தென் இந்திய இசை கம்பெனிகள் சங்கத் தலைவராக இருந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிரான புகாரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெமினி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜெமினி ஆடியோ மற்றும் ஜெமினி எண்டர்டெய்ன்மெண்ட் மொபைல் இந்தியா சர்வீசஸ் என்ற நிறுவனம், தென் இந்திய இசை கம்பெனிகள் சங்கத்துடன் 2012ல் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
அதன்படி சங்க உறுப்பினர்களாக உள்ளவர்களின் இசையின் உரிமம் வழங்குவது தொடர்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் கட்டமாக 2 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்கிய ஜெமினி நிறுவனம், குறிப்பிட்ட காலத்தில் பாக்கி தொகையை செலுத்தவில்லை. அதனால் இந்த ஒப்பந்தம் தானாக ரத்தானது.
இந்நிலையில், இசை உரிமத்தை வழங்காததுடன், வாங்கிய பணத்தை திருப்பித்தரவில்லை எனவும், பணத்தை கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, தென் இந்திய இசை கம்பெனிகள் சங்கத்தின் தலைவராக இருந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுக்கு எதிராக ஜெமினி நிறுவனம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தது.
Also read... தமிழ் சினிமாவில் களைக்கட்டிய ரெய்டு காட்சிகள்!
புகார் மனுவை கோப்புக்கு எடுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சுதா ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், 2015ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், உரிமையியல் பிரச்னை தொடர்பான இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் எனக் கூறி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.