கவிஞர்கள் உணர்ச்சியால் நிரம்பியவர்கள். உணர்ச்சி மேலிட அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அர்த்தம் கற்பிப்பது அபத்தமாகிவிடும். கண்ணதாசனிடம் இருந்த முரண்களை ஒருவர் இதனடிப்படையில்தான் அணுக வேண்டுமே தவிர, அவரது பேச்சை, விமர்சனத்தை, நிலைப்பாட்டை சரித்திரப்பூர்வமாக அணுகினால் உண்மை ஓடி ஒளிந்து கொள்ளும்.
திராவிட சித்தாந்தத்தில் இருந்த கண்ணதாசன் காங்கிரஸிற்கு தன்னை மாற்றிக் கொண்டார். அதற்கு பெருந்தலைவர் காமராஜர் முக்கிய காரணம். அவரை ஒரு அரசியல் தலைவர் என்பதற்கு மேலாக கண்ணதாசன் மதித்தார், மரியாதை செய்தார். காங்கிரஸில் அணுக்கமாகி, பிறகு அதிலிருந்து விலகி, மீண்டும் அங்கு அடைக்கலமானார் கண்ணதாசன். இந்த மறு ஒன்றிப்பிற்கு அவர் பாடல்வரிகளை தூதாக அனுப்பினார்.
தனது அன்றாட வாழ்க்கை அனுபவங்களை திரைப்படப் பாடல்களில் எழுதி, அவற்றை அர்த்தமுற செய்வதில் கண்ணதாசனுக்கு நிகர் வேறில்லை.
அண்ணன் என்னடா தம்பி என்னடா.. என்ற புகழ்பெற்ற பாடல் வரிகள் அவரது சொந்த ஏமாற்றங்களிலிருந்து பிறந்தவை. அதைப்போல் எத்தனையெத்தனை பாடல்கள். காங்கிரஸில் மறுபடியும் இணைவதற்கு கண்ணதாசன் தீர்மானித்த போது, பட்டணத்தில் பூதம் படத்திற்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார். அதில் ஒரு காட்சியில் ஜெய்சங்கர் கே.ஆர்.விஜயாவின் பிறந்தநாளுக்கு அவரது அழைப்பின் பேரில் செல்வார். பெரிய பார்ட்டி நடக்கும். அதில் கே.ஆர்.விஜயா ஒரு பாடல் பாட வேண்டும். இதுதான் சிச்சுவேஷன். கே.ஆர்.விஜயா ஜெய்சங்கர் மீது இருக்கும் காதலை முன்வைத்து பாடுவது போல் பாடல் வரிகள் இருக்க வேண்டும்.
இயக்குனர் எம்.வி.ராமன் சிச்சுவேஷன் சொல்லி, இசையமைப்பாளர் டி.கோவிந்தராஜன் சிறப்பான டியூன் ஒன்றையும் போட்டுக் கொடுத்தார். அதற்கேற்ப பாடல் எழுதினார் கண்ணதாசன். 'சிவகாமி மைந்தனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி.. வேறு எவரோடும் நான் பேசவார்த்தை ஏதடி, வேலன் இல்லாமல் தோகை ஏதடி..' என்ற சரணம், ஒரு பெண் தனது காதலனை நினைத்துப் பாடுவதாகவும் இருக்கும். அதேநேரம், காமராஜரின் அம்மா பெயர் சிவகாமி. அந்த சிவகாமியின் மகன் காமராஜரின் காங்கிரஸில் இணைய வேண்டும் என்பதை மறைமுகமாக குறிப்பிடுவதாகவும் இருக்கும். வழக்கம்போல் பாடல் வரிகளில் கண்ணதாசன் களிநடனம் புரிந்திருப்பார்.
அந்த முழுப்பாடல்...
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி,
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி, ( 2)
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி,
வேலன் இல்லாமல் தோகை ஏதடி.., ( 2)
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி,
என்னைச், சேரும் நாள் பார்க்கச் சொல்லடி,
கண்கள், சரவணன், சூடிடும் மாலை,
கன்னங்கள் வேலவன், ஆடிடும் சோலை..( 2)
பெண் என பூமியில், பிறந்த பின்னாலே,
வேலை வணங்காமல் வேறேன்ன வேலை ( 2)
நெஞ்சே, தெரியுமா.., அன்றொரு நாளிலே,
நெஞ்சே, தெரியுமா.., அன்றொரு நாளிலே,
நிழலாடும், விழியோடும், ஆடினானே,
அன்று நிழலாடும், விழியோடும் ஆடினானே.., என்றும், கண்ணில், நின்றாடச் சொல்லடி,
ஆண்:- ஓ.., ஓகொகொ..., ஓ.., ஓகொகொ.., பெண்:- ஆகாகா.., ஆககா.., ஆஆஆ..,
ஆண்:- மலையின் சந்தனம், மார்பினில் சொந்தம், மங்கையின் இதயமோ, காளையின் சொந்தம், ( 2)
பெண்:- நிலையில் மாறினால், நினைவும் மாறுமோ, நெஞ்சம் நெருங்கினால், பேதங்கள் தோன்றுமோ, ( 2)
ஆண்:- காலம் மாறினால், காதலும் மாறுமோ,
காலம் மாறினால், காதலும் மாறுமோ,
பெண்:- மாறாது, மாறாது, இறைவன், ஆணை,
இருவரும்:- என்றும், மாறாது, மாறாது, இறைவன் ஆணை,
ஆண்:- இந்த சிவகாமி மகனுடன்.., இந்த சிவகாமி மகனுடன், சேர்ந்து நில்லடி.., இன்னும், சேரும் நாள், பார்பதென்னடி..,
வேறு எவரோடும்.., நான் பேச.., வார்த்தை ஏதடி..,
தோகை இல்லாமல், வேலன் ஏதடி..,
பெண்:- ஆகாகா.., ஆககா.., ஆஆஆ.., அந்த.., சிவகாமி.., மகனிடம்..,
சிவகாமி.., மகனிடம்.., அந்த சிவகாமி, மகனிடம்.., சேதி.., சொல்லடி.., என்னைச்.., சேரும்.., நாள்.., பார்க்கச்.., சொல்லடி..!.
இந்தப் பாடலைப் பார்க்கும் ரசிகர்களுக்கு காதல் பாடல் போலவே இருக்கும். அதைத்தாண்டி அரசியல் தெரிந்தவர்களுக்கு அரசியல் பாடலாகவும் இருக்கும். இந்தப் பின்னணியை தொடந்து கொண்டு, சிவகாமியின் மைந்தன் பாடலை கேட்டால் யாருக்கும் ஒருகணம் முகத்தில் புன்னகை பூக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Classic Tamil Cinema, Tamil Cinema