• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Man On Fire - ஆக்ஷன் விரும்பிகளுக்கான விருந்து...!

Man On Fire - ஆக்ஷன் விரும்பிகளுக்கான விருந்து...!

மேன் ஆன் பயர்

மேன் ஆன் பயர்

நெட்பிளிக்ஸில் மேன் ஆன் ஃபயர் தற்போது பார்க்கக் கிடைக்கிறது. ஆக்ஷன் படங்களை விரும்புகிறவர் என்றால் யோசிக்காமல் பார்க்கலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஓடிடி தளங்களால் ஒரு நன்மை, நாம் பார்த்த அல்லது பார்க்க விரும்புகிற பழையப் படங்களை அதிக அளவில் வாங்குகின்றன. சமீபத்தில் மேன் ஆன் ஃபயர் படத்தை நெட்பிளிக்ஸ் தனது தளத்தில் சேர்த்துக் கொண்டது. உலக சினிமா எல்லாம் இல்லை. ஆனால், ஜான் விக், ஈகுவலைசர் போன்ற ஆக்ஷன் படங்கள் பிடிக்கும் என்றால் மேன் ஆன் ஃபயரை கண்டிப்பாகப் பார்க்கலாம். மேலே சொன்ன இரு படங்களின் முன்னோடி இந்தப் படம்.

டென்சல் வாஷிங்டன் ஒரு முன்னாள் சிஐஏ ஏஜென்ட். Trained killer. செய்த கொலைகள் ஏற்படுத்திய குற்றவுணர்வில் உழல்பவர். அதை மறக்க அளவுக்கதிகமாக மது அருந்துகிறவர். அவர் மெக்சிகோவில் உள்ள தனது நண்பரை தேடி வருகிறார். டென்சல் வாஷிங்டன்னின் நிலையை பார்க்கும் அவர், ஒரு வேலை வாங்கித் தருகிறார். ஒரு பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசான பீட்டா என்கிற சிறுமியை பாதுகாக்கும் பாடிகார்ட் வேலை

இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும். உலகில் அதிகளவில் ஆள் கடத்தல் நடக்கும் இடம் மெக்சிகோ சிட்டி. பீட்டாவையும் கடத்த ஒரு கும்பல் திட்டமிட்டிருக்கிறது. யாரை பாடிகார்டாகப் போட்டாலும் அவர்களுக்கு அதிக பணம் தந்து வேலையைவிட்டு போக வைத்துவிடுவார்கள். அப்படியொரு சூழலில் டென்சல் வாஷிங்டன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்குடி, மனஉளைச்சல், தற்கொலை முயற்சி என்று இருக்கும் டென்சல் வாஷிங்டன் ஆரம்பத்தில் பீட்டாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். மெல்ல அவளுடன் இணக்கமாகி, அவளுக்கு நீச்சல் பயிற்சி தருகிறார். எப்படி வெற்றி பெறுவது என்று சொல்லித் தருகிறார். பீட்டா மூலமாக வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படும்போது கடத்தல் கும்பல் டென்சல் வாஷிங்டன்னைச் சுட்டு பீட்டாவை கடத்தி விடுகிறது. பணம் தருவதில் ஏற்பட்ட குளறுபடியில் அந்தக் கும்பல் பீட்டாவை கொன்று விட, காயத்திலுருந்து மீளும் டென்சல் வாஷிங்டன் பீட்டாவின் மரணத்துக்கு காரணமானவர்களை பழி வாங்க கிளம்புகிறார். அவர் ஒவ்வொருவராக கண்டுபிடித்து எப்படி கொலை செய்கிறார் என்பதுதான் கதைஎந்த அலட்டலுமில்லாமல் நிதானமாக சம்பந்தப்பட்டவர்களை சித்திரவதை செய்வதாகட்டும், எவ்வித தயக்கமும் இன்றி கொலை செய்வதாகட்டும், மனிதர் மிரட்டி இருப்பார். ஒரு வணிக சண்டைப் படத்தை இத்தனை அழகாக எடுக்க முடியுமா என்ற பிரமிப்பை இயக்குனர் டோனி ஸ்காட் ஏற்படுத்தியிருப்பார். படத்தின் இசை, கேமரா, எடிட்டிங் அனைத்தும் உலகத்தரம். குறிப்பாக வசனங்கள். ஒரு நபரை கொலை செய்ய, ஒரு வீட்டில் டென்சல் வாஷிங்டன் துப்பாக்கியுடன் காத்திருப்பார். அந்த வீட்டில் இருப்பது, ஒரு வயதான தம்பதிகள். டென்சல் வாஷிங்டன்னிடம் கடவுளின் பெயரைச் சொல்லி மன்னித்து விடலாமே என்பார்கள். அதற்கு, மன்னிப்பதற்கு நான் கடவுளில்லை. கடவுளுக்கும் அவர்களுக்கும் ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமே என் வேலை என்பார். டென்சல் செய்யும் கொலைகள் காவல்துறைக்கு பெரும் தலைவலியாகிவிடும். அப்போது அவரது நண்பர் ஒரு போலீஸ் அதிகாரியிடம் இப்படி சொல்வார். 'டென்சலின் ஆர்ட் மரணம். இப்போது அவர் தனது மாஸ்டர் பீஸை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்'.  படத்தில் பீட்டா என்ற சிறுமியாக நடித்தது. டகோடா பேனிங். நடிப்பில் குட்டி ராட்சஸி. கலக்கியிருந்தார்மேன் ஆன் ஃபயர் 2004 இல் வெளியானது. இதனை இயக்கிய டோனி ஸ்காட் ஏலியன், பிளேட் ரன்னர், தெல்மா அண்ட் லூயிஸ், கிளாடியேட்டர் உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கிய ரிட்லி ஸ்காட்டின் தம்பி. இவரும் சாதாரண ஆளில்லை. டாம் க்ரூஸ் நடித்த டாப் கன், டேய்ஸ் ஆஃப் தண்டர், கிரிம்சன் டைட், தி ஃபேன் என பல முக்கிய படங்களை இயக்கியவர். வில் ஸ்மித் நடித்த எனிமி ஆஃப் தி ஸ்டேட் படமும் இவர் இயக்கியதே. டென்சல் வாஷிங்டன் நடிப்பில் தேஜாவூ, தி டாக்கிங் ஆஃப் பெல்காம் 123, அன்ஸ்டாப்பபிள் என பல படங்கள் இயக்கியுள்ளார். 2012 இல் லாஸ் ஏஞ்சல்ஸின் புகழ்பெற்ற வின்சென்ட் தாமஸ் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரு வெற்றிகரமான இயக்குனர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது.மேன் ஆன் ஃபயர் வெளிவந்த அடுத்த வருடமே (2005) தமிழில் அதனை ஆணை என்ற பெயரில் எடுத்தனர். அர்ஜுன் நமிதா, வடிவேலு, மனோஜ் கே.ஜெயன் என பலரும் ஆணையில் நடித்திருந்தனர். மெக்சிகோ என்ற குற்றங்கள் நிறைந்த கதைக்களமும், சிஐஏ ட்ரெய்ன்டு கில்லர் என்ற கதாபாத்திரமும்தான் மேன் ஆன் ஃபயரை உருவாக்கியது.

Also read... Safe - விறுவிறுப்பான ரோலர் கோஸ்டர் அனுபவம்...!

ஆணையில் அர்ஜுனை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக்கி தமிழ்நாடு பின்னணியில் எடுத்தனர். கதைக்களமும், கதாபாத்திரமும் பொருந்திவராத கதைகளை ரீமேக் செய்யக் கூடாது என்ற படிப்பினைக்கு உதாரணமாக அமைந்தது ஆணை. அதேவருடம் முறைப்படி உரிமை வாங்கி மேன் ஆஃன் ஃபயரை ஏக் ஆஜ்னபி என்ற பெயரில் இந்தியில் எடுத்தனர். அமிதாப்பச்சன் நடித்திருந்தார். பாங்காங்கை கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது

நெட்பிளிக்ஸில் மேன் ஆன் ஃபயர் தற்போது பார்க்கக் கிடைக்கிறது. ஆக்ஷன் படங்களை விரும்புகிறவர் என்றால் யோசிக்காமல் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: