகவும் ஆக்கின.
1971, பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியான பாலசந்தரின் நான்கு சுவர்கள் இன்று 52 வருட நிறைவை கொண்டாடுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema, MGR