Home /News /entertainment /

இனி அதிக தொலைவில்லை ஆஸ்கர் - கவிஞர் வைரமுத்து

இனி அதிக தொலைவில்லை ஆஸ்கர் - கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

விரைக தமிழர்களே. இனி அதிக தொலைவில்லை ஆஸ்கர் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று சிறந்த படங்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இம்முறை திரையிட்ட படங்களில் சிறந்த படமாக என்றாவது ஒருநாள் படம் தேர்வாகி தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்தது.

    வெற்றி துரைசாமி எழுதி, இயக்கி, தயாரித்த இந்தப் படத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். விழாவில் இயக்குநர் வெற்றி துரைசாமிக்கு விருதும் சான்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. நமது தமிழ் திரைப்படங்கள் இப்படியான அங்கீகாரத்தைப் பெறுவதென்பது இனிவரும் கலைஞர்களுக்கு பெரும் படைப்பூக்கத்தை கொடுக்கும் என்பதில் மாற்றமில்லை.

    இயக்குநர் வெற்றி துரைசாமி பேசும்போது, “இந்தப்படம் சிறந்த படம். சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகை என வெவ்வேறு பிரிவுகளில் இதுவரை 33 விருதுகளைப் பெற்றிருக்கிறது. இப்படி உலகத்திரைப்பட விழாக்களில் 33 சர்வதேச விருதுகளை வென்றிருந்தாலும் நமது சென்னையில் நடைபெற்ற திரைப்படவிழாவில் விருது பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

    இரண்டாவது சிறந்த படமாக ‘சீயான்கள்’ திரைப்படம் தேர்வானது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கரிகாலனும், இயக்குநர் வைகறைபாலனும் தலா ரூ.1 லட்சம் பரிசு பெற்றனர். இதுதவிர விருமாண்டி இயக்கத்தில் வெளியான க/பெ.ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காக சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராஜேஷூக்கு கிடைத்தது.

    இந்த 3 படங்களையும் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கும் வைரமுத்து,

    “என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’,
    'சீயான்கள்’ - ஆகிய திரைப்படங்கள்
    சர்வதேச விருது கொண்டது
    பெருமிதம் தருகிறது.

    முதலிரு படங்களுக்கு
    நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது
    பரவசம் தருகிறது.

    விரைக தமிழர்களே!
    இனி
    அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்” என்று கூறியுள்ளார்.



    வைரமுத்து இப்படி கூறியிருக்கும் அதேவேளையில் ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வான 366 படங்கள் கொண்ட இறுதி பட்டியலில் ‘சூரரைப்போற்று’ படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய 3 பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்பட்டியலை விரைவில் ஆஸ்கர் குழுவினர் அறிவிப்பார்கள்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Kollywood, Oscar Awards, Vairamuthu

    அடுத்த செய்தி