‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.30 ஆண்டுகள்.. 60 படங்களில் இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார்.
1993-ல் தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜித்துக்கு முதல் படத்திலேயே தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்துவிடவில்லை. கூடவே இவருடைய தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்பதுபோன்ற விமர்சனங்களும் எழுந்தன. எனினும் தொடர்ந்து விடா முயற்சியுடன் போராடிய அஜித்துக்கு ஆசை, காதல் கோட்டைபோன்ற படங்கள் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது.
தொடர்ந்து காதல் மன்னன், வாலி, தீனா, சிட்டிசன் என அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்த அஜித், அதன்மூலம் எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் தமிழ் சினிமாவின் அடுத்த வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தார்.
ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பிருந்ததை விட பெரிய ஹிட் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல். ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகள் துரத்திய போதும் துவண்டு போகாத அஜித், 2007-ம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்து தான் விட்டுச்சென்ற சிம்மாசனத்தில் மீண்டும் ஒய்யாரமாக ஏறி அமர்ந்தார்.
இதையும் படிங்க: May day: உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்.. தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுத்த மே தினம்
ரசிகர்களின் நலனை மனதில் கருதி மன்றங்களை கலைத்தது, கலைஞர் பாராட்டு விழாவில் தன்னை வர்புறுத்தி வர சொன்னதாக பேசியது என படங்களை விடவும் அஜித்தின் துணிச்சலும் தன்னம்பிக்கையுமே அவருக்கான ரசிகர் படையைக் வலுவாக கட்டமைத்தது.
நடிப்பைத் தாண்டி விளையாட்டுத் துறையிலும் சாம்பியனாகவே அஜித் வலம்வருகிறார். முறைப்படி கார் பந்தயத்தில் பங்கேற்ற அவர், 2002-ம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற ஃபார்முலா மாருதி சாம்பியன்ஷிப் போட்டியில் 4-ம் இடம் பிடித்து அசத்தினார். அதேபோல் அஜித்தின் வழிகாட்டுதலில் வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்ஷா அணியின் ஆளில்லா விமானம் சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்று நீண்டநேரம் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்தது.
மேலும் படிக்க: 13 ஆண்டுகள் காத்திருப்பு... பிரமாண்டத்தின் உச்சம்... அவதார் 2 : சிறப்பு பார்வை
தனது திரைப்படங்களின் விமர்சனங்கள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாதவர் அஜித். அவரது கடும் உழைப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. அதேவேளையில் பொதுமக்களிடையே கலவையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் திரும்பவும் ஹெச்.வினோத் கூட்டணியில் அடுத்த படத்தை தொடங்கி அஜித் நடித்து வருகிறார்.
திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித். இன்று மட்டுமல்ல தமிழ் சினிமா இருக்கும் வரை அதில் அஜித் எனும் தன்னம்பிக்கை நாயகனின் பெயர் ஒலித்துகொண்டே இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.