நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இந்நிலையில், நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்திருந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசிய போது, கொரோனா தொற்று என இல்லாத ஒன்றை இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும், யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் கொரோனா தடுப்பூசி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல், உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகானின் மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டாதாகவும், உள்நோக்கத்தோடு தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லையெனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே போல,கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தான் கூறியதாகவும், தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது மன்சூர் அலிகான் தரப்பில் திட்டமிட்டு அது போன்ற கருத்துகளை அவர் தெரிவிக்கவில்லை எனவும், தன்னை அறியாமல் அவர் பேசி விட்டதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இது போன்ற வதந்திகளையும், அச்சத்தையும் மக்களிடையே பரப்ப கூடாது என தெரிவித்த நீதிபதி, அறிவியல் தொழில் நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமெனவும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர், சுகாதார பணியார்களின் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் 2 லட்ச ரூபாய்க்கான வரைவோலையை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Mansoor ali khan