Home /News /entertainment /

Rocketry Movie Review | மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி படம் எப்படி இருக்கு?

Rocketry Movie Review | மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி படம் எப்படி இருக்கு?

ராக்கெட்ரி

ராக்கெட்ரி

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை மையமாக கொண்டு மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள  'ராக்கெட்ரி நம்பி விளைவு' திரைப்படம்  வெளியாகியுள்ளது. படம் சொல்லும் விஷயம் என்ன என்பதை தொகுப்பக பார்க்கலாம்.

இந்தியாவின் சொந்த ராக்கெட்டை விண்ணில் ஏவும் கனவை நெஞ்சில் சுமந்த ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையையும், அவர் சந்தித்த விளைவையும் பதிவாக கொண்டதே ராக்கெட்ரி நம்பி விளைவு.  ஒரு சாதனைக்குரிய நாளில் நாடே கொண்டாட வேண்டிய விஞ்ஞானி நம்பி நாராயணன் காவல் துறையால் கைது செய்யப்படுகிறார். அவரின் குடும்பம் சமூகத்தால் அவமானப்படுத்தப்படுகிறது. அதற்கு முன் என்ன நடந்தது? அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்ற கோள்வியுடன் படம் தொடங்குகிறது.

விக்ரம் சாராபாயின் சிஷ்யர்களாக நம்பி நாராயணன், அப்துல்கலாம் உள்ளனர். அதில் நம்பி, Liquid Fuel எஞ்சின் தயாரிப்பை முன்னெடுக்கிறார். மேலும் நாசா Fellowship  வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் உலகின் தலை சிறந்த பேராசிரியர் Luigi Crocco-விடம் பயிற்சி பெறுகிறார். நாசாவில் பெரும் சம்பளத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நம்பி Isro-விற்கு தேவை என விக்ரம் சாராபாய் அழைக்கிறார். அதிக சம்பளத்தில் வேலையா அல்லது தாய் நாட்டிற்கான சேவையா என்ற கட்டத்தில் இந்தியா திரும்பிகிறார் நம்பி நாராயணன்.

இதற்குபின் அவர் செய்த பல செயல்கள் சினிமாக்களில் வரும் நாயகர்களுக்கான காட்சிகளில் கூட நடக்காது. அவ்வளவு மாஸ் சம்பவங்களை மிக சாதாரணமாக கடந்துள்ளனர். இந்தியா விஞ்ஞானத்தில் வளர்ச்சியடைய துடிக்கும் காலகட்டம். குறைந்த தொகையை கொண்டு எப்படியாவது ராக்கெட் எஞ்சினை கண்டுபிடிக்க வேண்டும் என்று கனவு காணுகிறார் நம்பி. அதற்காக இந்திய விஞ்ஞானிகளை அழைத்துக்கொண்டு பிரான்ஸ் செல்கிறார். அங்கு உருவாக்கப்படும் எஞ்சின் தொழில்நுட்பத்தை அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கே  தெரியாமல் கற்றுக்கொண்டு இந்தியா திரும்பும் காட்சிகள் நினைத்து பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.

விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல’ பாடலின் வீடியோ ரிலீஸ்… வெளியான மாஸ் அப்டேட்

தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டாலும் சொந்த எஞ்சினை தயாரிக்க ஆண்டுகள் பல ஆகின்றன. மேலும் ஒரு கோடி ரூபாய் மட்டுமே அரசிடம் இருந்து கிடைக்கிறது. அதில் 60 லட்சம் மட்டும் செலவழித்து Liquid Fuel எஞ்சினை நம்பி கண்டுபிடிக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் பல நூறு கோடிகளை செலவழித்து கண்டுபிடித்ததை மிக மிக குறைந்த செலவில் சாத்தியமாக்கி சாதனை படைக்கிறார்.

இதை தொடர்ந்து Cryogenic எஞ்சின் பக்கம் திரும்புகிறார் நம்பி. அதற்காக இந்திய அரசாங்கத்தின் உதவியுடம் ரஷ்யாவில் இருந்து நான்கு எஞ்சின்களை வாங்க ஒப்பந்தம் போடப்படுகிறது. இது சாத்தியமானால் இந்தியா Satellite Market -ல் நுழைந்துவிடும் என்று என்னும் அமெரிக்கா எஞ்சினை கொடுக்க கூடாது என ரஷ்யாவை மிரட்டுகிறது. அதை மீறி எஞ்சினை நம்பி எப்படி இந்தியாவிற்கு கொண்டு வந்தார் என்ற காட்சிகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பின் நடக்கும் சம்பவங்கள் நம்பியின் வாழ்கையை புரட்டிப்போடுகிறது. Isro அமைப்பிற்கு இயக்குனராக வேண்டிய நம்பி என்ன ஆனார்? வாழ்க்கை எப்படி தடம் புரண்டது. அதற்கு பின்னால் இருந்த சதியை வென்றாரா என்பது மீதிகதை.நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டதை அப்போதைய கேரள அரசும், காவல் துறையும் தங்கள் பிரச்னைகளை தடமாற்ற பயன்படுத்திகொண்டன என விமர்சித்துள்ளனர். அதேபோல் ஒரு செய்தியை நம்பி ஒரு குடும்பத்தை சமூகம் எப்படி பார்க்கிறது. அவர்களை எவ்வாறெல்லாம் நடத்துகிறார்கள். அவரே நிரபராதி என நீதிமன்றம் கூறிய பிறகு உடனடியாக தங்கள் பார்வையை மாற்றுவது போன்ற காட்சிகள் மக்களிடமும் சில கேள்விகளை எழுப்புகின்றன.

ராக்கெட்ரி படத்தின் முதல் பாதி முழுவதும் ராக்கெட் எஞ்சின் பற்றியே நகர்கிறது. கதாபாத்திரங்கள் பேசிகொள்ளும் வசனங்கள் கடைகோடியில் இருக்கும் ரசிகருக்கு புரியுமா என்பது கேள்விகுறி. நம்பியின் வாழ்க்கை பயணம் சாதனை பெரியது என்பதால் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்காட்லாந்து, ரஷ்யா என பல நாடுகளுக்கு பயணிக்கிறது கதை. அதன் காரணமாக பல சம்பவங்கள் சில காட்சிகளுடன் மட்டும் கடந்து செல்கின்றன. அதனால் அந்த காட்சிகளின் தாக்கம் குறைவாக உள்ளதோ என்று தோன்றுகிறது.

இரண்டாம் பாதியில் நம்பி கைதுக்கு பின் நடந்த சம்பவங்களை உணர்வுபூர்வமாக கூற மாதவன் முயற்சித்துள்ளார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். குறிப்பாக படத்தில் இடம்பெறும் வசனங்கள் நம்பியின் வாழ்க்கையை அழுத்தமாக கூற உதவியுள்ளது. அதிலும் "ராக்கெட் கவிழ்ந்தால் எப்படி React  பண்ணும்னு தெரிந்த எங்களுக்கு, மனிதர்கள் கவிழ்ந்தால் என்ன பண்ணவேண்டும் என்பது தெரியவில்லை",  "நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?" என்ற வசனங்கள் கைதட்டல் வாங்குகின்றன.

உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கமர்ஷியல் விஷயங்களை எந்த சமரசமும் இல்லாமல் தவிர்த்துவிட்டார் இயக்குநர் மாதவன். எனவே படம் மெதுவாக செல்வது போன்ற உணர்வை கொடுக்கும். ஆனால் பார்வையளர்களை கதையில் இருந்து வெளியே கொண்டுவரவில்லை.

அதேபோல் படத்தில் இடம்பெற்ற பஞ்சாங்கம் குறித்த வசனங்கள் Mute செய்யப்பட்டுள்ளன. அது சமீபத்தில் எழுந்த சர்ச்சையின் காரணமாக நீக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நம்பியாக நடித்துள்ள மாதவன் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. அதுவும் உடல் எடையை கூட்டி குறைத்து நடித்துள்ளார். மேலும் மேக்கப் இல்லாமல் தலை முடி தாடியை இயற்கையாகவே நரைக்க வைத்து நடித்திருக்கிறார். அவரை போலவே சிறப்பு தோற்றத்தில் வரும் சூர்யவும், நம்பி மனைவியாக வரும் சிம்ரனும் நேர்த்தியாக நடித்துள்ளனர். அத்துடன் ராக்கெட்ரி படத்திற்கு சாம்.சி.எஸ் இசை வலு சேர்த்துள்ளது.

பெரும் சாதனைக்காக கொண்டாடப்பட வேண்டிய விஞ்ஞானி வாழ்க்கை பயணம் எப்படி உள்ளது? அவரை அந்த நிலைக்கு ஆளாக்கியவரின் வாழ்க்கை எப்படி உள்ளது என்ற காட்சியுடன் ராக்கெட்ரி படத்தை முடித்துள்ளார் மாதவன்.
Published by:Vijay R
First published:

Tags: Actor Madhavan, Movie review

அடுத்த செய்தி