Home /News /entertainment /

மின்னல் முரளி படம் எப்படி இருக்கு?

மின்னல் முரளி படம் எப்படி இருக்கு?

மின்னல் முரளி

மின்னல் முரளி

Minnal Murali Movie Review : அப்பாவின் டெய்லர் கடையை நிர்வகித்து வரும் ஜெய்சனுக்கு அமெரிக்கா சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை.

மின்னல் முரளி மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்பதால், படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. அமெரிக்க தடபுடல் சூப்பர் ஹீரோ ஃபார்முலாவை அடித்து நொறுக்கி புதியதொரு இலக்கணம் எழுதியிருக்கிறார்கள்.

அப்பாவின் டெய்லர் கடையை நிர்வகித்து வரும் ஜெய்சனுக்கு அமெரிக்கா சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை. அவன் காதலித்த பெண் வேறொருவனை திருமணம் செய்ய அந்த வேதனையும் சேர்ந்து கொள்கிறது. அதே கிராமத்தில் டீக்கடையில் வேலை செய்கிறவன் ஷிபு. அவனுக்கு உஷா என்ற பெண்ணின் மீது தீராக்காதல். ஆனால், உஷா வேறொருவனுடன் ஓடிப்போய் விட, அவள் நினைவாக வாழ்ந்து வருகிறான். ஒரு நாள் ஒரே சமயத்தில் ஜெய்சனையும், ஷிபுவையும் மின்னல் தாக்குகிறது. ஆச்சரியமாக உயிர் பிழைக்கிற அவர்களுக்கு போனசாக சூப்பர் பவரும் கிடைக்கிறது.

அந்த சக்தியை வைத்து தனக்கு தொல்லை தரும் சப் இன்ஸ்பெக்டரை வெளுத்துவிட்டு, மின்னல் முரளி என்று எழுதிவிட்டுப் வருகிறான் ஜெய்சன். அதேநேரம் ஷிபு கணவனை பிரிந்து வரும் தனது காதலியின் மகளின் மருத்துவச் செலவுக்காக வங்கியை தனது சக்தியை பயன்படுத்தி கொள்ளையடிக்கிறான். இந்த இரண்டு வேலைகளையும் செய்தது மின்னல் முரளி என போலீசார் அறிவிக்க, ஷிபு மின்னல் முரளியின் பெயரில் செய்யும் தவறுகள் ஜெய்சனை துரத்த ஆரம்பிக்கின்றன. தனது பெயரில் இதனை செய்வது யார் என்று தேட ஆரம்பிக்கிறான் ஜெய்சன். அவன் ஷிபுவை கண்டுபிடித்தானா? அவனது அழிவு வேலைகளை ஜெய்சனால் தடுக்க முடிந்ததா என்பதை மின்னல் முரளி சொல்கிறது.

வெகுளியான ஜெய்சன் என்ற இளைஞனாக டொவினோ தாமஸ் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார். தனக்கு கிடைத்த சக்தியை அவர் சோதித்துப் பார்க்கும் இடங்கள் சுவாரஸியமானவை. ஜெய்சனின் அக்கா மகனாக வருகிற அந்த குட்டிப் பையன் நல்ல காமெடி காம்பினேஷன்.

also read : பாரம்பரிய உடையில் திருப்பதி சென்ற ஜான்வி கபூர் - வைரலாகும் படங்கள்

ஜெய்சனைவிட படத்தில் நம்மை கவர்கிறவர் ஷிபுவாக வரும் குரு சோமசுந்தரம். அவருக்கு இது முதல் மலையாளப் படம். அவரே டப்பிங் பேசியிருக்கிறார். அதிகம் அல்ட்டாத உடல் மொழியில் அவரது பார்வையே பலதும் பேசுகிறது. காதலியை திருமணம் செய்ய தடையாக இருக்கும் அவளது அண்ணனை கொலை செய்துவிட்டு, "தீப்பிடிச்சிது... நாட்டுக்காரே... ஓடிவரணே..." என அவர் சொல்லும் இடம் கிளாஸ்.

ஜெய்சன், ஷிபு கதாபாத்திர வடிவமைப்புக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள். அடிப்படையில் நல்லவனான ஷிபு கொஞ்சம் கொஞ்சமாக தீமையை நோக்கிச் செல்லும் காரணத்தை அழுத்தமாக பதிவு செய்திருப்பது திரைக்கதைக்கு வலிமை சேர்த்திருக்கிறது. சப் இன்ஸ்பெக்டராக வரும் பைஜு, ஜெய்சனின் அக்கா கணவராக ஏட்டு கதாபாத்திரத்தில் வரும் அஜு வர்க்கீஸ், டாக்டராக வரும் மம்முக்கோயா என திறமையான நடிகர்கள் தங்களுக்குரிய பங்களிப்பை செய்திருக்கிறhர்கள். நகைச்சுவை வேடத்தில் பார்த்துப் பழகிய ஹரிஸ்ரீ அசோகனுக்கு சோகமே வடிவான கதாபாத்திரத்தை தந்திருக்கிறார்கள். நாயகி என யாரும் இல்லை. கராத்தே டீச்சராக வருகிற பெமினா ஜார்ஜ் அந்த இடத்தை ஓரளவு நிரப்புகிறார்.

also read :பொன்னியின் செல்வன் படம் குறித்த புதிய அப்டேட்..

இதுவரை சூப்பர் ஹீரோக்களுக்கு சொல்லப்பட்டு வந்த இலக்கணங்களை தகர்த்து கிராமத்துப் பின்னணியில் மாடிக்கு மாடி தாவாத யதார்த்த சூப்பர் ஹீரோவை படைத்ததற்கு இயக்குனர் பஷில் ஜோசப்புக்கும், திரைக்கதையாசிரியர்கள் அருண் அனிருத்தன், ஜஸ்டின் மேத்யூ ஆகியோருக்கும் ஒரு சபாஷ். சமீர் தஹிரின் கேமரா நிறைவான அனுபவத்தை தருகிறது. கதையோட்டத்தை பாதிக்காத பிண்ணி இசையை தந்திருக்கிறார் சுஷின் ஷ்யாம்.

அழுத்தமான கதையிருந்தால் சூப்பர் ஹீரோக்களை லுங்கியில்கூட உலவவிடலாம் என்று பிரமாண்ட இயக்குனர்களுக்கு வகுப்பெடுத்திருக்கிறது மின்னல் முரளி. கண்டிப்பாக பார்க்கலாம்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Malayalam actor, Movie review

அடுத்த செய்தி