Mani Ratnam: இயக்குநர் மணி ரத்னத்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

இயக்குநர் மணிரத்னம்

தோல்வியை எதிர்கொள்ளும் நாகரிகமானமுறை, பேசாமலே அதனை கடந்து செல்வது.

  • Share this:
1. சினிமாவில் பேசாமல் கெட்டவர்கள் யாருமில்லை, பேசிக் கெட்டவர்கள் நிறைய. மணிரத்னம் அதிகம் பேசுவதில்லை. ஒரு படம் எடுத்துவிட்டு முந்நூறு பேட்டிகள் அளிப்பதில்லை. இதனால் ஒரு வசதி. "என்னா பேச்சு பேசினார், படத்தைப் பார்த்தியா பொசுக்குன்னு போயிடுச்சி" என்று யாரும் விமர்சிக்க வர மாட்டார்கள்.

2. படம் ஆரம்பிக்கும் போது பூஜை போடுவதோ, படம் முடிகையில் பூசணிக்காய் உடைப்பதோ இல்லை. உழைப்புக்கான பலன் கிடைக்கப் போகிறது, இதற்கு நடுவில் இடைத்தரகர் எதற்கு என்ற இந்த பாலிசி பயன் தரக்கூடியது. தன்னம்பிக்கை வளரும்.

3. உதவி இயக்குனர்களை மரியாதைக்குறைவாக நடத்துவதோ, சம்பளம் தராமல் தவிக்க விடுவதோ இல்லை. தனியாக படம் இயக்க நினைப்பவர்கள், இயக்குனர் என்ன சொல்வாரோ என்று பயப்பட வேண்டியதில்லை. தனியாக படம் இயக்கப் போவதாகச் சொன்னால், செலவுக்கு பணம் தந்து அவரே வழியனுப்பி வைப்பார். சுசி கணேசன் (பைவ் ஸ்டார்), அழகம் பெருமாள் (டும் டும் டும்) என பல உதவி இயக்குனர்களை சொந்தத் தயாரிப்பில் இயக்குனராக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4. ஒரு படம் தோல்வியடைந்தால் 'கரெக்ட் டைம்ல வரலை', 'இசையமைப்பாளர் சொதப்பிட்டார்', 'ஒழுங்கா யாரும் நடிக்கலை', 'பட்ஜெட் பத்தாமப் போச்சு', 'ரசிகர்களுக்கு படத்தோட அருமை தெரியலை' என அடுத்தவர் தலையில் தோல்வியை தூக்கி வைப்பதில்லை. அது பற்றி பேசுவதும் இல்லை. தோல்வியை எதிர்கொள்ளும் நாகரிகமானமுறை, பேசாமலே அதனை கடந்து செல்வது.

5. தெரிந்த வாழ்க்கை, அறிந்த மனிதர்கள் என்று ஒரே இடத்தில் சுற்றி வருவதை விடுத்து ஒரேயொரு முறையாவது அவுட் ஆஃப் பாக்ஸில் யோசிப்பது. அப்படி யோசித்ததால் கிடைத்தது தான் ரோஜா, பம்பாய், இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் எல்லாம். தஞ்சை பெரிய கோவிலில் டூயட் எடுப்பதை விடுத்து, அந்த கோவிலை எப்படி கட்டியிருப்பார்கள் என்று படம் எடுத்தால், அதுவே அவுட் ஆஃப் பாக்ஸ்.
மணிரத்னத்துக்கு இன்று 65 வது பிறந்தநாள். அவருக்கு நம் வாழ்த்துகள்!



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: