தமிழர்களின் உணர்வுகள் எங்களுக்குத் தெரியும்- பேமிலி மேன்-2 விவகாரம் தொடர்பாக மனோஜ் பாஜ்பாய் விளக்கம்

மனோஜ் பாஜ்பாய்

தி பேமிலி மேன் -2 இணையத் தொடர் சர்ச்சை தொடர்பாக இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் விளக்கம் அளித்துள்ளார்.

 • Share this:
  அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியான தொடர் தி பேமிலி மேன் வெப் சீரிஸ். 2019-ல் வெளியான இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். The Family Man தொடர் என்பது தேசியப் புலனாய்வு முகமையில் அச்சுறுத்தல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு அணியில் பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் சாகசங்களைச் சொல்லும் கதை.

  முதல் சீஸனில் ஐஎஸ்ஐஎஎஸ் குழுவால் தூண்டப்பட்ட இஸ்லாமியவாத தீவிரவாத தாக்குதல்களை ஸ்ரீகாந்த் திவாரியின் அணி முறியடிப்பதாகக் காட்டப்படும். மற்றொரு பக்கம், ஸ்ரீகாந்தின் குடும்ப வாழ்க்கை மோசமடைந்து கொண்டே போவது குறித்த காட்சிகளும் இடம்பெற்றன. ஸ்ரீகாந்தாக மனோஜ் பாஜ்பாயும் அவரது மனைவி சுசித்ராவாக பிரியாமணியும் நடித்திருந்தனர். இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் சண்டைகள், டெல்லியில் தீவிரவாதிகள் விஷ வாயு தாக்குதல் நடத்தப்படுவது போல காட்சிகள் இருக்கும். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது.

  அமேசான் ப்ரைமில் வெளியான இந்த தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்த சீஸன் எப்போது என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இரண்டாவது சீஸன் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீஸனுக்கான ட்ரெய்லர் மே 20-ம் தேதி வெளியானது. இந்த இரண்டாவது சீசனின் கதைக் களம் சென்னையில் நடைபெறுவதுபோல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கமாக சித்தரித்து அவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது சித்தரிக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது.

  இந்த தொடரில் சமந்தா விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக நடித்துள்ளார். அதனையடுத்து, தி பேமிலி மேன் -2 தொடருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சீமான், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த தொடரை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்தத் தொடரை தடை செய்யவேண்டும் என்று தமிழக அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

  இந்தநிலையில், பேமிலி மேன் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மனோஜ் பாஜ்பாய் பேமிலி மேன் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவருடைய விளக்கத்தில், ‘தி பேமிலி மேன் -2 ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த சில ஷாட்களைப் பார்த்து சில அனுமானங்கள் மற்றும் நிலைப்பாடுகள் உருவாகியுள்ளது. இதில் முக்கிய கதாப்பாத்திரங்கள் மற்றும் கிரியேட்டிவ் மற்றும் திரைக்கதைப் பணியில் ஈடுபட்டவர்களில் பலர் தமிழர்கள். தமிழ் மக்களின் உணர்வுகள் மற்றும் தமிழ் கலாச்சாரம் குறித்து முழுவதும் அறிந்தவர்கள்.

  அதுமட்டுமில்லாமல் தமிழ் மக்களின் மீது மிகப்பெரும் மரியாதையும் அன்பும் கொண்டுள்ளோம். இந்த படைப்புக்காக சில ஆண்டுகள் முழு உழைப்பைச் செலுத்தியுள்ளோம். எங்களது பார்வையாளர்கள் நுட்பமாக தொடரைப் பார்க்க நாங்கள் அதிக வலிகளை எடுத்துக்கொண்டுள்ளோம். அனைவரும் காத்திருந்து இந்தத் தொடர் வெளியாகும்போது கண்டுகளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் ஒருமுறை இதைப் பார்த்தால் பாராட்டுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: