ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவளி ரிலீஸ்.. பிரெஞ்ச் நாவலை தழுவி எடுக்கப்பட்ட எம்ஜிஆரின் 'நீரும் நெருப்பும்'!

தீபாவளி ரிலீஸ்.. பிரெஞ்ச் நாவலை தழுவி எடுக்கப்பட்ட எம்ஜிஆரின் 'நீரும் நெருப்பும்'!

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

1971 தீபாவளிக்கு எம்ஜிஆரின் நீரும் நெருப்பும், சிவாஜியின் பாபு படங்கள் மோதின.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீரும் நெருப்பும் படத்தில் எம்ஜிஆருக்கு இரண்டு வேடங்கள். ஜோடி ஜெயலலிதா. எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருப்பமான வாள் சண்டை படத்தில் தாராளமாக இருந்தது.

முன்பு கதையில் எந்த பூடகமும் இல்லாமல் நேரடியாகச் சொல்வார்கள். நீரும் நெருப்பும் ஆங்கிலேயர்களின் வருகையையொட்டிய காலகட்டத்தில் மார்த்தாண்டன் - பூபதி என்ற குறுநில மன்னர்களைப் பற்றிய கதை என்று டைட்டிலிலேயே கூறியிருந்தனர்.

குறுநில மன்னர்கள் என்றால் ஆள், அம்பு, அரண்மனை எல்லாம் வேண்டும். படத்தில் எல்லாம் இருந்தது. பஞ்சத்தில் எடுத்தது போல் கொஞ்சமாக.மார்த்தாண்டனாக அசோகன். அவருக்கு பூபதிக்கு கிடைத்திருக்கும் நற்பெயர் காரணமாக அவர் மீது பொறாமை. இரட்டை குழந்தை பிறந்ததை பூபதி கொண்டாடும் போது அழையா விருந்தாளியாக சென்று பூபதியை கொன்றுவிடுகிறார். பூபதியின் மனைவி, அவரே போயிட்டார், இனிமே இந்த கட்டை தாங்காது என்று அவரும் உயிரைவிடுகிறார்.

நீரும் நெருப்பும்

மார்த்தாண்டன் பூபதியின் அரண்மனையை தீக்கிரையாக்குகிறார்.

பூபதியின் இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், மருத்துவர் அந்தக் குழந்தைகளை காப்பாற்றி மூத்த குழந்தையை தனது பணக்கார தங்கைக்கு தருகிறார். இளைய குழந்தையை பூபதியின் மெய்க்காப்பாளர் பி.எஸ்.வீரப்பா காட்டில் வளர்க்கிறார்.

கதையை படிக்கும் போதே இந்த இரண்டு குழந்தைகள்தான் இரண்டு எம்ஜியார்கள் என்பதை குழந்தையும் யூகித்துவிடும். இதில் காட்டில் வளரும் இளைய எம்ஜிஆரை கருப்பாகவும், நகரத்து எம்ஜிஆரை சிவப்பாகவும் காட்டியிருப்பார்கள். ஒட்டிப் பிறந்த இந்த இரட்டைக் குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்து பிரித்திருப்பார்கள். இதனால், மூத்தவனுக்கு ஏற்படும் எல்லா உணர்ச்சியும் இளையவனுக்கும் ஏற்படும். ஆனால் இளையவனின் உணர்ச்சிகள் மூத்தவனை பாதிக்காது.

அசோகனின் ஆள்களால் துரத்தப்பட்டு மூத்த எம்ஜிஆரால் காப்பாற்றப்படும் ஜெயலலிதா சினிமா வழக்கப்படி அவரை காதலிப்பார். அண்ணன் காதலிக்கையில், தம்பியும் ரொமான்ஸ் மூடுக்கு வருவார். கடைசியில் அவரை அநியாயமாக சாகடித்துவிடுவார்கள். ட்ராஜடியில் முடியும் எம்ஜிஆர் படங்களில் இதுவும் ஒன்று. 1844 பிரெஞ்சில் வெளியான அலெக்ஸாண்டர் டுமாஸின் தி கார்ஸிகன் பிரதர்ஸ் நாவலை மேலோட்டமாக தழுவி இந்தப் படத்தை எடுத்திருந்தனர்.

படத்தில் வரும் கறுப்பு எம்ஜிஆருக்கும் ஒரு ஜோடியை கொடுத்து, இரண்டு பாடல்கள் பாட வைத்து, இறுதியில் சுபமாக முடித்திருந்தால் படம் ஓடியிருந்திருக்கும். சிவாஜியின் பாபுடன் ஒப்பிடுகையில் நீரும் நெருப்பும் சுமாராகவே போனது. தேங்காய் சீனிவாசனின் வசனக் காமெடியும் படத்தை காப்பாற்றவில்லை. மனோரமாவின் வேலைக்கார கதாபாத்திரமும் தேறவில்லை. எம்ஜிஆரின் சைனாக்காரர் வேஷமும் ஒட்டாமலே போனது.

1965 இல் வெளியான எங்க வீட்டுப் பிள்ளையின் சாயல் வந்துவிடக் கூடாது என்று இயக்குனர் ப.நீலகண்டனும், எம்ஜிஆரும் எடுத்த முயற்சி படத்தை தோல்வியின் கரையில் ஒதுக்கியது. 1971, அக்டோபர் 18 வெளியான படம் இன்றுடன் 51 வருடங்களை நிறைவு செய்கிறது.

Published by:Murugadoss C
First published:

Tags: MGR, Tamil Cinema