கட்டுக்குள் வராத கொரோனா - ஹைதராபாத்துக்கு மாறும் மலையாள சினிமா படப்பிடிப்புகள்

பிரித்விராஜ் - மோகன்லால்

மோகன்லாலின் மகன் பிரணவ், ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி இணைந்து நடிக்கும் ஹிருதயம் படத்தின் வேலைகளும் ஹைதராபாத்தில் நடக்கின்றன.

  • Share this:
    கொரோனா இரண்டாம் அலை கேரளாவில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. நேற்றைய தொற்றுப் பாதிப்பு பதினான்காயிரத்துக்கும் மேல். இந்தியாவில் இதுவே அதிகம். ஊரடங்கு தொடர்கிற நிலையில், மலையாள சினிமா படப்பிடிப்புகளை ஹைதராபாத்துக்கு மாற்றியுள்ளனர்.

    மோகன்லாலின் மரக்கார் - அரபிக்கடலின்டெ சிம்ஹம் திரைப்படம் ஓணத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, திரைக்கு வரும், மூன்று வாரங்களுக்கு இந்தப் படம் மட்டும் கேரளாவின் 600 திரையரங்குகளில் திரையிடப்படும், வேறு படங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஆர்ப்பாட்டமாக அறிவித்தனர். ஆனால், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் திரையரங்குகள் அடுத்த மாதம் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதேபோல், ஜீத்து ஜோசப்பின் டுவெல்த் மேன் படத்துக்கு அரங்கு அமைத்தனர். படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்பதால், அந்தப் படத்தை விட்டு, பிருத்விராஜின் 'ப்ரோ டாடி'யில் நடிக்க முடிவு செய்துள்ளார் மோகன்லால். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நாளை தொடங்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மோகன்லாலின் மகன் பிரணவ், ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி இணைந்து நடிக்கும் ஹிருதயம் படத்தின் வேலைகளும் ஹைதராபாத்தில் நடக்கின்றன. வினீத் சீனிவாசன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இவை தவிர மேலும் 7 மலையாளப் படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடப்பதாக மலையாள சினிமா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 74 தினங்கள் அங்கு படப்பிடிப்பு அனுமதிக்கப்படவில்லை. உடனடியாக படப்பிடிப்புக்கு அனுமதி தர வேண்டும் என்று மலையாள திரையுலகினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அண்ணாத்த உள்பட தமிழின் முக்கிய திரைப்படங்கள் பலவும் ஹைதராபாத்தில்தான் படப்பிடிப்பை நடத்தின, நடத்த இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: