நகைச்சுவை நடிகர் ஒருவர் மறைவிற்கு இத்தனை திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், சாமானிய மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த காரணம் என்ன? வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார்! இந்த பாடல் வரிகள் எம்ஜிஆருக்காக மன்னாதி மன்னன் திரைப்படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதியது. இந்த பாடலை மனதில் வைத்து ஒரு முழு எம்ஜிஆர் ரசிகனாக திரை துறையில் கால் பதித்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் மயில்சாமி.
இதற்கு அவரது நடிப்பு மட்டும் காரணம் அல்ல. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே தன் கையில் இருக்கும் பணத்தை மற்றவர்களுக்கு உதவிக்காக கொடுப்பார். அப்படி குணம் கொண்டவருக்கு அரசியலில் பிரகாசமான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரையே தனது வாழ்வின் முன்மாதிரியாக வைத்துக்கொண்டு திரை திரையில் கால் பதித்து நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வாழ்ந்தவர் மயில்சாமி.
கஷ்டம் என்று வருபவர்களுக்கும், கஷ்டம் என்று அவர் கண்கூடாக பார்ப்பவர்களுக்கும் உடனடியாக உதவி செய்யும் குணம் கொண்டவர் மயில்சாமி. கொரோனா காலகட்டத்தில் தன் உயிர் நண்பனான நடிகர் விவேக்கின் மரணம் அவரை பெரிய அளவில் பாதித்தது. மாரடைப்பால் திடீர் மரணம் ஏற்பட்ட விவேக்கின் உடலை பார்த்து மயில்சாமி கதறி அழுதார். சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தனது இல்லத்தை கொண்டிருக்கும் மயில்சாமி அக்கம் பக்கத்தினருக்கு தேவையான உதவிகளை குறிப்பாக பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்வது, அவர்களுக்கு நிதி கொடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் உதவிக்கரமாக இருந்துள்ளார்.
திரைத்துறையில் எல்லாரையும் விட யதார்த்த குணம் உடையவர். கள்ளம் கபடம் இல்லாமல் பழகக்கூடியவர் என்பதே திரையுலகினர் அவரை பற்றி சொல்லக்கூடிய பெருமை மிகு தகவல். அது மட்டுமல்லாமல் திரைப்படத்தில் எந்த வேடம் என்றாலும் தயங்காமல் நடிப்பதில் அவருக்கு பிடித்தமான ஒன்று. தன்னுடன் பணியாற்றும் சிறு கலைஞர்கள் அவரது குடும்பத்தினர் என்று அனைவரிடமும் அன்பாகவும், ஆதரவாகவுமே மயில்சாமி இருந்துள்ளார்.
நடிகராக நகைச்சுவை குணம் கொண்ட மயில்சாமி வாழ்க்கையில் பலருக்கு உதவி செய்ததன் காரணமாக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார் அதனால் தான் இத்தனை பேர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்தனர். திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரபலங்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பொறுப்பில் உள்ள நபர்கள் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.