இயக்குநர் வெங்கப் பிரபு இயக்கியிருக்கும் மன்மத லீலை வெளியாகியிருக்கும் இந்த தருணத்தில், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டு வெளிவந்த ‘மன்மத லீலை’ படத்தைப் பற்றி பார்ப்போம்.
கே பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘மன்மத லீலை’. குடும்ப சிக்கல்களையும் வரம்பு மீறல்களையும் இலை மறை காயாக சொல்லி வந்த தமிழ் சினிமாவில் முதல் முறையாக கதையமைப்பிலும், காட்சியமைப்பிலும் வெளிப்படையாக பேச தயங்கும் விஷயங்களையும் பார்க்க மறுத்த காட்சிகளையும் படம் போட்டு காண்பித்தது பாலசந்தரின் இந்த ‘மன்மத லீலை’.
திருமணமான பெண்கள் உட்பட பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் மதன் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக லீலை செய்திருந்தார் கமல்ஹாசன். ‘அபூர்வ ராகங்கள்’, ’மூன்று முடிச்சு’ போன்ற திரப்படங்களில் நடித்து ஒரு முன்னணி நாயகனாக வளர்ந்து கொண்டிருந்த கமல்ஹாசன் இளம் பெண்களை ஏமாற்றி கற்பை சூறையாடும் கேரக்டரில் நடித்திருந்தது அப்போது அவரது ரசிகர்களிடத்தில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்திருந்தது.
அதுவரை தமிழ் சினிமாவில் நாயகன் என்பவன் அப்பழுக்கற்றவன், மற்றவர்களை திருத்தி நல்வழிப்பப்படுத்துபவன் என்பதே இலக்கணமாக இருந்து வந்தது. ஆனால் நாயகன், தனக்கு செக்ஸ் சம்பந்தமான நோய் ஒன்று இருப்பதாக வெளிப்படையாக கூறுவதை போன்று இருக்கும் காட்சி, தமிழ் சினிமாவிற்கு புதிதாகவே இருந்தது.
மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் ஸ்வீட் கனவு - விக்ரம் பெருமிதம்!
’இரு கோடுகள்’, ’தாமரை நெஞ்சம்’, ’வெள்ளி விழா’, ’அபூர்வ ராகங்கள்’, ’மூன்று முடிச்சு’ என பல வெற்றி படங்களை கொடுத்து இயக்குனர் சிகரம் என புகழப்பட்ட கே.பாலசந்தர் ஏன் இப்படி ஒரு திரைப்படத்தை எடுத்தார் எனவும் தமிழ் சினிமா உலகில் கேள்விகள் எழுப்பப்பட்டன. தான் இயக்கிய திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களை முற்போக்காகவும் சுய சிந்தனை கொண்ட பெண்களாகவும் படைத்து பல பெண் ரசிகளை கொண்ட பாலசந்தர், பெண்கள் எளிதில் ஆசை வார்த்தைக்கும் பகட்டுக்கும் வரம்பு மீறி விடுவார்கள் என காட்டியது அவரை நோக்கி கேள்வி அம்புகளை பாயச் செய்தது.
சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்... தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!
‘மன்மத லீலை படத்தின் கதையும் காட்சியமைப்புகளும் சினிமா ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தாலும் கவிஞர் கண்ணதாசனின் மனம் மயக்கும் பாடல்கள் சிறிது ஆறுதலை தந்தது என சொல்லலாம். ’ஹலோ மைடியர் ராங் நம்பர்’, ’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ உள்ளிட்ட பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் இந்த
மன்மத லீலையின் இசை ஜாலங்களை பரப்பின.
மன்மத லீலை திரைப்படத்தின் மீது விளாசப்பட்ட விமர்சனங்களும் படத்தின் தோல்வியும், ’சொல்லித் தெரிவதில்லை மன்மத லீலை’ என்பதை இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் உணர்த்தின.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.