தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் ஆயிரமாயிரம் சிறகுகளை தமிழ் இசை ரசிகர்களிடம் பறக்க செய்த மலேசியா வாசுதேவனின் நினைவு நாளான இன்று அவரின் இசைப் பயணம் பற்றி பார்க்கலாம்.
அனேகம் பேரின் கனவுகளுக்கு கதவு திறந்துவிட்ட ’16 வயதினிலே’ திரைப்படம் மலேசியா வாசுதேவனுக்கும் கதவு திறந்துவிட்டது. இத்திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய ‘செவ்வந்திப் பூ முடிச்ச’ பாடலும், ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..’ பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பின் செவ்வந்திப்பூ தூவி மலேசியா வாசுதேவனை அள்ளிக்கொண்டது இசையுலகமும் திரையுலகமும்.
80-களின் இசை பிரியர்கள் வானொலியில் காலை எட்டரை மணிப் பாடல்களின்போது. 'கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ...?' என்ற காலை பாடலையும், மாலையில் வானொலியின் மற்றொரு அலைவரிசையில் 'வான் மேகங்களே... வாழ்த்துகள் பாடுங்கள்...' என்னும் ஏகாந்த பாடலையும் கேட்டு பாட்டுடை தலைவனாக்கினர் மலேசியா வாசுதேவனை.
‘என்னுயிர்த்தோழன்’ திரைப்படத்தில் ‘குயிலுக்குப்பம்’, ‘ஹே ராசாத்தி ராசாத்தி ராசாத்தி’ பாடலையும் சிகப்பு ரோஜாக்களில் 'இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது...', நிறம் மாறாத பூக்களில் 'ஆயிரம் மலர்களே மலருங்கள்...', என்று தொடர்ந்து தனது படங்களில் மலேசியா வாசுதேவனின் குரலை இசையின் ராஜாங்கத்தில் பதிய வைத்தார் பாரதிராஜா.
’மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் வந்த ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலின் சரணத்தில் வரும் ‘மந்தாரைச் செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடுநேரம்’ போன்ற இடங்களில் அசாதாரணமான ஒரு குரலருவியை கொட்டி இன்றும் அப்பாடலை ரசிக்க செய்தார்.
வெள்ளை ரோஜா, படிக்காதவன், முதல் மரியாதை போன்ற திரைப்படங்களின் பாடல்கள் மூலம் சிவாஜியின் குரல் ஆனார் மலேசியா வாசுதேவன். படிக்காதவனின் ‘ஒரு கூட்டுக்கிளியாக’ மற்றும் முதல் மரியாதையின் ‘வெட்டி வேரு வாசம்’ பாடல்கள் கேட்போர் இதயங்களை இதமாக்கியது.
’பன்னீர் புஷ்பங்களின் ‘கோடை கால காற்றே’, சாதனை திரைப்படத்தில் ’இங்கே நான் கண்டேன் கதை நாயகி’, ‘கோழிகூவுது படத்தில் ‘பூவே இளையபூவே’, அடுத்தவாரிசில் ‘ஆசை நூறுவகை’, நண்டு படத்தில் ‘அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா’ போன்ற பாடல்கள் மலேசியா வாசுதேவனின் மாஸ்டர் பீஸ்களாகின.
மலேசியா வாசுதேவன் எப்போதும் நினைவு கூரப்படுபவர் என்பதை இன்றும் பூங்காற்றில் மிதந்து வரும் அவரது பாடல்கள் சொல்லிக் கொண்டுதானிருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.